கொச்சி: “நான் மனமுடைந்து இருந்த அந்த தருணத்தில்தான் என் வாழ்வில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வந்தது. அப்போதுதான் வேறொரு படத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தேன்” என ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாசி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ரீநாத் பாசியின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் நான் கடினமான காலங்களை சந்தித்துக்கொண்டிருந்த போது இப்படம் எனக்கு கிடைத்தது. அப்படியான சமயத்தில் தான் ‘சுபாஷ்’ என்ற கதாபாத்திரம் என்னை நோக்கி வந்தது. அப்போதுதான் வேறொரு படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. என்னுடைய நடிப்பின் மீதான விமர்சனத்தால் என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள்.
நான் மனமுடைந்து இருந்த அந்தத் தருணத்தில்தான் என் வாழ்வில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வந்தது. படத்தில் நடித்த நடிகர்கள், மற்றும் படக்குழுவினரை என் குடும்பத்தில் உள்ளவர்களாக உணர்ந்தேன். மேலும் இப்படத்தில் பணியாற்றியது எனக்கு சிகிச்சையாக அமைந்தது.
படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதில் குகைக்குள் சிவப்பு விளக்குடன் நான் நடந்து செல்ல வேண்டும். அது உண்மையான குகை. அந்தக் காட்சியில் நடிக்கும்போது மிகவும் பயந்தேன். இருந்தாலும் மொத்த படக்குழுவும் எனக்கு ஆதரவாக இருந்தனர். ஒரு கட்டத்தில் நான் என் கதாபாத்திரத்தில் மூழ்கிவிட்டேன். முன்னதாக, நான் உண்மையான சுபாஷை நேரில் சந்தித்தேன். ஆனால், அவர் அந்த நிஜ சம்பவம் குறித்து எதுவும் கேட்க வேண்டாம் என சொல்லிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.