`அவர் நிஜ ஹீரோ!' – 28 வருடங்கள் கழித்து கவனம் பெறும் சுனில் ஷெட்டியின் செயல்!

Estimated read time 1 min read

தங்களுக்குத் தெரிந்தவர்களை நம்பி மும்பைக்கு வரும் பெண்களை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது.

நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் இருந்தும் பெண்கள் மும்பைக்கு இதற்கென அழைத்து வரப்படுகின்றனர். அதுபோன்ற பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் போது போலீஸார் அவர்களை மீட்டாலோ அல்லது கைது செய்தாலோ அரசு பெண்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவர். அதே சமயம் அவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களாக இருந்தால் அவர்களுக்கு ஜாமீனில் வழங்கினாலும் அரசு பெண்கள் மையத்தில் தொடர்ந்து தங்க வைக்கப்படுவது வழக்கம். இப்போது விபசார விடுதிகள் பெரும்பாலும் மூடப்பட்டு விட்டன. மிகவும் சொற்ப அளவில் மட்டுமே பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

சுனில் ஷெட்டி

மும்பை காமாட்டிபுரா பகுதிக்குக் கடத்தி வரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்க நூற்றுக்கணக்கான போலீஸார் மற்றும் சமூக சேவர்கள் 1996ம் ஆண்டு காமாட்டிபுராவிற்குள் இறங்கினர். அப்போது மொத்தம் 456 பெண்கள் மீட்கப்பட்டனர். அதில் நேபாளத்தைச் சேர்ந்த 128 பெண்களும் இருந்தனர். உடனே அவர்களை நேபாளத்திற்கு அனுப்ப போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அப்பெண்களுக்கு பிறப்புச் சான்றோ அல்லது குடியுரிமைச் சான்றோ இல்லை எனக் கூறி அவர்களைத் தங்களது நாட்டிற்கு அழைத்துக்கொள்ள நேபாள அரசு மறுத்துவிட்டது. இதனால் அவர்களை நேபாளத்திற்கு அனுப்ப விமான டிக்கெட் செலவை யார் ஏற்பது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து கேள்விப்பட்ட நடிகர் சுனில் ஷெட்டி இதில் தலையிட்டு அத்தனை பெண்களையும் நேபாளத்திற்கு அனுப்பி வைக்க ஆகும் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.

அப்பெண்களுக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்து உண்மையான ஹீரோ என்பதை சுனில் ஷெட்டி நிரூபித்தார். ஆனால் தான் செய்யும் இக்காரியம் குறித்து வெளியில் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதனால் அந்த நேரத்தில் சுனில் ஷெட்டி பெயர் மீடியாவில் எங்கும் வரவில்லை. ஆனால் சமீபத்தில் சுனில் ஷெட்டி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அச்சம்பவத்தை நினைவு கூர்ந்தார். 128 பாலியல் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதில் ஏராளமானோரின் கடின உழைப்பு இருக்கிறது. அதற்கு நான் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. பெண்களை மீட்டு அனுப்பும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீடியாவின் கவனத்தை ஈர்க்காத வண்ணம் பார்த்துக்கொண்டனர். நான் நடிகர் என்பதால் எனது பெயர் மட்டும் நினைவில் வைத்திருக்கக்கூடும்” என்று தெரிவித்தார்.

சுனில் ஷெட்டி

சுனில் ஷெட்டி அச்சம்பவத்தை அப்படியே மறந்துவிட்டார். இதில் சுனில் ஷெட்டியின் அத்தையின் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட்டது. அவர் மூலம் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சர்மாயா என்ற பெண்தான் இது குறித்து வெளியுலகத்திற்கு தெரிவித்தார். ஒரு முறை சர்மாயா நடிகர் சுனில் ஷெட்டியை சந்தித்துப் பேசியபோது அவரே இதனை சுனில் ஷெட்டியிடம் தெரிவித்தார். அதனை கேட்டு சுனில் ஷெட்டி ஆச்சரியம் அடைந்தார். அதோடு சர்மாயா பாலியல் தொழிலாளர்களுக்காக சொந்தமாக தொண்டு நிறுவனம் நடத்துவதாகவும் சுனில் ஷெட்டியிடம் தெரிவித்தார். சுனில் ஷெட்டி நேபாள பெண்களை அவர்களது நாட்டிற்கு அனுப்ப உதவி செய்த விவகாரம் வெளியில் தெரிய வந்தவுடன் சுனில் ஷெட்டியை பலரும் பாராட்டினர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours