ஏப்-11ல் மீண்டும் ஒரு மலையாள தமிழ் படம் : ரசிகர்களின் வரவேற்பை பெறுமா?
27 மார், 2024 – 12:13 IST
உணர்வுப்பூர்வமான நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை எடுத்தால் மொழி ஒரு தடை இல்லை என்பதை சமீபத்தில் மலையாளத்தில் உருவாகி தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் நிரூபித்தது. படத்தின் கதை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது என்றால், இந்த படத்தில் இடம்பெற்ற கொடைக்கானல் குணா குகை மற்றும் குணா பட பாடல், இடைவேளைக்குப் பிறகு பெரும்பாலும் இடம்பெற்ற தமிழ் முகங்கள், தமிழ் வசனங்கள் என அனைத்தும் சேர்ந்து தமிழ் ரசிகர்களையும் இந்த படம் பார்க்க தியேட்டரை நோக்கி படையெடுக்க வைத்தன. கேரளாவை விட தமிழகத்தில் தான் இந்த படத்திற்கு வசூல் அதிகம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி இதே போன்று மலையாளத்தில் உருவாகியுள்ள ‘வருஷங்களுக்கு சேஷம்’ என்கிற படம் வெளியாக இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான மலையாள இயக்குனரும் நடிகருமான வினித் சீனிவாசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்க, வினீத் சீனிவாசனின் தம்பியும் நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா படத்தின் இயக்குனருமான தயன் சீனிவாசனும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். நிவின்பாலி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படமும் கேரளாவிலிருந்து கோடம்பாக்கத்திற்கு வந்து சினிமாவில் நுழைந்து பெரிய ஆளாக வேண்டும் என கிளம்பி வரும் இரண்டு நண்பர்களை பற்றியும் இங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என்பதை பற்றியும் மையப்படுத்தி உருவாகி உள்ளது. வினீத் சீனிவாசன் படங்களுக்கு என தமிழகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் சென்னையை, அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாகி இருப்பதால் மஞ்சும்மேல் பாய்ஸ் போல இந்த படமும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கலாம்.
+ There are no comments
Add yours