உலக வரலாற்றில் எத்தனையோ பெண்கள் எழுத்தாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும், சினிமா ஆளுமைகளாகவும் பரிணமித்துள்ளனர். இந்தியாவிலும் தங்கள் துறைகளில் சாதித்த ஏராளமான பெண் ஆளுமைகளை உதாரணமாக சொல்லமுடியும். குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்ததாக சொல்லப்படும் இந்திய திரைத்துறையில் பல்வேறு தடைகளையும் மீறி நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் உண்டு.
ஆனால் பெண்கள் பெயர் அதிகம் வெளிப்படாத தொழில்நுட்பத் துறையில் சாதித்தவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும். அந்த வகையில் இயக்குநர்களாக இந்திய திரைத் துறையை திரும்பிப் பார்க்க வைத்த பெண்களைப் பற்றி பார்க்கலாம்.
அபர்ணா சென்: வங்காள சினிமாவின் முக்கிய ஆளுமையாக அறியப்படும் அபர்ணா சென் இதுவரை 9 தேசிய விருதுகளை குவித்துள்ளார். 1981ஆம் ஆண்டு அபர்ணா சென் முதல்முறையாக இயக்கிய ‘36 சவுரிங்கீ லேன்’ படம் இவருக்கு சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுத் தந்தது. சமூக பிரச்சினைகளை மிக ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் திரையில் கொண்டு வருவதில் வல்லவரான அபர்ணா சென்னுக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்துள்ளது. ‘Mr. அண்ட் Mrs. ஐயர்’, ‘தி ஜப்பானீஸ் ஒய்ஃப்’, ‘சொனாட்டா’, ‘தி ரேப்பிஸ்ட்’ ஆகியவை அபர்ணாவின் கவனித்தக்க படைப்புகளில் சில.
தீபா மேத்தா: பாலின சமத்துவம் குறித்து பேசவே பலரும் தயங்கிய காலகட்டத்தில் ’ஃபயர்’ (1994) என்ற படத்தை எடுத்து நாட்டையே பரபரப்பாக்கியவர். தன்பாலின் ஈர்ப்பாளர்கள் குறித்த காட்சிகளை மிக துணிச்சலுடன் வைத்து கவனம் ஈர்த்தவர். இன்று வரை இந்தியாவில் வெளியாகும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த படங்களுக்கு தீபாவின் படமே முன்னோடியாக அறியப்படுகிறது. இவரது அடுத்தடுத்த படங்களான ‘எர்த்’, ‘வாட்டர்’ ஆகிய படங்களுமே சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விஷயங்களை துணிச்சலுடன் கையாண்டன. இதில் ’வாட்டர்’ திரைப்படம் சிறந்த அயல்மொழி திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கொன்கனா சென் சர்மா: கொன்கனாவை ஒரு அற்புதமான நடிகையாக நாம் அறிந்திருக்கிறோம். ‘Mr. அண்ட் Mrs. ஐயர்’, ’வேக் அப் சித்’, ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என பல படங்களிலும் மெச்சத்தகுந்த நடிப்பை வழங்கியிருந்தாலும், ஒரு திறன்மிகு இயக்குநராக அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. விக்ராந்த் மாஸ்ஸே, திலோத்தமா ஷோம் நடிப்பில் கொன்கனா இயக்கி ‘A Death in the Gunj’ திரைப்படம் விமர்சனரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டது. அண்மையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ‘தி லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற ஆந்தாலஜியில் பெரிய அளவில் கவனம் பெற்ற ஒரே படம் கொன்கனா இயக்கிய ‘தி மிரர்’ மட்டுமே. ‘
நந்திதா தாஸ்: ’அழகி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நந்திதா தாஸ், ஏற்கெனவே ‘ஃபயர்’, ‘எர்த்’ உள்ளிட்ட படங்களின் வழியே ஒரு நடிகையாக இந்தியா முழுவதும் பிரபலமாகியிருந்தார். 2002 குஜராத் கலவரத்தை மையமாகக் கொண்டு நந்திதா இயக்கிய ‘ஃபிராக்’ திரைப்படம், அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இரண்டு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை குவித்த இப்படம் குஜராத்தில் தடை செய்யப்பட்டது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் சாதர் ஹசன் மண்ட்டோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய ‘மண்ட்டோ’ படம் பயோபிக் படங்களுக்கு ஓர் உதாரணமாக திகழ்கிறது.
சுதா கொங்காரா: தமிழ் திரைத் துறையில் ஒரு பெண் இயக்குநர் ஆவது என்பதே ஒரு பெரும்பாடு. அப்படியும் ஓரிருவர் இயக்குநராக அவதாரம் எடுத்தாலும் அத்துறையில் நீடிப்பது குதிரைக் கொம்பான விஷயம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சொற்பான பெண் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் சுதா கொங்காரா. 2010ல் வெளியான ‘துரோகி’ படம் மூலம் கவனம் பெற்ற சுதா, மாதவன் நடித்த ‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்த சூர்யாவை வைத்து சுதா இயக்கிய ‘சூரரைப் போற்று’ பெற்ற அங்கீகாரங்கள் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இப்படத்தை இந்தியிலும் தற்போது ரீமேக் செய்து வருகிறார்.
அஞ்சலி மேனன்: மலையாள சினிமா உலகில் மிக முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவர். இவரது ‘பெங்களூர் டேஸ்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’ ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் நேர்த்தியான திரைக்கதை, அழுத்தமான காட்சியமைப்புகளை கொண்டிருக்கும். நடிகர் துல்கர் சல்மானின் திரைப் பயணத்தை ஒரு படி முன்னே கொண்டு சென்றதில் இந்த இரண்டு படங்களுக்கும் பெரிய பங்குண்டு.
ஹலீதா ஷமீம்: தமிழின் மற்றொரு மிக முக்கிய பெண் இயக்குநர். இவர் எழுதிய இயக்கிய ‘பூவரசம் பீப்பீ’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’ ஆகிய படங்கள் உறவுகளுக்கு இடையிலான மெல்லிய உணர்வுகளை மிக யதார்த்தமாக பேசுபவை. இவரது அடுத்த படமான ‘மின்மின்’ கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கதை மாந்தர்களின் வளார்ச்சிக்காக 7 ஆண்டுகள் காத்திருந்து கடந்த 2022ஆம் இந்த படத்தை மீண்டும் தொடங்கினார் ஹலீதா.
ஸோயா அக்தர்: ’ஸிந்தகி நா மிலேகி டோபரா’, ‘கல்லிபாய்’ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். இப்படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றவை. ‘கல்லிபாய்’ சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மேட் இன் ஹெவன்’ தொடரை இயக்கியவர்களில் ஸோயாவும் ஒருவர்.
ஃபரா கான்: கமர்ஷியல் படங்களில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் ஃபரா கான். நடன இயக்குநராக சினிமாவுக்குள் நுழைந்தவர் இன்று தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். ஷாரூக் கானை வைத்து இவர் இயக்கிய ‘மெய்ன் ஹூன் நா’, ‘ஓம் சாந்தி ஓம்’ ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வசூலை குவித்தவை. இவை தவிர் ஃபரா இயக்கிய ‘டீஸ் மார் கான்’, ‘ஹேப்பி நியூ இயர்’ படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற்றவை.