தடையில்லாமல் வெளியான திலீப்பின் ‘தங்கமணி’
07 மார், 2024 – 12:14 IST
திலீப் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘தங்கமணி’ திரைப்படம் இன்று(மார்ச் 7) வெளியாகி உள்ளது. கதாநாயகியாக நடித்துள்ளதன் மூலம் நடிகை பிரணீதா சுபாஷ் மலையாள திரையுலகில் முதன்முறையாக அடி எடுத்து வைத்துள்ளார். கேரளாவில் உள்ள தங்கமணி என்கிற கிராமத்தில் 90களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது.
அதேசமயம் இந்த படத்தின் டிரைலர் வெளியானபோது, தங்கமணி கிராமத்தை சேர்ந்த ஒருவர் இந்த படத்தில் எங்கள் ஊரை பற்றி தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியானால் எங்கள் ஊரின் மீதான மதிப்பு மற்றவர்கள் பார்வையில் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் இந்த படத்தில் சர்ச்சை மிகுந்த காட்சிகளை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் இன்னும் சென்சார் செய்யப்படாத இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்துவிட்டு அது குறித்து கருத்து தெரிவித்த பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் படத்தில் தடை செய்யும்படியாக எந்த காட்சிகளும் இல்லை என சென்சார் தரப்பில் சொல்லப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்தவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதனால் கடைசி நேரத்தில் தங்கமணி திரைப்படம் தடையில்லாமல் வெளியாகி உள்ளது.
+ There are no comments
Add yours