Dhoni: "தோனியை மீட் பண்றது அதிசயம் தான். இதை திடீர்னு கிடைச்ச யோகம்னு நினைக்கிறதா?" – ரேவதி பாட்டி

Estimated read time 1 min read

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிறகடிக்க ஆசை’. இந்தத் தொடரில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ரேவதி. சிறு வயதில் திரைத்துறையில் கவனம் செலுத்தியவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுத்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில்  `மெளன ராகம்’ தொடரில் பாட்டியாக நடித்தார். தொடர்ந்து `தமிழும் சரஸ்வதியும்’ தொடரிலும் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனியுடன் சேர்ந்து இவர் நடித்திருந்த விளம்பரம் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வந்த நிலையில் அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

ரேவதி

“தமிழும் சரஸ்வதியும் தொடர் எனக்கு நல்லதொரு அடையாளத்தைக் கொடுத்துச்சு. ஆனா, சிறகடிக்க ஆசைக்குப் பிறகு பயங்கர ரீச் ஆகிட்டேன். தெருவுல நடந்து போக முடியல. அந்த அளவுக்கான ரீச் கிடைச்சிருக்கு. தமிழும் சரஸ்வதியும் பண்ணும்போது டைரக்டர் அடுத்த சீரியலில் ஒரு நல்ல கேரக்டர் இருக்குன்னு சொன்னார். எந்த சீரியல்னாலும் பாட்டி கேரக்டரில் தான் நடிக்கப் போறோம்னு தான் நினைச்சிருந்தேன். முதல் நாள் ஷூட்டிங்கில் என் பேரன் என்னைத் தூக்கி சுத்துற மாதிரி சீன் எடுத்தாங்க. அந்தப் பையன் வேகமா தூக்கி சுத்திட்டாரு. எனக்கு கண்ணெல்லாம் சொருகிடுச்சு. அப்புறம்தான் இந்தக் கேரக்டர் மற்ற கேரக்டர் மாதிரி இல்ல.. சுறுசுறுப்பா இருக்கிற மாதிரியான கேரக்டர்னு புரிஞ்சது. சக்திவேல், பாக்கியலட்சுமினு எந்தத் தொடராக இருந்தாலும் அதுல என் கேரக்டர் எதுவும் ஒண்ணு போல இல்ல. எல்லா கேரக்டரும் வித்தியாசமா இருக்கு… அதனால ஒவ்வொரு கேரக்டரையும் விரும்பி புரிஞ்சுகிட்டு ஜாலியா பண்ணிட்டு இருக்கேன்!” என்றவரிடம் தோனியுடன் நடித்த விளம்பரம் குறித்துக் கேட்டோம்.

“ஆடிஷன் முடியுற வரைக்கும் நான் செலக்ட் ஆவேன்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. ஏன்னா நிறைய ஆடிஷன் பண்ணி நல்ல, நல்ல கம்பெனியெல்லாம் மிஸ் ஆகியிருக்கு. பலர் ஆடிஷன் கொடுப்பாங்க. அதுல நம்ம செலக்ட் ஆகுறது கஷ்டம்தான். ஆனாலும் யாராவது ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்கன்னா அதை தவிர்க்காம பண்ணுவேன். அப்படித்தான் இந்த விளம்பரத்துக்கும் ஆடிஷன் கொடுத்தேன். நைட் பத்து மணிக்கு ஃபோன் பண்ணி செலக்ட் ஆகிட்டேன்னு சொன்னாங்க.

ரேவதி

வீட்ல சொன்னதும் எல்லாரும் நான் தான் உங்க கூட அசிஸ்டென்ட் ஆக வருவேன்னு சொன்னாங்க. அப்பதான் இது இவ்ளோ பெரிய விளம்பரம்னே எனக்குத் தெரிஞ்சது. தோனியை மீட் பண்றது அதிசயம் தான். இதை திடீர்னு கிடைச்ச லக்னு நினைக்கிறதா? என்னவாக நினைக்கிறதுன்னே எனக்குத் தெரியல!

“தோனியோட பர்சனலா பேச முடியல. ஹலோ மட்டும்தான் சொன்னேன். ஆஃப் தி ஸ்கிரீன் எதுவும் பேச முடியல. விளம்பரம் பார்த்துட்டு எதிர் வீட்டுல உள்ளவங்க… பக்கத்து வீட்டுல உள்ளவங்க… கீழ் வீட்டுல உள்ளவங்க எல்லாரும் நீங்க ரொம்ப லக்கிம்மான்னு சொல்றாங்க!” ” என்றவர் தொடர்ந்து பேசினார்.

ரேவதி

“எனக்கு மகனும் இல்ல, மகளும் இல்ல.. ஆனா, பிரதர், பிரதருடைய பசங்கன்னு பெரிய ஃபேமிலி இருக்காங்க. வீட்ல எல்லாரும் என்னை விரும்பி பண்ணி பார்த்துப்பாங்க. இப்படியொரு குடும்பம் எல்லாருக்கும் அமையாது. எனக்கு 80 வயசு ஆகிடுச்சு. ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் முன்னிலையில் சமீபத்தில் எனக்கு சதாபிஷேகம் கோயிலில் வச்சு நடந்துச்சு. பசங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு பண்ணினாங்க. அப்ப கூட கோயிலுக்குப் போயிட்டு திருமகள் சீரியல் ஷூட்டுக்குப் போயிட்டு வந்தேன். என் ஃபங்கஷனைகூட யார் வீட்டு ஃபங்ஷனுக்கோ போகிற மாதிரி போயிட்டு வர்ற வேண்டியதாகிடுச்சு!” என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து ரேவதி பாட்டி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours