கமலின் “பேசும் படம்’ உட்பட பல பேசப்பட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். 93 வயதான சிங்கீதம் சீனிவாசராவ்வை கௌரவிக்கும் பொருட்டு கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் ‘அபூர்வ சிங்கீதம்’ என்ற பெயரில் விழா எடுத்து கௌரவித்துள்ளார் கமல். சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சிங்கீதம் இயக்கத்தில் கமல் நடித்த ‘ராஜபார்வை’, ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய நான்கு படங்கள் தினம் ஒன்றாகத் திரையிடப்பட்டுவருகிறது.

இந்த விழாவில் கமல் தயாரிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. நேற்று நடந்த நிகழ்வில் மணிரத்னம், சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், சஷிகாந்த், சித்தார்த், அன்பறிவ், வைரமுத்து, ராஜீவ்மேனன் என பலர் கலந்துகொண்டு ‘ராஜபார்வை’யைப் பார்த்து ரசித்தனர்.

விழாவில் பங்கேற்ற ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் சுஹாசினியிடம் இயக்குநர் விழா குறித்துக் கேட்டதற்கு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டது இது.
”வித்தியாசமான படங்களை ஜனரஞ்சகமா கொடுக்கக்கூடியவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். அவரோட முதல் படமான ‘திக்கற்ற பார்வதி’யில் நான் நடிச்சிருக்கேன். ராஜாஜியோட கதை அது. இந்தப் படத்தில் நான் வில்லனாகப் பண்ணினேன். ‘ராஜ பார்வை’யில் நான் மெயின் காமெடியனாகப் பண்ணினேன். அதன் பிறகு தெலுங்கில் கமல் நடித்த ஒரு படத்தைத் தமிழில் ‘இரு நிலவுகள்’னு மொழிமாற்றம் பண்ணி வெளியிட்டாங்க. அந்தப் படம் தெலுங்கில் பெரிய ஹிட். ஆனா, அது தமிழ்ல டப்பிங் பண்ணுறப்ப, கமல் சாருக்கு உடம்பு சரியில்லாததால அவருக்கு பதில் நான் டப்பிங் பேசியிருப்பேன். கமலுக்கு தெலுங்கில் எஸ்.பி.பி. உட்பட பலரும் வாய்ஸ் கொடுத்திருக்காங்க. ஆனா, தமிழ்ல யாரும் வாய்ஸ் கொடுத்ததா தெரியல. ‘இரு மலர்கள்’ல நான் வாய்ஸ் கொடுத்திருந்தேன். சிங்கீதம் ரொம்ப மென்மையானவர். அவரோட படங்கள் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். கதைக்களத்துல ஸ்டிராங்கா இருப்பார். அதனாலதான் கமல் சாருக்கு வித்தியாசமான படங்கள் கொடுத்தார்.

கமல் சார் தயாரிப்பில், சிங்கீதம் சீனிவாசராவ் கௌரவிக்கும் விதமாக அவர் இயக்கிய படங்களின் திரையிடல் நடந்து வருகிறது. இந்தத் திரையிடல் முடிந்த பின், அந்தப் படத்தின் சுவாரஸியங்களை கமலும், இயக்குநரும் பகிர்ந்துகொண்டனர். கமல் முதன் முதலில் தயாரித்த படம் ‘ராஜ பார்வை’ தான். அந்தப் படத்தின் திரையிடலுக்குப் பின், படத்தில் பங்கேற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களும் வந்திருந்து, தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். வைரமுத்து, படத்தின் ஒளிப்பதிவாளர் பருன் முகர்ஜி, (மும்பையில் இருந்து இதற்கென வந்திருந்தார்).
+ There are no comments
Add yours