ரசிகர்களை மீண்டும் பரவசப்படுத்தும் கண்மணி அன்போடு… பாடல்

Estimated read time 1 min read

ரசிகர்களை மீண்டும் பரவசப்படுத்தும் ‘கண்மணி அன்போடு…’ பாடல்

01 மார், 2024 – 14:12 IST

எழுத்தின் அளவு:


The-song-Kanmani-Anbodu...-will-thrill-the-fans-again

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்கள் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமா கடந்து தென்னிந்திய சினிமா, ஹிந்தி சினிமா என மற்ற மொழி ரசிகர்களையும் வசப்படுத்தியவர்கள்.

காலம் கடந்தும் அவர்களது சினிமா நிற்கிறது, இன்றைய ரசிகர்களையும் பரவசப்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் கடந்த வாரம் வெளிவந்த ‘மஞ்சும்மேல் பாய்ஸ’ மலையாளத் திரைப்படம்.

சந்தானபாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ரோஷினி மற்றும் பலர் நடிப்பில் 1991ம் ஆண்டு தீபாவளி நாளில் நவம்பர் 5ம் தேதி வெளிவந்த படம் ‘குணா’. அதற்குப் போட்டியாக ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த ‘தளபதி’, சத்யராஜ் நடித்த பிரம்மா, விஜயகாந்த் நடித்த ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ராமராஜன் நடித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’, பிரபு நடித்த ‘தாலாட்டு கேக்குதம்மா’, பாக்யராஜ் நடித்த ‘ருத்ரா’, ராம்கி நடித்த ‘என் பொட்டுக்கு சொந்தக்காரன்’, சிவகுமார் நடித்த ‘பிள்ளைப் பாசம்’ ஆகிய படங்கள் வெளிவந்தன.

அத்தனை படங்களில் ‘குணா, தளபதி’ ஆகிய படங்கள் இன்றளவும் கொண்டாடப்படும் படங்களாக இருக்கிறது. வசூல் ரீதியாக ‘குணா’ படம் வெற்றிப் படமில்லை. ஆனால், தற்போதும் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது. 90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸ்களையும் அப்படங்கள் ரசிக்க வைத்துள்ளன. அவற்றில் தற்போது ‘குணா’ படத்தை ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படம் மீண்டும் வியக்க வைத்து கொண்டாட வைத்துள்ளது.

‘குணா’ படத்தில் இடம் பெற்று பின் ‘குணா குகை’ என அழைக்கப்படும் அளவிற்கு கொடைக்கானலில் உள்ள அந்த குகைகதான் ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படத்தின் முக்கிய கதைக்களமாக அமைந்துள்ளது. ‘குணா’ படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடலை ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெற வைத்த விதம் ரசிகர்களை உணர்வுபூர்வமாக ஆக்கியுள்ளது. படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டி பாராட்ட வைத்துள்ளது.

33 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அப்பாடல் பற்றிய பல தகவல்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ரிக்கார்டிங்கின் போது இளையராஜா, கமல்ஹாசன் ஆகியோர் பேசிக் கொண்ட ஒலிப்பதிவு, படத்தின் இயக்குனர் சந்தானபாரதியின் பேட்டி என பலவிதத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இளையராஜாவின் இசையில் வாலியின் வரிகளில் கமல்ஹாசன், எஸ் ஜானகி பாடியுள்ள பாடலும், ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது….’ வரிகளும் இப்போதும் ரசிகர்களை புல்லரிக்க வைக்கிறது.

தமிழகத்தில் ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்க ‘குணா’ படமும், அந்தப் பாடலும்தான் முக்கிய காரணம். கமல்ஹாசனை சந்தித்து விட்ட படக்குழுவினர் அடுத்து இளையராஜாவையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours