ரீ-ரிலீஸில் `3′, `மயக்கம் என்ன’, `விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய திரைப்படங்களின் ஏகோபித்த வரவேற்பைப் பார்த்திருப்போம். ஆனால், ரீ-ரிலீஸ் டிரெண்டில் இன்னும் பின்னோக்கிச் சென்று `வசந்த மாளிகை’ திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
சிவாஜி நடித்த இந்தப் படம் 1972-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தைத் தற்போது சென்னை ஆல்பர்ட் திரையரங்கத்திலும், உதயம் திரையரங்கத்திலும் ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
இப்படம் வெளியான இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பார்வையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை சென்னை ஆல்பர்ட் திரையரங்கத்தில் 9 முறை ‘வசந்த மாளிகை’ திரைப்படத்தை விநியோகஸ்தரிடம் ஒப்பந்தம் செய்து போட்டிருக்கிறார்கள். திரையிட்ட 9 முறைகளில் 6 முறை 4 வாரங்களைத் தாண்டி பார்வையாளர்களின் நல்வரவேற்பைப் பெற்று ஓடியிருக்கிறது. இது தொடர்பாகச் சென்னை ஆல்பர்ட் திரையரங்கத்தின் மேலாளர் மாரியப்பனிடம் பேசினோம்.
“இதுவரைக்கும் ஆல்பர்ட் திரையரங்கத்துல 9 முறை ‘வசந்த மாளிகை’ திரைப்படத்தைப் போட்டிருக்கோம். முன்னாடி ரீல் புரொஜெக்டர்ல போட்டோம். இப்போ டிஜிட்டல்ல திரையிடுறோம். டிஜிட்டல்ல இப்போ மூணாவது முறையாகத் திரையிடுறோம். இப்போ வரைக்கும் இந்தத் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கு. காமெடி, காதல், பாடல்கள்னு பல விஷயங்கள் இந்தத் திரைப்படத்துல நிறைஞ்சிருக்கு. எந்தக் காலகட்டத்திற்கும் இந்தத் திரைப்படம் பொருந்தும்.
சிவாஜி சார் இந்தப் படத்துல போட்டிருக்கிற காஸ்டியூம்தான் ஹைலைட். அது அப்போ இருந்த டிரெண்ட்டுக்கேத்த மாதிரி இல்லாம வேற மாதிரி இருக்கும். இந்தப் படத்தோட வசனம் ரொம்பவே பன்ச்சாக இருக்கும். இப்போகூட ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டுறாங்க. ஒரு சாதாரணமான காதல் வசனம்தான் காட்சியில இருக்கும். அதுக்குப் பார்வையாளர்கள் ஆர்ப்பரிச்சு கொண்டாடுவாங்க. இதுக்கு முன்னாடி இந்தப் படத்தைத் திரையிட்டப்போ நான்கு வாரங்களுக்கு மேல ஓடியிருக்கு.
இப்போ 7 மாசத்துக்கு முன்னாடிகூட இந்தத் திரைப்படத்தைத் திரையிட்டோம். அந்தத் திரையிடல் சமயத்திலேயும் நான்கு வாரங்கள் வரைக்கும் ஓடுச்சு. இப்போ மறுபடியும் போட்டிருக்கோம். இப்பவும் நான்கு வாரங்கள் கடந்து ஓடிட்டு இருக்கு. இந்தத் திரைப்படம் சிவாஜி சாரோட கரியர்ல ரொம்ப முக்கியமான திரைப்படம். இந்தப் படத்துல மொத்தமாக 7 பாடல்கள் இருக்கு. அத்தனை பாடல்களும் அருமையாக இருக்கும். இப்படியான விஷயங்கள்தான் ரசிகர்களை இந்தளவுக்குக் கொண்டாட வைக்குது. புதிய படங்களே இந்தளவுக்கு நான்கு வாரங்கள் ஓடமாட்டேங்குது. ஆனா, இந்தத் திரைப்படம் இத்தனை முறை போட்டதுக்குப் பிறகும் நான்கு வாரங்கள் ஓடுது. ‘வசந்த மாளிகை’ திரைப்படத்தைத் திரையிடும் போதெல்லாம் பெங்களூருல இருந்து ரசிகர்கள் பலர் சேர்ந்து வருவாங்க.
இந்த முறையும் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்றாங்க. போன முறை வந்தப்போ சிவாஜி சார் பேனருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மாலை வாங்கிட்டு வந்தாங்க. இந்தப் படத்துக்கு டிக்கெட் விலையும குறைச்சிருக்கோம். அப்படியும் எங்களுக்கு இது லாபகரமானதுதான். ஏன்னா, விலையைக் குறைக்கும்போது அதிகளவிலான பார்வையாளர்கள் வருவாங்க. அப்போ திரையரங்கத்திற்கும், விநியோகஸ்தருக்கும் லாபமாகத்தான் இருக்கும்.
இந்தத் திரைப்படம் ஹவுஸ்புல்லாக ஓடலைனாலும் இப்போகூட 70 சதவிகித திரையரங்கம் நிரம்பிடுது. நான் 10வது படிக்கும்போது ‘வசந்த மாளிகை’ திரைப்படம் ரிலீஸாச்சு. அன்னைக்கு இருந்த மாதிரியான கொண்டாட்டம்தான் இன்னைக்கும் இருக்கு. எத்தனை முறை திரையிட்டாலும் இந்தத் திரைப்படத்தை மக்கள் வந்து பார்க்குறாங்க. அதுனாலதான் இந்தப் படத்தைத் தைரியமாகத் திரும்பவும் போடுறேன்.
இது மாதிரி மக்கள் அதிகளவுல கொண்டாடுற திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து வச்சிருக்கேன். பழைய ரீல் புரொஜெக்டரையும் தயார் பண்ணி வச்சிருக்கேன். இதுமாதிரி தொடர்ந்து பழைய படங்களை ரீ-ரிலீஸ் பண்ணுவேன்” என்றவர் ரீ-ரிலீஸ் டிரெண்டு குறித்தும் பேசினார்.
“புதிய படங்கள் பெருசா வராத சமயத்துல இந்த மாதிரி ரீ-ரிலீஸ் தொடர்ந்து பண்ணும்போது திரையரங்கத்திற்கு மக்கள் கூட்டம் அதிகளவுல வருது. அந்தச் சமயத்துல மக்கள் திரையரங்கத்துல வந்து கொண்டாடுவாங்க. ஓ.டி.டி மாதிரியான தளங்கள் வந்தாலும் திரையரங்கத்திற்கு மக்கள் கூட்டம் கண்டிப்பாக வரத்தான் செய்யும். ரீ-ரிலீஸ் ஆரோக்கியமானதுதான். அதுவும் இங்கு தேவைதான்” என்றார்.
+ There are no comments
Add yours