கர்ப்பமான தனது மனைவி ஜெனிஃபரை (மிர்னா) மலைப் பிரதேசத்திலிருக்கும் ஒரு பர்த்திங் வில்லேஜுக்கு அழைத்துச் செல்கிறார் ராணுவத்தில் லெஃப்டினன்ட்டாக இருக்கும் டேனியல் (ஷபீர் கல்லராக்கல்). பேறுகால உதவியாளர் மூலம் இயற்கையான முறையில் குழந்தையைப் பெற்றெடுக்கும் முனைப்பில் இதற்கு இசைகிறார் ஜெனிஃபர். ஆனால், பர்த்திங் வில்லேஜில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்களால் அவருக்கு அதை நிர்வகிப்பவர்கள் மீதும், தன் கணவர் மீதும் பயமும் சந்தேகமும் ஏற்படுகின்றன. மறுபுறம் டேனியலுக்கும் போரில் நடந்த சம்பவங்களால் மனதளவில் பாதிப்பு (PTSD) இருப்பது தெரியவருகிறது. இறுதியில் ஜெனிஃபர் குழந்தையைப் பெற்றெடுத்தாரா, பர்த்திங் வில்லேஜ் நிர்வாகிகள் மற்றும் டேனியலின் உண்மையான நோக்கம் என்ன என்பதுதான் இந்த `பர்த்மார்க்’.
டேனியலாக ‘டேன்சிங் ரோஸ்’ ஷபீர். உளவியல் சிக்கல், மனைவி மீதான அக்கறை, ராணுவ வீரனுக்கான கோபம் என நடிப்புத் திறனை வெளிப்படுத்த ஏதுவாக பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரம். தொடக்கத்தில் சரியான மீட்டரில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி மிரட்டுபவர் ஒரு கட்டத்திற்குப் பிறகு ஓவர்டோஸ் மோடுக்குச் சென்றுவிடுகிறார். அவரது கதாபாத்திரம் பூடகமாகவே அணுகப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் மிர்னாவின் நடிப்புதான். ஜெனிஃபர் என்ற கர்ப்பிணி பாத்திரத்தைச் சிறப்பாக உள்வாங்கி அதற்குத் தேவையான நடுக்கம், சந்தேகப் பார்வை, தயக்கம் எனப் பலவற்றைப் படு யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். பிரச்னைகளை மிரட்டலாகக் கையாளும் இடத்திலும் அதற்குரிய உணர்வுகளைக் கச்சிதமாகத் திரையில் கடத்தியிருக்கிறார்.
உதவியாளராக, பேச்சுத் திறனில் சவால் உள்ளவராக இந்திரஜித்தின் நடிப்பு கதைக்குத் தேவையானதைச் செய்திருக்கிறது. பேறுகால உதவியாளராக தீப்தி, திருநங்கை மருத்துவராக (பேராமெடிக்) பொற்கொடி, பர்த்திங் வில்லேஜை நிர்வகிப்பவராக பி.ஆர்.வரலட்சுமி ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்துபோகிறார்கள். இவற்றுள் பொற்கொடி மட்டும் ‘ஆம்பிளை டாக்டர்ட்ட தயங்காம உடம்பைக் காட்டுவீங்க, என்கிட்ட காட்ட மாட்டீங்களா?’ எனக் கேட்கும் இடத்தில் கவனிக்க வைக்கிறார்.
காலடி படாத டூரிஸ்ட் ஸ்பாட்/காட்டுப் பங்களா/மலைப் பிரதேசம். ஒரு நண்பர்கள் குழுவோ, கணவன் மனைவியோ அங்கு மகிழ்ச்சியுடன் செல்வார்கள். அங்கு அடுத்தடுத்து நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களில் மாட்டிக்கொள்வார்கள். ஹாலிவுட் படங்களில் பார்த்துப் பழகிய இதே டெம்ப்ளேட்டை இங்கு கர்ப்பமான மனைவி, உளவியல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கணவர், இயற்கை முறையில் பிரசவம் எனக் கொஞ்சம் மாற்றியமைத்து ஒரு த்ரில்லர் படைப்பாகத் தர விரும்பியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன். ஆனால், படத்தின் பிரதான பிரச்னையே தெளிவில்லாத திரைக்கதைதான்.
போரிலிருந்து வந்திருக்கும் நாயகன், செல்போன் பயன்படுத்தாத கதை மாந்தர்கள் என்பதை வைத்து நாமே படம் நடக்கும் காலம் 90களின் இறுதிப்பகுதி என்பதாக அனுமானம் செய்யவேண்டியிருக்கிறது. ஒருபுறம் நாயகனின் உளவியல் சிக்கல்கள், பர்த்திங் சென்டரில் நடக்கும் சில சம்பவங்கள் அமானுஷ்யமாகப் புலப்படுவது, நாயகன் – நாயகியின் மனதில் ஓடும் எண்ணங்களைச் சுவர்கள் இல்லாத கறுப்பு வெள்ளை வெளியில் காட்சிப்படுத்தியது, பிரார்த்தனைக் கூடம் என்பதாக வெறுமையான வெள்ளை அறையைக் காட்டுவது என ஐடியாக்களாக சில சுவாரஸ்யங்களுடனே தொடங்குகிறது படம். ஆனால் இவை அனைத்துமே இருளில் காணாமல் போகும் அந்த பர்த்திங் வில்லேஜின் அழகு போலத் திரைக்கதையின் குழப்ப முடிச்சுகளில் காணாமல் போகின்றன.
முழுநீளப் படத்தை அத்தியாயங்களாகப் பிரித்துக் கதை சொல்வது சுவாரஸ்யமான யுக்திதான். ஆனால், அதற்கு வலுவான காரணங்களும், தேவையும் இருப்பது அவசியம். ‘பர்த்மார்க்’கில் அதற்கான தேவை என்ன என்பது திரைக்கதை அமைத்த விக்ரம் ஸ்ரீதரனுக்கும், ஸ்ரீராம் சிவராமனுக்குமே வெளிச்சம். அத்தியாயங்களுக்கு வித்தியாச வித்தியாசமாகப் பெயர் வைத்த நேரத்தைத் திரைக்கதையை இன்னும் செழுமைப்படுத்தப் பயன்படுத்தியிருக்கலாம்.
உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு கார் பயணம், மலைப் பிரதேசம், அழகு ப்ளஸ் அமானுஷ்யம் கலந்த பர்த்திங் வில்லேஜ், க்ளைமாக்ஸில் வரும் அந்த ஏரி என எல்லாவற்றையும் சிரத்தையுடனும் அழகியலுடனும் காட்சிப்படுத்தியிருக்கிறது. இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பில் குறைகள் இல்லை என்றாலும் அக உணர்வுகளை வெளிப்படுத்தும் குறியீட்டுக் காட்சிகளில் இன்னும் தெளிவு இருந்திருக்கலாம். விஷால் சந்திரசேகரின் இசையில் ‘போர் தீருமா’, ‘பறந்து போ’ பாடல்கள் ஆறுதல். உளவியல் ரீதியாக அடர்த்தியானதொரு கன்டென்ட்டுக்கு ஏற்ற மிரட்டலான பின்னணி இசையையும் அமைத்திருப்பது படத்துக்குப் பலமாக மாறியிருக்கிறது.
குடிப்பழக்கத்தால் வரும் பிரச்னை, ஒரு ராணுவ வீரனுக்குப் போரால் ஏற்படும் உளவியல் பாதிப்பு, கர்ப்பமான மனைவி ஆதரவில்லாத நிலையை அடையும்போது வெளிப்படுத்தும் உணர்வுகள் என நேரடியாகச் சொல்லவே கதையில் அத்தனை விஷயங்கள் இருக்கின்றன. இருந்தும், அக உணர்வுகளைக் காட்டுகிறேன் என்பதாகக் குறியீட்டுக் காட்சிகளை வம்படியாக த்ரில்லிங்கான ஒலியமைப்பு மற்றும் எடிட்டிங்குடன் ஆங்காங்கே கோர்த்திருக்கிறார்கள். கதைக்களத்துக்கு ஏற்றவாறு காட்சிகளில் ஆழமில்லாததால் க்ளைமாக்ஸில் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தாலுமே ஒரு குறும்படம் பார்த்த உணர்வு மட்டுமே மேலிடுகிறது.
சிம்பிளான கதையை, நேரடியான, அதே சமயம் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் அணுகியிருந்தாலே அட்டகாசமான உளவியல் த்ரில்லராக மாறியிருக்கும் படம். அதனாலேயே இந்த `பர்த்மார்க்’ நம் மனதில் எந்த `மார்க்’கையும் ஏற்படுத்தவில்லை.
+ There are no comments
Add yours