இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்திற்கும் ‘இளையராஜா’ என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது
இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “இளையராஜா பாட்டு என் அம்மாவின் அன்பு மாதிரி எப்போதும் நிலையானது.
நம் வாழ்க்கையில் என்னென்னவோ மாற்றங்கள் வந்தாலும், எப்போது கேட்டாலும் அதே உணர்வைத்தருகிறது அவரது இசை. அவ்வளவு எளிமையாக, இலகுவாக, நட்பாகப் பழகுபவர் இளையராஜா சார். சமமாக நம்மை நடத்துவார். இளையராஜா சார் முதல் படத்திற்கு இசையமைத்தபோது எனக்கு ஒரு வயது.
ஆனால், என்னொடு அவர் பேசும்போது, என் படத்திற்கு இசையமைத்தபோது ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், ‘நான் இதைச் சொல்லலாமா’ என்று கேட்டுவிட்டுதான், எந்த அறிவுரைகளையும் சொல்வார். சொந்த விருப்பு, வெறுப்புகளை படத்திற்கு இசையமைக்கும்போது காட்டமாட்டார். அவருக்கு முரணான விஷங்கள் படத்தில் இருந்தாலும், அதற்குச் சிறப்பாக இசையமைத்துக் கொடுப்பார்.
பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு அர்த்தம் கொடுப்பார். படத்தில் எங்கு இசை இருக்க வேண்டும், எங்கு இசை இருக்கக் கூடாது என்பதைச் சிறப்பாகக் கையாளுபவர். இவையெல்லாம் அவருடனான எனது அனுபவங்கள்.
இளையராஜா சார் வாழ்க்கையைப் படமாக ஆவணம் செய்வது நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அவருடைய 40 ஆண்டுகளுக்கு மேலான இசை வாழ்க்கையும், அவருக்கு முன்பான 40 ஆண்டு காலத்தையும் ஒரு நாட்டின் வரலாற்றுப் பதிவாக அவரது இசை மூலம் அறியலாம். அவரின் ஒவ்வொரு பாடலும் நம் வாழ்வின் ஒவ்வொரு அனுபவங்களை நினைவுகூறும். இப்படம் அருண் மாதேஸ்வரனுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. தனுஷுக்கு இது மிகப் பெரிய சவால். அதை அவர் செய்து முடிப்பார் ” என்று பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours