தமிழ் சினிமாவின் 90ஸ் கிட்ஸ், 80-ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய படங்கள். இப்போது மீண்டும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சில மாதங்களுக்கு முன் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்திற்குக் கிடைத்த பிறகு, திரையரங்குகள் நாஸ்டாலஜியாக பல படங்களை மீண்டும் ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கலைப்புலி தாணு கமலின் ‘ஆளவந்தான்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்தார். தனுஷின் ‘3’, ‘மயக்கம் என்ன’, ரஜினியின் ‘பாபா’, ‘முத்து’ ஆகிய படங்களும் மறுபடியும் வெளியாகின. மல்டி பிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ 750 நாட்களுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்தப் படம் வெளியாகி 14வது ஆண்டையும் கொண்டாடி வருகின்றன. சமீபத்திய காதல் தின ஸ்பெஷலாக ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’, ’96’, மலையாளத்தில் ‘பிரேமம்’ என பல படங்கள் இப்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகின்றன. சின்ன பட்ஜெட்டில் தயாரான படங்களுக்கு கூட்டம் வருவதில்லை என்ற நிலை தொடரும் இந்தக் காலகட்டத்தில், பழைய படங்கள் மீண்டும் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. அஜித்தின் ‘வாலி’, , ‘பில்லா’, ஆகிய படங்கள் இப்போது மல்டி பிளக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளன.
மார்ச் முதல் வாரத்தில் ‘போர்’, ‘ஜோஸ்வா’, ‘மங்கை’, ‘அதோமுகம்’, ‘சத்தமின்றி முத்தமா’, ‘தோழர் சேகுவேரா’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த புத்தம் புது ரிலீஸுடன் விஜய்யின் ‘ஷாஜகான்’, பிரபுதேவாவின் ‘மின்சாரக் கனவு’, அஜித்தின் ‘காதல் மன்னன்’ ‘சிட்டிசன்’, கே.வி.ஆனந்தின் ‘கோ’ ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
ஜீவாவிற்கு ‘சிவா மனசுல சக்தி’ வெளியானது. இத்தகைய படங்களில் கதைகளும், பாடல்களும் ஆல்டைம் ஃபேவரைட் ஆக உள்ளது. பல படங்கள் 4K தொழில்நுட்பத்தில் வெயாகின்றன. ‘ஆளவந்தான்’ படத்தைத் தொடர்ந்து தாணுவும் தான் தயாரித்த ‘சச்சின்’, ‘காக்க காக்க’ ஆகிய படங்களை ரீ-ரிலீஸ் செய்கிறார். விஜய்யின் ‘கில்லி’யும் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.
இதுகுறித்து விநியோகஸ்தரும், தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளருமாக இருக்கும் திருப்பூர் எம்.சுப்ரமணியத்திடம் பேசினேன். ”ரீ ரிலீஸ் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கக் காரணமே, அந்தப் படங்களின் கதைகளுக்குக் கிடைத்த வரவேற்புதான். நல்ல கதை இருக்கு. பாடல்களும் மனதை வருடக்கூடிய பாடல்களா இருக்கு. இப்பவும் ஜனங்க கதையை தான் கொண்டாடுகிறாங்க. அதுக்கு உதாரணம், சமீபத்தில் வெளியான பிரம்மயுகம்’, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘பிரேமலு’ மலையாளப் படங்களும் பெரும் வரவேற்பை அள்ளியிருக்கு. இந்தப் படங்கள்ல கதைதான் ஹீரோ. அதிலு என் திரையரங்கில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் ஏழு ஷோ ஓடுகிறது. ஏழு ஷோவும் ஹவுஸ் ஃபுல்லாகிறது.
இப்ப ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் படங்கள் அனைத்தும் அப்பவும் வசூலில் மாபெரும் வெற்றியடைந்த படங்கள்தான். இப்பவும் வசூலை வாரிக் குவிக்கும் படங்களா அமையக் காரணம் இந்தப் படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்கள் கதையைக் கேட்டு, அந்தக் கதைக்குப் பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்ததுதான். அதன் வெற்றிக்கு முக்கியமான காரணம். இப்ப ஹீரோக்கள்தான் கதை கேட்குறாங்க. அதனால அவங்க கதையைவிட, தங்களுக்கான பில்டப்புகளும், ஹீரோயிசத்திலுமே கவனம் செலுத்துறாங்க. அதனாலதான் யார் நடிச்சாலும் வரவேற்பைப் பெறாமல் போயிடுது.
ரீ-ரிலீஸ் படங்களுக்கு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயாக இருப்பதால் தான் கூட்டம் வருகிறது என்கிறார்கள். அதைப் போல சின்ன பட்ஜெட் படங்களுக்கு 50 ரூபாய் டிக்கெட் கட்டணம் வைத்தால், கூட்டம் வரும் என்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லை. சில சின்ன பட்ஜெட் படங்களுக்கு கட்டணமே இல்லாமல் சும்மா கூப்பிட்டால் கூட, தியேட்டருக்கு கூட்டம் வருவதில்லை என்பதுதான் உண்மை. ரீ-ரிலீஸ் படங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பைப் பார்த்த பிறகாவது ஹீரோக்கள் இனி கதையில் கவனம் செலுத்துங்கள்.” என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
+ There are no comments
Add yours