சென்னை: “இன்னும் அதிக நேரம் செலவிட்டிருக்கலாம் என தோன்றுகிறது” என்று நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு நடிகர் அதர்வா முரளி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வாழ்வில் நமக்கானவர்கள்தான் மிகவும் முக்கியம் என நினைக்கவைத்த மற்றொரு நாள் இது. இன்னும் அதிக நேரம் நாம் ஒன்றாக செலவிட்டிருக்கலாம் என தோன்றுகிறது… Rest In Peace பாலாஜி சித்தப்பா” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி உடலுக்கு இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், அருண் மாதேஸ்வரன் மற்றும் நடிகர்கள் விஜய் சேதுபதி, கிஷோர், அதர்வா, உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
டேனியல் பாலாஜி: சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் காதாபாத்திரம் கவனம் பெற்று தந்தது. பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து ‘பொல்லாதவன்’, ‘வை ராஜா வை’,‘பைரவா’, ‘வட சென்னை’, ‘பிகில்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக அவர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 48. டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.