‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரிச்சயமானாவர், ஆண்டனி. சந்தானத்துடன் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் கூட்டணி அமைத்து நம்மை சிரிக்க வைத்தவர்.
தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாம்பரத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.
“எனக்கு உடம்புல தொற்று ஏற்பட்டிருக்கு. அதுனால உடம்புல திரவம் (fluid) உருவாகிடுச்சு. முதல்ல தொடை பகுதில வீக்கம் தெரிஞ்சதும் உடனடியாக போய் மருத்துவரைப் பார்த்தேன். ‘திரவம் உருவாகியிருக்கு அதை எடுத்தாகணும்’னு மருத்துவர் சொன்னார். நான் அப்படியே விட்டுட்டேன். அதுக்கப்புறம் எனக்கு சிறுநீர்ப்பை வீங்கிடுச்சு. அதன் பிறகு மருத்துவர் பேச்சைக் கேட்டு சிகிச்சைக்கு வந்தேன். என்னுடைய நுரையீரல் பகுதியிலிருந்து மட்டும் 1 லிட்டர் தண்ணீர் எடுத்தாங்க. இப்போ மற்ற பகுதிகள்ல இருக்கிற திரவத்தை எடுத்துகிட்டு இருக்காங்க.
எனக்கு கால்ல ஏற்கெனவே வெரிகோஸ் வெயின் இருக்கு. இப்போ சிகிச்சைக்காக சந்தானம்தான் எனக்கு உதவி பண்ணிகிட்டு இருக்காரு. அப்புறம் ‘ஏ1’ திரைப்படத்தினுடைய டைரக்டர் ஜான்சன், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தினுடைய இயக்குநர் ஆனந்த், யோகி பாபு, லொள்ளு சபா மாறன் அண்ணன்னு பலரும் எனக்கு இப்போ உதவி பண்ணிகிட்டு இருக்காங்க.நானும் என் மனைவியும் இப்போ பிரிஞ்சு இருக்கோம். நான் சினிமாவுல ஜெயிப்பேன்னு சொல்லிட்டே இருந்தேன். என் மனைவியும் எனக்காக காத்திருந்து பார்த்தாங்க. அதுக்குப் பிறகு கோபத்துனால கொஞ்சம் இப்போ தள்ளி இருக்காங்க.
என் உடல்நிலை பற்றிய விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நானும் அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுனு இருக்கேன். அவங்க இனிமேல் என்னை வந்து பார்ப்பாங்கனு நினைக்கிறேன். இப்போ சிகிச்சை ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது. முன்னாடி சாப்பிட்டதும் அதிகமாக இருமல் வரும். இப்போ நுரையீரல்ல தண்ணீர் எடுத்ததுக்குப் பிறகு கொஞ்சம் அது இல்ல. எனக்கு என் குடும்பத்திலேயும் சில பிரச்னைகள் இருந்தது. என்னுடைய தாயாருக்கும் உடல்நிலை சரியில்லாம சிகிச்சை எடுத்துகிட்டு இருந்தாங்க. தந்தையாரும் தொடர் சிகிச்சைல இருந்தாங்க. என்னுடைய தங்கையையும் புனர்வாழ்வு மையத்துல சேர்ந்திருந்தேன். என்னுடைய தாயார் இறந்த கொஞ்ச நாட்களிலேயே தந்தையும் இறந்துட்டாரு. அதுக்குப் பிறகு என்னுடைய தங்கை போன வருஷம் இறந்துட்டாங்க. புனர்வாழ்வு மையத்துல சாப்பிடாமலே இருந்தாங்க.
அதுக்குப் பிறகு அவங்க கீழ விழுந்து அடிப்பட்டு இறந்துட்டாங்க. இந்த சமயத்திற்கு இடையில சினிமாவுல பல போராட்டங்கள் நடந்தது. முதல்ல எனக்கு சினிமாவுல நல்ல வாய்ப்புகள் வந்தது. சந்தானம்கூட தான் முதல்ல இருந்தேன். அதுக்குப் பிறகு தனியாக வாய்ப்பு தேடுறேன்னு வெளிய போனேன். அப்போகூட சந்தானம் அட்வைஸ் பண்ணுவார். நான் அதைக் கேட்காமல் இருந்தேன். பிசினஸ்லாம் பண்ணேன். அப்போ என் வாழ்க்கைல தேவையில்லாத நண்பர்கள்கூடலாம் சேர்ந்தேன். அவங்கள் பேசுற எல்லா விஷயத்தையும் நான் ஜாலியாக எடுத்துக்கிட்டேன். அப்போ என்னை பல பிசினஸ் பண்ண வச்சு என்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் திருடிகிட்டு போயிட்டாங்க.
இப்போ ‘ஏ1’ திரைப்படத்தோட இயக்குநர் ஜான்சன் இயக்கத்துல உருவாகியிருக்கிற ‘மெடிக்கல் மிராக்கில்’ திரைப்படத்துல நடிச்சிருக்கேன். அந்தத் திரைப்படம் வெளியானால் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தோட இயக்குநர் ஆனந்தோட அடுத்த படத்திலேயும் நான் நடிக்கிறேன். இப்போ சமீபத்துல லொள்ளு சபா குழுவோட ரியூனியன் வச்சாங்க. அதுக்கு எனக்கு கால் பண்ணி சேஷு அண்ணன் கூப்பிட்டாரு. ஆனா, அந்த சமயத்திலேயும் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்துனால வரமுடியலனு சொல்லிட்டேன். சேஷு எனக்கு அப்பா மாதிரி. எனக்கு நிறையா உதவிகள் பண்ணுவாரு. பட வாய்ப்புகள் இருந்தால் என்கிட்ட சொல்லுவார். அவர் சமீபத்துல இறந்துட்டாரு. எனக்கு சந்தானம் பல உதவிகள் பண்ணியிருக்கார்.
என்னுடைய கல்யாணத்துக்கு 6 லட்சம் கொடுத்து உதவி பண்ணி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. என்னுடைய தாயார் இறந்த சமயத்திலேயும் எனக்கு உதவிகள் பண்ணாரு. இப்போ சமீபத்துல என் தங்கச்சி இறந்த சமயத்துல எனக்கு பணம் எதுவுமே இல்ல. அந்த நேரத்திலேயும் சந்தானம்தான் எனக்கு உதவி பண்ணாரு. ஆனா, நான் சந்தானத்தைவிட்டு வெளியவந்து பல வாய்ப்புகள் தேடுறேன்னு போனேன். பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்ல. எனக்கு அந்த சமயத்துல வருமானமும் இல்ல. அந்த நேரத்திலேயும் நான் சந்தானம்கிட்ட உதவிகள் கேட்டால் பண்ணியிருப்பார். ஆனா, நான் தொந்தரவு பண்ணக்கூடாதுனு அமைதியாக இருந்துட்டேன்.” என வருத்தத்துடன் பேசினார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
+ There are no comments
Add yours