‘கைதி’, ‘அந்தகாரம்’, ‘மாஸ்டர்’ என அடுத்தடுத்த படங்களால் கோலிவுட்டை தன் பக்கம் திரும்ப வைத்தவர், அர்ஜுன் தாஸ். ரகுவரனுக்குப் பிறகு, குரலால் தமிழ் சினிமாவை ஆச்சர்யப்படுத்தியவர். ‘அந்தகாரம்’ திரைப்படத்தில் இவர் லீட் ரோலில் நடித்திருந்தாலும் ஹீரோ என்று சொல்லமுடியாது. அந்த வகையில் இவரை ஹீரோவாக்கியது இயக்குநர் ஹலீதா ஷமீம்.
‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ஆந்தாலஜியில் அர்ஜுன் தாஸ் – லிஜோமோல் ஜோடியை வைத்து ‘லோனர்ஸ்’ எனும் கதையை இயக்கியிருப்பார். அதன் பிறகு, முழு நீளப் படத்தில் நாயகனாக அறிமுகம் செய்தது இயக்குநர் வசந்தபாலன். அதுதான் ‘அநீதி’.
இது ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கையில், மற்ற படங்களுக்கான வாய்ப்பு அர்ஜுன் தாஸைத் தேடி வரத் தொடங்கியது. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கப்பேலா’ திரைப்படத்தின் டோலிவுட் வெர்ஷனில் நடித்தார். தற்போது, அர்ஜுன் தாஸ் கைவசம் அத்தனை படங்கள் இருக்கின்றன.
சமீபமாக அவரது ஃபிலிமோகிராபியில் இணைந்த படம் ‘போர்’. இதனைத் தொடர்ந்து ‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களின் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ‘ரசவாதி’ என்ற படமும் ரிலீஸுக்குத் தயார். தற்போது அவர், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்து வருகிறார்.
அக்கட தேசத்தில், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வரும் ‘OG’ படத்திலும் நடித்து வருகிறார். பிரபாஸை வைத்து ‘சாஹோ’ படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, பிரகாஷ்ராஜ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
இன்னும் வடக்கு நோக்கி நகர்ந்தால், சைலன்டாக இந்திப் படம் ஒன்றிலும் நடித்து முடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். மலையாளத்தில் கல்ட் கிளாஸிக்கான ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் இந்தி ரீமேக்தான் அது. இந்தப் படத்தை ‘கேடி (எ) கருப்புதுரை’ படத்தின் இயக்குநர் மதுமிதா இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே, இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தி அறிமுகத்தைத் தொடர்ந்து, மலையாள அறிமுகம். ‘ஜூன்’, ‘மதுரம்’ ஆகிய படங்களையும் ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’ எனும் வெப் சீரிஸையும் இயக்கிய அஹமத் கபீர் இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ்தான் ஹீரோ. ‘ஹிருதயம்’ பட இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இந்த ரொமாண்டிக் காமெடி படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கவிருக்கிறது. இது போக, வெப் சீரிஸ் ஒன்றிலும் அர்ஜுன் தாஸ் நடித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
இதற்குப் பெயர்தான் எட்டுத்திக்கும் `குரல்’ ஒலிக்கிறதா? வாழ்த்துகள் அர்ஜுன் தாஸ்!
+ There are no comments
Add yours