ஆனால், தனது 13-வது வயதிலேயே டியூன் நாவலைப் படித்து அந்த எதிர்கால உலகால் கவர்ந்திழுக்கப்பட்டவர்தான் டெனிஸ் வில்நௌ. அப்போதே மனதிற்குள் இதற்கான மொத்தத் திரைக்கதையையும் ஸ்டோரி போர்டு செய்து வைத்துவிட்டார். அவரது கனவு நனவான ஆண்டு 2021. கொரோனா தாமதம், ஓடிடியில் அதே நாளில் ரீலிஸ் எனப் பல தடைகள். இருந்தும் டியூன் முதல் பாகம் வசூலிலும் சக்கைப் போடு போட்டது. ஆறு ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. டியூன் நாவலை எழுதும்போது ஃபிராங்க் ஹெர்பெர்ட்டின் எண்ணவோட்டத்தில் என்ன மாதிரியான காட்சிகள் விரிவடைந்தன என்பது நமக்குத் தெரியாது. ஆனால், டெனிஸ் வில்நௌவின் திரைமொழி அனைவரையும் இருக்கைகளில் கட்டிப்போட்டு அராக்கிஸ் கிரகத்துக்குக் கூட்டிப்போனது. ஓடிடியில் வெளியான போதும் பெரிய திரையில் மிஸ் பண்ணக்கூடாத படம் என ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வர வைத்தது. முடியாததை முடித்துக் காட்டியவராக முன்னணி இயக்குநர்களின் வரிசையில் இன்னும் முன்னேறினார் வில்நௌ.
இப்படியான சிறப்பான முதல் பாகத்தை மிஞ்சும் இரண்டாம் பாகத்தைக் கொடுப்பது இன்னும் பெரிய சவால். அதையும் ஏற்று வெற்றிகண்டிருக்கிறார் டெனிஸ் வில்நௌ. அட்ரெய்டீஸ் குடும்பத்தில் மிஞ்சிருக்கும் வாரிசான பால் அட்ரெய்டீஸ், ஃப்ரேமேன் இன மக்களின் உதவியுடன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும் என நினைக்கிறான். ஃப்ரேமேன் மக்களோ தங்களைக் காக்க வந்த மீட்பன் இவன்தான் என நம்புகிறார்கள். அந்த தீர்க்கதரிசனக் கதையே அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தனது தாயாரின் பெனே ஜேசரட் என்ற மத அமைப்பு கட்டமைத்ததுதான் என்பதை அறிந்த பால் அதிலிருந்து விலகி நிற்கிறான். ஃப்ரேமேன் மக்களில் ஒருவனாகப் பால் ஏற்றுக்கொள்ளப்பட்டானா, பழிவாங்கும் படலம் அரங்கேறியதா இல்லையா என்பதே இரண்டாம் பாகத்தின் கதை.
பால் அட்ரெய்டீஸாக டிமதி சாலமே கடந்த பாகத்தை விடவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் தேவையும் அதுவே. அவர் தோள்களில்தான் மொத்த படமும் பயணிக்கிறது. அவரின் ஃப்ரேமேன் காதலி சானியாக ஜெண்டயா. ஒருபுறம் பாலை காதலித்தாலும் மீட்பர் கதையில் துளியும் நம்பிக்கையில்லாமல் தனக்கான அரசியலில் தெளிவாக இருக்கும் வலுவான போராளியாகக் கவர்கிறார். அமைதியாக பின்னணியில் சதிகளை தீட்டும் பால் அட்ரெய்டீஸின் அம்மாவாக வரும் ரெபேக்கா பெர்குசன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். சீரியஸான கதாபாத்திரம் என்றாலும் ஸ்டில்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாவியார் பார்டெம் மீட்பர் கதையில் முழு நம்பிக்கை கொண்ட ஆளாக அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். இவர்கள் அல்லாமல் புதிதாக இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் ப்ளோரென்ஸ் பக், கிறிஸ்டபர் வாக்கென், ஆஸ்டின் பட்லர் என அனைவருமே படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்கள். அதிலும் ஆஸ்டின் பட்லர் உடல்மொழியிலேயே வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
+ There are no comments
Add yours