மும்பை: “ராமாயணம் ஒவ்வொருமுறையும் புதிய ஞானத்தையும், அறிவையும் நமக்கு வழங்குகிறது” என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு பிரமாண்டமாக உருவாக உள்ள படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார் கன்னட நடிகர் யஷ். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நமக்கு ராமாயணம் நன்றாக தெரியும் என்று நம்புகிறோம். இருப்பினும், அது ஒவ்வொரு முறையும் புதிய ஞானத்தையும், அறிவையும் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கிக் கொண்டேயிருக்கிறது.
காலத்தால் அழியாத இந்த காவியத்தை வெள்ளித்திரையில் கொண்டுவருவதே எங்களின் நோக்கம். இப்படம் பிரமாண்டமான காட்சி அமைப்புகளுடன் மிகப் பெரிய அளவில் உருவாக உள்ளது. அதேசமயம் உண்மைத் தன்மையுடனும் கதைக்கு நேர்மையாகவும் படத்தை உருவாக்க உள்ளோம். உணர்வுகளுக்கு மதிப்பளித்து படம் உருவாக்கப்பட உள்ளது. ராமாயணத்தை உலகத்துடன் பகிர்ந்துகொள்ளும் பயணம் இது.
ராமாயணம் ஒரு கதையாக என்னுள் ஆழமாக எதிரொலிக்கிறது. அது தான் என்னை தயாரிப்பாளராகவும் ஆக்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தூண்டும் ஓர் இந்திய திரைப்படத்தை உருவாக்க உள்ளோம். இதில் தயாரிப்பாளராக இணைந்தது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை 3 பாகங்களாகத் திரைப்படமாக இயக்க இருக்கிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யஷ்ஷும் நடிக்க இருக்கின்றனர். சீதையாகச் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளரான ஹான்ஸ் ஸிம்மர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.