அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளுடன் ‘ஹாட் ஸ்பாட்’ டிரைலர்
20 மார், 2024 – 10:54 IST
தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு சர்ச்சை, பரபரப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அந்தப் படத்தைப் பற்றி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள். அதனால், இலவச விளம்பரம் கிடைத்து படத்தைப் பார்க்கவும் ரசிகர்கள் வருவார்கள் என்று வேண்டுமென்றே சில சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், சாண்டி, அம்மு அபிராமி, சோபியா, ஜனனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட்’ என்ற படத்தின் டிரைலரை இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள்.
அதில் ஆபாசமான வசனங்கள், மிக அசிங்கமான வசனங்களும் இடம் பெற்றுள்ளன. யு டியுபில் வெளியாகும் வீடியோக்களுக்கு சென்சார் இல்லை என்பதால் இப்படி அனைவரும் வெளியிட்டால் என்ன ஆகும் ?. கொஞ்சம் கூட சமூக அக்கறையோ, பொறுப்போ இல்லாமல் இப்படி படம் எடுத்து டிரைலரையும் வெளியிடுபவர்களுக்கு சென்சார் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
ஒரு திரைப்படம் உருவானால் அது சென்சாருக்குச் சென்ற பிறகே வெளியிட்டாக வேண்டும். எனவே, இப்படி சர்ச்சைகளுக்காகவும், பரபரப்புக்காவும் டிரைலரை வெளியிடும் படங்களை சென்சார் செய்ய மாட்டோம் என அவர்கள் கூற வேண்டும். அல்லது டிரைலர்களை சென்சார் செய்த பிறகுதான் யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளிவந்த ‘லியோ’ படத்தின் டிரைலரில் விஜய் ஒரு கெட்ட வார்த்தை பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரது எதிர்ப்பால் பின்னர் அந்த வார்த்தை நீக்கப்பட்டது.
இந்த படத்தில் டிரைலரின் ஆரம்பத்திலேயே அவர்களாகவே, An “A”dults only film, for matured family audience & youth” என்றும் ஒரு கார்டு போட்டுள்ளார்கள். படத்திற்கு சென்சார் வாங்கிய பின் இப்படி போட்டார்களா அல்லது விளம்பரத்தில் புதுமை செய்கிறோம் எனப் போட்டுள்ளார்களா என்பதை சென்சார் குழுவினர் விசாரிக்க வேண்டும். ‘மெச்சூர்டு பேமிலி ஆடியன்ஸ், யூத்’ என்றால் ‘ஏ’ படங்களை விரும்பிப் பார்ப்பார்கள் என்று சொல்ல வருகிறதா இப்படக் குழு.
இந்த ‘ஹாட் ஸ்பாட்’ பட டிரைலர் விவகாரத்தில் சென்சார் குழுவினர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் ?.
+ There are no comments
Add yours