மிடில் கிளாஸ் இளைஞன் கோவர்தனாக விஜய் தேவரகொண்டா பக்காவாகப் பொருந்திப் போகிறார். பணக்காரர்கள் மேல் அவருக்கு இருக்கும் கோபம், பட்ஜெட் போட்டு தனது குடும்பத்தை நடத்தும் விதம், அந்த லுங்கி – பனியன் முதற்கொண்டு அத்தனையையும் கச்சிதமாகச் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்பவர், நடனக் காட்சிகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். இந்துவாக மிருணாள் தாக்கூர். இவர் மட்டும்தான் படத்தின் ஒரே ஆறுதல். சம்பிரதாய ஹீரோயினாக வரலாம், கதையிலும் இவருக்கு முக்கிய பங்குண்டு. நடிப்பிலும் குறைகள் எதுவுமில்லை. தனக்கான வேலையை மிகச்சரியாகச் செய்திருக்கிறார்.
படத்தில் ஹீரோ – ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட ஹீரோ – பாட்டியின் கெமிஸ்ட்ரி அட்டகாசமாக ஒர்க்அவுட்டாகி இருந்தது. பாட்டிக்கும் பேரனுக்குமான சண்டைகள், குறும்புகள், கேலிகள் என அத்தனையையும் அழகாகக் காட்சிப்படுத்தி இருந்தார்கள். பாட்டியாக நடித்த மூத்த நடிகை ரோகிணி ஹட்டங்காடியின் முதிர்ச்சியான நடிப்பும் ஏற்கெனவே சிறப்பாக எழுதப்பட்ட இந்தக் கதாபாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
விஜய் தேவரகொண்டா – பரசுராம் கூட்டணியின் முந்தைய படம் ‘கீதா கோவிந்தம்’ பெற்ற வெற்றியினால், இந்தப் படத்தின் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்த ‘தி ஃபேமிலி ஸ்டார்’ ஒரு குடும்பத் தலைவனாக நிறைவேற்றத் தவறியிருக்கிறது. விஜய் தேவரகொண்டாவின் வழக்கமான உடல் மொழி, நாலு ரொமான்ஸ் சீன், நாலு சண்டைக் காட்சிகள், ஹீரோயின் கன்னத்தில் அறைவது, பல பெண்கள் இவரிடம் காதலைச் சொல்ல வருவது, அதை இவர் ஏற்காமல் போவது என ‘வழிநெடுக காட்டுமல்லி’ போலப் படம் நெடுக இந்த டெம்ப்ளேட் சீன்ஸே ஆக்கிரமிக்கின்றன. விஜய் தேவரகொண்டா படத்தில் அவரே இல்லையென்றாலும் இதெல்லாம் நிச்சயம் இருக்கும்போல!
+ There are no comments
Add yours