ஆள் நடமாட்டம் இல்லாத திரையரங்குக்கு இளம்பெண்ணை அழைத்துவந்து சில்மிஷம் செய்வது, தன்னுடைய நண்பர்களுக்கும் அப்படியான சூழலை அமைத்துத் தருவது என, முழுநேர வேலையாக இதனை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ரவி. இப்படி முகநூலில் பெண்கள் பெயரைப் பார்த்தாலே “Hi’ என மெசேஜ் அனுப்பி பேசத்துடிக்கும் அவருக்கு, மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசி என்ற இளம்பெண்ணின் நட்பு இணையத்தின் வழியே கிடைக்கிறது.
அந்த நட்பை வேறுவிதமாகப் பயன்படுத்த நினைக்கும் ரவி, அரசியின் பிறந்தநாளுக்கு நேரில் சந்திக்க அவரது ஊரான மயிலாடுதுறைக்குத் தன் நண்பருடன் பைக்கில் செல்கிறார். அங்கிருந்து அரசியும் ரவியும் தனியாகப் பூம்புகார் செல்கிறார்கள். இப்படி ஒரே நாளில் மதுரை, மயிலாடுதுறை, பூம்புகார் எனப் பயணிக்கும் கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற கதையை முதிர்ச்சியான அடல்ட் காமெடியாகத் தந்திருக்கிறார்கள்.
ரவியாக அதீத கோபம், பெண்கள் மீதான அவனது தவறான பார்வை, சிங்கிள் ஷாட்களை தாங்கி செல்லும் பக்குவம் என முதல் படத்திலே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது எரிச்சல் தரக்கூடிய ‘ச்’ கொட்ட வைக்கும் நடிப்பு, எதிர்மறை பாத்திரத்துக்கான நியாயத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறது. வெல்கம் செந்துர் பாண்டியன்! இவருக்கு இணையாகக் கடலை ரசிக்கும் காட்சிக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளை மென்சோகத்துடன் கண்களில் கடத்துவது, பதட்டமான சூழலிலும் அதைத் தெளிவாகவும் தைரியமாகவும் கையாளும் முகபாவனைகள் என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி ப்ரீத்தி கரண். இதேபோல சொற்பமான நபர்களே பிரேம்களை அலங்கரித்தாலும் அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். குறிப்பாக சுரேஷ் மதியழகன் மெடிக்கல் ஷாப் காட்சிகள், பைக் பயணம் ஆகியவற்றில் ஸ்கோர் செய்துள்ளார்.
+ There are no comments
Add yours