திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கிறார் நடிகர் அருள்மணி.
‘அழகி’, ‘தென்றல்’ போன்ற பல டிவி தொடர்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர் அருள்மணி. இவர் தொடர்ந்து பல தொடர்களிலும் நடித்திருந்தார். இது தவிர உத்வேகம் அளிக்கும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராகவும் வலம் வந்தார். இவருக்கு வயது 65. மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
அ.தி.மு.க-வின் நட்சத்திர பேச்சாளரான இவர், நடிப்பு மற்றும் இயக்குநர் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். நான்கு நாள்களுக்கு முன்புதான், திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார். கடந்த பத்து நாள்களாக அ.தி.மு.க சார்பாக வெளியூரில் பிரசாரம் செய்தவர், சென்னை திரும்பி ஓய்விலிருக்கும் போது, நேற்று மதியம் 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்த போது முன் நின்று எல்லா உதவிகளையும் செய்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய மறைவு ஒட்டுமொத்த சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
+ There are no comments
Add yours