விஜய் டிவியில் ஒளிபரப்பான `லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரிச்சயமானவர் `லொள்ளு சபா’ பழனியப்பன். `கல்யாண வீடு’ தொடரில் நடித்திருந்தவர் கொரோனாவிற்குப் பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சிறகடிக்க ஆசை’ தொடரில் நடிக்கிறார். அவரிடம் பேசினோம்.
“நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு நடிக்கப் போறேன்னு கிளம்பி வந்துட்டேன். ஆனா, எந்தக் கம்பெனியிலும் நம்மள கூப்பிடல. விஜய் சாருடைய `மாண்புமிகு மாணவன்’ படத்துல கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆக பத்து நாள் போனேன். அதுதான் என் முதல் படம். நான் வாங்கின முதல் சம்பளம் 100 ரூபாய். அப்படியே கிடைக்கிறதை பண்ணிட்டு இருந்தேன். அப்பதான் கூட இருந்த பசங்க எல்லாம் இப்படியே நீ பண்ணிட்டு இருந்தா நீ ரெஜிஸ்டர் ஆகவே மாட்ட… டிவியில் ஒர்க் பண்ணணும்னு சொன்னாங்க. டிவியில் வர என்ன பண்ணணும்னு தேடி ஃப்ரெண்ட் மூலமா `லொள்ளு சபா’ வாய்ப்பு கிடைச்சது. அதுல `பூவே உனக்காக’ தான் நான் நடிச்ச முதல் கான்செப்ட். அப்படித்தான் என் கரியர் போயிட்டு இருந்தது!” என்றதும் சீரியல் வாய்ப்புக் குறித்துக் கேட்டோம்.
“`திருமதி செல்வம்’ தொடரில் ஃப்ரெண்ட் கேரக்டர் தேவைப்படுதுன்னு கேட்டிருந்தாங்க. பிறகு என்னை ஓகே பண்ணி அந்த சீரியலில் நடிச்சேன். அந்த சீரியல் நடிச்ச ராசி அதுக்குப்பிறகு 100 சீரியல்கள், 50 படங்கள் பண்ணினேன். ஃபேமிலி சென்டிமென்ட்ல டைரக்டர் குமரன் சாரை அடிச்சுக்க முடியாது. இன்னைக்குப் பலரும் `சிறகடிக்க ஆசை’ சீரியல் குறித்துப் பேசுறாங்க. அந்த சீரியல் நாங்க இந்த மீட்டரில் நடிக்கணும், இப்படி நடிக்கணும்னு அந்த சீனை எப்படி வேணும்னு குமரன் சார் நடிச்சுக் காட்டுவார். அவர் சொல்றதை உள்வாங்கி நடிச்சாலே போதும்!” என்றவர் சேசு குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
“இன்னைக்கு வரைக்கும் `லொள்ளு சபா’வுக்கு ஆயுசு அதிகம். சினிமாவுல எந்த அளவுக்கு ரீச் ஆகுமோ அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி எங்களுக்கு அடையாளத்தைக் கொடுத்துச்சு. சேசு இல்லைங்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு. எப்பவும் ஜாலியா இருப்பார். அவரோட கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கும் மேல டிராவல் பண்ணியிருக்கேன். நிறைய ஏழைகளுக்கு உதவியிருக்கார். `வடக்குப்பட்டி ராமசாமி’ படத்துக்குப் பிறகு எல்லாரும் அவர்கிட்ட இனி உன் காட்டுல மழைன்னு சொன்னாங்க. இப்பதான் அவர் லட்சங்கள் தாண்டி சம்பாதிக்கிற நேரம். இருந்திருந்தால் நிச்சயம் இன்னும் பல படங்கள் நடிச்சு கோடீஸ்வரன் ஆகியிருப்பார். இந்தப் படம் இவர் பண்ணுவார்னு பல படங்களை எங்களுக்கு சேசு அண்ணன் ரெஃபர் பண்ணியிருக்கார். அவர் மூலமா நிறைய வாய்ப்புகள் கிடைச்சிருக்கும்!” என்றவரிடம் `சிறகடிக்க ஆசை’ குறித்துக் கேட்டோம்.
“இப்ப எந்தப் புரோகிராம் போய் கை அசைச்சாலும் பத்தாயிரம் கொடுக்கிறாங்க. முன்னலாம் பத்து ரூபாய் வாங்குறதே பெரிய விஷயமா இருக்கு. புகழ் போதை மாதிரி. எப்பவும் கிடைக்காது. அது கிடைக்கும்போது தக்க வச்சிக்கணும், உடல்நலனைப் பேணி பாதுகாக்கணும். இந்தத் தொடர் எனக்கு நல்லதொரு பெயரை கொடுத்திருக்கு. எங்கப் பார்த்தாலும் நீங்க முத்துவோட ஃப்ரெண்ட் தானேன்னு கேட்குறாங்க. குமரன் சார் நல்ல டைரக்டர் என்பதைத் தாண்டி நல்ல காஸ்டிங் டைரக்டர். யார் என்ன கேரக்டர் பண்ணனும்… அப்படி பண்ணா அது எப்படி இருக்குங்கிறதெல்லாத்தையும் அவர் சரியா செலக்ட் பண்ணுவார். சின்ன கேரக்டராக இருந்தாலும் அவங்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பார்.
நிறைய சீரியல் பண்ணியாச்சு. இனி சீரியல் வேண்டாங்கிற எண்ணத்துலதான் இருந்தேன். இப்ப தொடர்ந்து சில படங்கள் பண்ணியிருக்கேன். `ஒத்த ஓட்டு முத்தையா’ படத்துல கவுண்டமணி சாரோட நடிச்சிருக்கேன்!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து பழனியப்பன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours