புதுச்சேரி (நம்பவேண்டும்) செயின்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஹெச்.டி-யை முடித்து பட்டம் வாங்க முயன்று கொண்டிருக்கிறார் பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்). அவருக்குப் பக்கபலமான தோழியாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்). அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவராக நுழைகிறார் யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). பிரபு செல்வனுக்கும் இவருக்கும் இறந்த கால பகை. அந்த மோதல் நிகழ்காலத்திலும் போராக வெடிக்கிறது. மறுபுறம் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவருக்கான தேர்தல் தொடர்பாக காயத்ரிக்கும் (டி.ஜெ.பானு) அரசியல்வாதி மற்றும் கல்லூரி டிரஸ்ட்டியின் மகளான சூர்யாவுக்கும் (அம்ருதா ஸ்ரீனிவாசன்) முட்டிக்கொள்கிறது. இப்படிப் பல்வேறு “கிளைக்கதைகள்” கொண்ட போர்க்களமான கல்லூரியின் கதையே இந்த `போர்’.
அடிதடி, சண்டை, கோபம் என எனெர்ஜியான கல்லூரி மாணவராகச் சிறப்பாகப் பொருந்திப் போகிறார் அர்ஜுன்தாஸ். இருந்தும் ரொமான்ஸ் காட்சிகளில் காதலின் ஜீவன் மிஸ்ஸிங். மற்றொரு நாயகன் காளிதாஸ் ஜெயராம் முதல்பாதிவரை கல்லூரியில் என்ன படிக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஹாஸ்டல் பாயாக இருக்கும்போது இன்ஜினியரிங் தொடர்பான படிப்போ என நினைக்க வைத்தவர், திடீரென டாக்டர் கோட் போட்டுக்கொண்டு மருத்துவ மாணவராக வலம்வருவது சர்ப்ரைஸ். (திரைக்கதையில் இன்னும் தெளிவுபடுத்தியிருக்கலாம்.) நடிப்பைப் பொறுத்தவரைக் காதல் முதல் கோபம் வரை அனைத்து உணர்ச்சிகளையும் பிரமாதமாகக் கையாண்டுள்ளார். அவரின் பாத்திரமே ஆங்காங்கே காமெடிக்கும் உதவியிருப்பது சிறப்பு.
இரு ஆண்களுக்கு நடுவே நடக்கிற கதையாக இருந்தாலும் பெண் கதாபாத்திரங்களுக்கும் அதிக திரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது ஆரோக்கியமான விஷயம். அதில் ரிஷ்விகாவாக சஞ்சனா நடராஜன் சிறப்பாக ஸ்கொர் செய்துள்ளார். டி.ஜெ.பானு, நித்யஸ்ரீ ஆகியோரும் தங்களுக்கான பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள். அதில் டி.ஜே.பானுவின் லிப் சின்க் பிரச்னைகளைக் கவனித்திருக்கலாம். எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ள அம்ருதா ஸ்ரீனிவாசன் இன்னும் ஆழமானதொரு நடிப்பை வழங்கியிருக்கலாம். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வித்தியாசமாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பது சிறப்பு. ஆனால் அவை மேம்போக்காக மட்டுமே அணுகப்பட்டிருப்பது சறுக்கல்.
இந்தப் படத்தை அறிமுகம், களம், பகை, மையல், முரசொலி, விழா, போர் என ஏழு அத்தியாயங்களாகப் பிரித்துத் தந்துள்ளார் இயக்குநர் பிஜோய் நம்பியார். இதில் முதல் அத்தியாயத்திலேயே அதன் பெயரைப்போல எல்லா கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கதைக்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்த்தோமேயானால், ‘அப்படியெல்லாம் நினைக்காதீங்க பாஸு! ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் புது புது கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து, புது புது கிளைக்கதைகளாக அறிமுகம் செய்வோம்’ என்று பதற வைக்கிறார்கள். இதுவே படத்துக்குச் சிக்கலாகவும் மாறியுள்ளது. காரணம், யாரைப் பின்தொடர்வது என்ற குழப்பம் படம் முழுக்கவே தொடர்கிறது.
சிங்கிள் ஷாட்கள் அதில் ஆங்காங்கே வரக்கூடிய `ப்ளர்ஸ்’ (Blurs) எனப் புதுவிதமான எஃபெக்ட்டுடன் படம் முழுக்கச் சிறப்பான ஒளியுணர்வை செட் செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜிம்ஷி காலிட் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கர் டிசோசா. பிரியங்க் பிரேம் குமாரின் படத்தொகுப்பில் வெப் சீரிஸ் கண்டன்ட்டை படமாகச் சுருக்குவதில் இருக்கும் தடுமாற்றம் தெரிகிறது. இருந்தும் வித்தியாசமான எடிட் பேட்டர்ன் தனிக்கவனம் பெறுகிறது.
ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன் மற்றும் கௌரவ் கோட்கிண்டியின் பின்னணி இசை படத்தின் கலகலப்பான இடங்களில் துள்ளலாகவும், மென்மையான தருணங்களில் மெல்லிசையாகவும் உணர்வுபூர்வமாக இசைந்துள்ளது. சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி ஆகியோரின் கூட்டணியில் பாடல்களில் இளமைத் துள்ளல். ரிப்பீட் மோடுக்கான ஆர்வம்தான் வரவில்லை. கற்பனையான ஒரு பல்கலைக்கழக வளாகம் என்றாலும் கலை இயக்குநர்களான லால்குடி இளையராஜா, மானசி சாவரேவின் உழைப்பு பல இடங்களில் கவனிக்க வைக்கிறது. குறிப்பாக ஓப்பன் திரையரங்கு பற்றி எரிகிற காட்சியைச் சொல்லலாம்.
மன அழுத்தம், தற்கொலை குறித்த எண்ணம், சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் காட்டும் சாதிய பாகுபாடு, ஆண் ஆதிக்கம் என எக்கச்சக்க பிரச்னைகளை ஒரே படத்தில் பேச முற்பட்டிருக்கிறார்கள். இதில்தான் பிஜாய் நம்பியார், மிதிலா ஹெக்டே, பிரான்சிஸ் தாமஸ், நீல் ஜூலியன் பால்தாசர் அடங்கிய திரைக்கதை கூட்டணி சறுக்கியிருக்கிறது. ஏனெனில் மிக ஆழமாகப் பேசவேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தாமல் மேம்போக்காகவே கையாண்டிருக்கிறார்கள். போதிய நேரமின்மைதான் காரணமென்றால் இதை வெப்சீரிஸாக தெளிவாகவே பேசியிருக்கலாமே?!
அதே போல ‘குரல்’ என்கிற அமைப்பின் மூலம் அநியாயத்தைத் தட்டி கேட்கும் டி.ஜெ.பானு, தன்னைச் சுற்றி போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற நண்பர் கூட்டத்தைத் தட்டிக் கேட்காதது ஏன்; வெளியாளான அவர், எப்படி மாணவர்களுடன் கல்லூரி வளாகத்திலேயே பழகுகிறார்; யார், யார் என்ன படிக்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்காமல் ஏன் இத்தனை குழப்பம் என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இதற்கு நாமே ஏதாவது ஒன்றைப் புரிந்து கொண்டு அடுத்த காட்சிக்கு நகர்வதற்குள் கல்லூரி வளாகமே நம் மனதைத் துருத்திக்கொண்டே இருக்கிறது. அளவுக்கு அதிகமான கஞ்சா, புகையிலை, மது என்பவை மட்டுமே பிரதானமாகக் காட்டப்படுகின்றன. இந்த மாதிரி பல்கலைக்கழகமெல்லாம் நடைமுறையில் எங்கு இருக்கிறது என்பதையும் இயக்குநர் பிஜோய் நம்பியார் விளக்கியிருக்கலாம். தற்கால இளைஞர்களின் கதை என்றாலே அளவுக்கதிகமான போதை வஸ்துக்கள் இடம்பெற்ற ஆகவேண்டும் என்பதே ஒரு வித அதீத கற்பனைதான்!
மொத்தத்தில் இரு நபர்களின் தனிப்பட்ட பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள, ‘போர்’ போல ஒரு சண்டைக்காட்சியைக் கட்டமைக்க, ஏழு அத்தியாயங்களை மேலோட்டமாக எழுதி அதை அக்கப்போராகத் தந்திருப்பதே இந்த ‘போர்’.
+ There are no comments
Add yours