சென்னை: “‘J.பேபி’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப் படமா என்றால், அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்தப் படம் எடுத்தது எங்களுக்கு மனநிறைவாக இருந்தது” என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ பட பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மனிதராகவும் அவர் மிக்க நல்ல குணம் கொண்டவர்.
அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறேன். அந்தப் படமும் அவருக்கு நம்பிக்கைகுரிய படமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சிறிய படங்களை வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை வெளியிடும் சக்திவேலனுக்கு நன்றிகள். அவரின் இந்த செயலை முக்கியமான விஷயமாக பார்க்கிறேன். காரணம் ‘J.பேபி’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமா என்றால் அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்தப் படம் எடுத்தது எங்களுக்கு மனநிறைவாக இருந்தது. பார்த்தவர்கள் படத்தை பாராட்டினார்கள். மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஆக, வணிக ரீதியான வெற்றியை விட, மக்கள் விரும்பும், யதார்த்தமான படைப்பாக இருக்கிறது என்பது ஒரு கலைஞனுக்கும், அதில் வேலைப்பார்த்தவர்களுக்கும் புதிய வாழ்க்கைப் பயணம் தொடங்குவதை உணர முடியும். ‘அட்டகத்தி’ படத்திலும் அப்படித்தான் நிறைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” என்றார்.