நெட்ப்ளிக்ஸில் ஆவணப் படங்கள் ஹிட்டடிக்கும் அளவுக்கு அதன் பிக்ஷன் படங்கள் பெயர் வாங்குவதில்லை என்ற விமர்சனம் உண்டு. சயின்ஸ் பிக்ஷன், பேன்டஸி, துப்பறியும் கதைகள், அனிமேஷன் படங்கள் எனப் பல ஏரியாக்களில் படைப்புகளை இறக்கிவருகிறது. அந்த வகையில் `ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ புகழ் மில்லி பாபி பிரவுனை வைத்து `எனோலா ஹோல்ம்ஸ்’ படத்தைக் கொடுத்தது. தற்போது அவரை வைத்தே மற்றொரு படமும் வெளியாகியிருக்கிறது. அது பேன்டஸி த்ரில்லர் படமான `டேம்சல்’. இந்தப் படம் எப்படி?
கடும் உணவுப் பஞ்சத்தால் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறது இளவரசி எலோடியாவின் நாடு. அச்சூழலில், ஆரியா என்கிற செழிப்பான நாட்டின் இளவரசருக்கு, எலோடியாவை பெண் கேட்டு தூது ஒன்று வருகிறது. அந்நாட்டுடன் சம்பந்தம் வைத்துக்கொண்டால், தன் நாட்டின் வறுமையை ஒழிக்க நிறையத் தானியங்களும் தங்கமும் கிடைக்கும் என்பதால், எலோடியாவை மணமுடித்துக்கொடுக்க, தன் குடும்பத்தோடு ஆரியா நாட்டிற்குச் சொல்கிறது பெரிய குடும்பம். மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அத்திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் எலோடியா.
ஆனால் திருமணத்திற்குப் பின், சடங்கு என்ற பெயரில் மலையுச்சியில் உள்ள குகையில் புகுந்த வீட்டினரால் நயவஞ்சகமாகச் சிக்க வைக்கப்படுகிறார் எலோடியா. அங்கே அவளைக் கொல்ல முயலும் டிராகனிடமிருந்து எலோடியா எப்படித் தப்பித்தாள், அந்த வஞ்சத்திலிருந்து தன் குடும்பத்தை எப்படி மீட்டாள், எப்படி தன் நாட்டின் வறுமையையும் போக்கினாள் போன்ற கேள்விகளுக்கான பதிலை சர்வைவல் த்ரில்லராக சொல்லியிருக்கிறது ‘டாம்செல்’.
மொத்த படத்தையும் தனியாளாகத் தாங்கியிருக்கிறார் மில்லி பாபி பிரவுன். தெளிவில்லாமலும் லாஜிக் இல்லாமலும் எழுதப்பட்ட இளவரசி கதாபாத்திரத்தை, தன் நடிப்பால் காப்பாற்றப் போராடியிருக்கிறார். ரே வின்ஸ்டோன், ஆங்கெலா பேஸ்ஸெட் போன்ற ஜாம்பவான்கள் இருந்தும், அவர்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஏனைய கதாபாத்திரங்களும், அழுத்தமில்லாமல் வந்து போகின்றன.
லேரி ஃபாங்கின் ஒளிப்பதிவு நிலத்தை விவரிக்கும் காட்சிகளிலும், ஜான் கில்பர்ட்டின் படத்தொகுப்பு தொடக்கக் காட்சிகளிலும் மட்டும் கைகொடுத்திருக்கின்றன. டேவிட் ஃப்ளெம்மிங்கின் பின்னணி இசை, சர்வைவலின் பதற்றத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முயன்று, அதில் பாதி வெற்றியை மட்டும் பெற்றிருக்கிறது.
‘இளவரசி கதைகளில்’ (Fairy tale) வரும் அறிவு, திறமை, நல்லெண்ணம் கொண்ட நாயகியோடு, டிராகன் கதை, பலிகொடுக்கும் சடங்கு, குகைக்குள் நடக்கும் சாகசம் போன்றவற்றைச் சேர்த்து, ஒரு சர்வைவல் த்ரில்லராக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் கார்லோஸ் ஃபெர்ஸ்னடில்லோ. ஆனால், அதே வழக்கமான கதாபாத்திரங்கள், யூகிக்கும்படியான திருப்பங்கள், க்ளீச்சேவான டிராகன் சண்டை, கச்சிதமில்லாத கிராபிக்ஸ், கதாநாயகி நிகழ்த்தும் நம்பகத்தன்மையே இல்லாத ஆக்ஷன் காட்சிகள், சுவாரஸ்யமே இல்லாத தப்பித்தல் திட்டம், புதுமையில்லாத க்ளைமாக்ஸ் என எழுத்தில் அந்த டிராகனே கடுப்பாகும் அளவுக்குச் சொதப்பல்களைச் செய்திருக்கிறார் திரைக்கதையாசிரியர் டேன் மேசு. அதுவும் குகை என்றதும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வைப்பில் எதிர்பார்த்தால் இந்த மஞ்சும்மல் கேர்ள் ஏமாற்றவே செய்கிறார்.
ஒளிவீசும் புழுக்கள், குகையில் உள்ள நீர்த்தேக்கங்கள், குகைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் எழுதி வைத்த குறிப்புகள் என ஆங்காங்கே சில சுவாரஸ்யங்கள் தலைதூக்குகின்றன. தன் மகளை மீட்க வரும் தந்தையின் ஆற்றாமை, வஞ்சத்தைத் தெரிந்துகொண்ட டிராகனின் குரல், சிற்றன்னையின் அக்கறை எனச் சில உணர்ச்சிகரமான நிமிடங்களை இன்னும் அழுத்தமாகவும், முழுமையாகவும் எழுதியிருக்கலாம். ஆனால், பலவீனமான திரைக்கதையை நேர் செய்ய இவை எதுவுமே உதவவில்லை. தன் நேர்த்தியான நடிப்பால் கொஞ்சம் பதைபதைப்பைக் கடத்தி, அந்தக் குகைக்குள் நமக்குச் சிறிய அளவிலான வெளிச்சத்தைத் தருகிறார் மில்லி பாபி பிரவுன்.
ஒரு இளவரசி கதையை டிராகன், புராணக் கதை, பலிகொடுத்தல் எனச் சுற்றி வளைத்துச் சொல்ல முயன்று, அதற்குச் சுவாரஸ்யமற்ற பலவீனமான எழுத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு சர்வைவ் செய்யமுடியாமல் தவிக்கிறது இந்த `டாம்செல்’.
+ There are no comments
Add yours