சென்னை: “குடும்பத்தில் இருந்துதான் குற்றவாளிகள் உருவாகிறார்கள். சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய படங்கள் குடும்பத்தில் இருந்துதான் உருவாகும்” என மலையாள இயக்குநர் ஜியோ பேபி தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஜியோ பேபி, “குற்றவாளிகள் குடும்பத்தில் இருந்துதான் உருவாகிறார்கள். என்னுடைய எல்லா படங்களும் குடும்பத்தில் இருந்துதான் வரும். வீட்டிலில் இருந்தே அரசியல் தொடங்குகிறது. வீட்டை சரி செய்தால் எல்லாத்தையும் சரி செய்ய முடியும்.
‘காதல் தி கோர்’ படத்தை பார்த்தால் அதில் மம்மூட்டி, அவரது மனைவி என அனைவரும் அப்பாவிகள்தான். 20 வருடங்கள் அந்த பெண் அழுத்தத்துடன் வாழ்கிறாள். காரணம் குடும்பம். சமூக அமைப்பு. இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக தான் நான் பார்க்கிறேன்.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை பொறுத்தவரை, நான் ஒருமுறை கிச்சனில் வேலை பார்க்க வேண்டிய சூழல் உருவானது. என்னால் அங்கு வேலை பார்க்க முடியவில்லை. அப்போது தான் இதை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என நினைத்தேன். அடுத்த ஒரு வாரத்தில் நான் பெண்களின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பதை புரிந்துகொண்டேன். எனக்கு அது புரிய 37 வயதானது.
எனது மனைவி, அம்மா, சகோதரி என எல்லோரிடமும் பேசினேன். அவர்களின் கதைகளை கேட்டேன். அவர்களின் கதைகள் மோசமாக இருந்தது. இந்தப் படத்தை நானே தயாரிக்கலாம் என முடிவு செய்தேன். சொல்லப்போனால் இது ஒரு இன்டிபென்டன்ட் ஃபிலிம். ஆனால் அது வெளியாகி எதிர்பாராத வெற்றி பெற்றது. மம்மூட்டி படம் பார்த்து பாராட்டினார். அப்படிதான் ‘காதல் தி கோர்’ படத்துக்கான தொடர்பு உருவானது.
இந்தப் படங்களை யார் பார்ப்பார்கள்? பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி பெறுமா என்பது குறித்தெல்லாம் யோசித்து நான் படம் எடுப்பதில்லை. எனக்கு பிடித்த படங்களை இயக்க வேண்டும். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காதல் தி கோர்’ இந்த இரண்டு படங்களும் எனக்காகத்தான் எடுத்தேன். இப்படி எத்தனை படங்களை எடுக்க முடியும் என தெரியவில்லை. காரணம் சினிமா துறை கார்பரேட் ஆகிவிட்டது” என தெரிவித்தார்.
மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, மற்றும் ‘காதல் தி கோர்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஜியோ பேபி. மேற்கண்ட இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours