மிக்ஜாம் புயலின் போது சென்னை, நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய ரசிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார் சூர்யா.
இந்த நிகழ்ச்சியில் புதிதாகத் திருமணமான மன்ற நிர்வாகிகளை வாழ்த்தியிருக்கிறார். மேலும் மன்ற நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார் சூர்யா.
கடந்த சில மாதங்களுக்கு முன் சூர்யா தனது பிறந்தநாளையொட்டி ரத்த தானம் செய்த ரசிகர்களை நேரில் வரவழைத்து பாராட்டி மகிழ்ந்தார். இனி தானும் ரத்ததானம் செய்வதாகவும் அவர்களிடம் சொல்லியிருந்தார். அதன் பிறகு மீண்டும் ரசிகர்களை சந்தித்திருக்கிறார். மிக்ஜாம் புயல் வெள்ளத்தின்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி எனப் பல மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யாவின் ரசிகர்கள் பலர் நிவாரண உதவிகளை வழங்கினார்கள். அவர்களில் சிறப்பாக சேவை செய்த பலரை பாராட்ட நினைத்தார் சூர்யா. அவர்களை சென்னைக்கு அழைத்து விருந்து வைத்து கௌரவித்திருக்கிறார். இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சென்னை சுற்றுவட்டார இடங்களில் இருந்து 100 பேரும், நெல்லை சுற்றுவட்டாரத்திலிருந்து 100 பேருமாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மன்ற நிர்வாகிகள் பலருக்கும் அவர்களது குடும்பத்தினருடம் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
வந்திருந்த அனைவருடனும் தனிப்பட்ட முறையில் பேசிய சூர்யா, மதிய உணவும் பரிமாறினார். பின்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கு ”வேலை வேலை என்று பணம் சம்பாதிக்க ஓடுபவர்கள், குடும்பத்தையும் மனதில் வைத்துக்கொண்டு வேலை செய்யவும். பெண்கள்தான் வீட்டில் பொறுப்பாக நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதுடன், குழந்தைகளையும் பொறுப்போடு வளர்க்கிறார்கள். எனவே வீட்டிற்கும் நேரம் ஒதுக்குங்கள். மழை, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நீங்கள் செய்த உதவி மகத்தானது. இப்படி சேவை செய்வது பெரிய விஷயம்.” என்றும் கூறி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார் சூர்யா.
+ There are no comments
Add yours