குன்னூரைச் சேர்ந்த தீப்திக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) சிறு வயதிலிருந்தே தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம். பெண் பார்க்க வரும் அனைவரிடம் இதை வெளிப்படையாகவே சொல்லிவிட, திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. மறுபுறம், சென்னையைச் சேர்ந்த அர்ஜுன் (ஜி.வி.பிரகாஷ்) முழுமையான எட்டு மணிநேர தூக்கத்தை விரும்பும் செய்தி வாசிப்பாளர். ஒரு சின்ன பென்சில் விழுகிற சத்தம் கேட்டால்கூட தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவார். இப்படியான இருவரும் திருமணம் செய்துகொண்டு கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல். ‘குறட்டை’யினால் இவர்கள் வாழ்விலும் சுற்றியிருப்பவர்கள் வாழ்விலும் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே `டியர்’ படத்தின் கதை.
கதைப்படி பார்த்தால் படத்தைத் தூக்கி நிறுத்தும் பாத்திரமாக ஐஸ்வர்யா ராஜேஷின் பாத்திரமே இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரின் நடிப்புத் திறமையை வீணடிக்கும் முயற்சியாகவே படம் நகர்கிறது. இருந்தும் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். நியூஸ் ரீடராக வரும் ஜி.வி, தனது பிரச்னையை அழுத்தமாகச் சொல்லவேண்டிய காட்சிகளில் மிகவும் மேலோட்டமான நடிப்பையே தருகிறார். கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை உணர்த்தத் தவறுகிறது அவரது நடிப்பு.
ஜி.வி-யின் ஸ்ட்ரிக்ட் அண்ணனாக வரும் காளி வெங்கட், சிறப்பான மீட்டரில் கச்சிதமாகத் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக சிடுமூஞ்சியாக ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிற இடத்தில் வெறுப்பைத் தூண்டுகிற அளவில் சிறப்பாக இருக்கிறது அவரது நடிப்பு. அவரது மனைவியாக வரும் நந்தினியும் அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாராக வரும் கீதா கைலாசம் நடிப்பில் மிகை நடிப்பு தூக்கலாகவே எட்டிப்பார்க்கிறது. அவரது தந்தையாக வரும் இளவரசு படத்தில் வருகிற ஒரே தெளிவான கதாபாத்திரமாகத் தனது பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். கணவரைப் பிரிந்து சிங்கிள் மதராக இருக்கும் ரோகிணியும், அவரை விட்டுச் சென்ற கணவராக தலைவாசல் விஜய்யும் ஆங்காங்கே வந்துபோகிறார்கள்.
லிஸ்ட் போட்டு எழுதும் அளவுக்குக் கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் முழுமையடையாத நிலையில் அந்தரத்தில் பறக்கிறது. கூட்டுக்குடும்பத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் தாம்பத்தியம் நடத்தும் தம்பதிகள், குறட்டையினால் எப்படிப் பாதிப்படைகிறார்கள் என்பதை வசனங்களில் சொல்லி நகர்கிறார்களே தவிர அதனைக் காட்சிகளாக அழுத்தமாக வெளிப்படுத்தவில்லை. வார்த்தைக்கு வார்த்தை ‘லவ் யூ’ சொல்லிக் கொள்கிறார்களே தவிர்த்து அவர்களின் காதல் எந்த இடத்திலும் ஆழமாகச் சொல்லப்படவில்லை. இதனால் அவர்கள் விவாகரத்துக்குச் செல்கிறார்கள் என்பதைப் பெரிய பிரச்னையாக உள்வாங்க முடியவில்லை.
திரைக்கதையின் வேகமும் எல்லாவற்றையும் மேலோட்டமாகவே கையாண்டிருக்கிறது. இதன்பிறகு என்ன செய்வது என்று புரியாமல் கிளைக்கதையாக அப்பாவைத் தேடுவது என்கிற எபிசோடில் நேரத்தைக் கடத்துகிறார்கள். Deepika, Arjun என்று இரு கதாபாத்திரங்களின் முதல் இரண்டு எழுத்துகளைச் சேர்த்து ‘DeAR’ என்று படத்தின் தலைப்பில் வைத்த கிரியேட்டிவிட்டியைக் கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம். கருக்கலைப்பு குறித்து பெண்ணின் தந்தை, “அவளது உடல் அவள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்ற தெளிவான வாதத்தை முன்வைப்பது மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகிறது.
‘சிறுவயதிலே தனது குடும்பத்தை விட்டு சென்ற ஒருவரை அந்தக் குடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’, ‘எந்தப் பிரச்னைக்கும் காலம் பதில் சொல்லும்’ போன்ற அபத்தமான க்ளீஷேக்களும் படத்தில் இருக்கின்றன. இதனால் இயக்குநர் ஆனந்த் ரவிசந்திரன் படத்தில் என்னதான் சொல்ல வருகிறார் என்பதில் தெளிவில்லை. அதேபோல குறட்டையால் வந்த பிரச்னைக்கு என்ன தீர்வு கண்டார்கள் என்பதும் தெளிவாகச் சொல்லப்படவே இல்லை.
“இதற்கு ஜி.வி-தான் இசையா?” என்று கேட்கும் அளவுக்குப் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். படத்தின் இறுதிக்கட்சிகளில் வரும் பாடல்கள் எல்லாம் சோ(வே)தனை முயற்சிகளே! குன்னூர் மலைத்தொடர்களைக் காட்சிப்படுத்திய விதத்தில் சிறப்பான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி. இருந்தும் நியூஸ் டிபேட் காட்சிகளின் மிகவும் சுமாரான ஒளிப்பதிவும், கனவு காட்சிகளில் வரும் கிரீன் மேட்டும் அப்பட்டமாகப் பல்லிளிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்சிக்கு முன்னர் வரும் 30 நிமிடங்களின் மேல் படத்தொகுப்பாளர் கிருபாகரன், ரூகேஷ் கூட்டணி இத்தனை இரக்கத்தைக் காட்டியிருக்கத் தேவையில்லை.
ஒட்டுமொத்தத்தில், உணர்வுபூர்வமாகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டிய கதையை, எந்தத் தெளிவுமில்லாமல் இழுத்து, “படம் எப்படா முடியும்” என்ற ஃபியர் உணர்வைத் தந்திருக்கிறது இந்த `டியர்’.
+ There are no comments
Add yours