‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் பெங்களூருவைச் சேர்ந்த ரச்சிதா.
அந்தத் தொடருக்குப் பின் ‘சரவணன் மீனாட்சி’ முதலான பல சீரியல்களில் நடித்தார். ‘சரவணன் மீனாட்சி’ இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 90 நாட்கள் நேர்த்தியாக விளையாடி பிரபலமாகி கவனம் ஈர்த்தவர். தற்போது இவர் ‘Xtreme’ எனும் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் பேசிய ரச்சிதா, “நான் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்றாலும் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைக் கற்றுக் கொண்டு சீரியலில் நடித்து வந்தேன். இங்கேயே என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன்பே நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன். இப்போது இந்த ‘Xtreme’ படத்தில் நடிக்கவிருக்கிறேன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் பங்கேற்றால் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையில்லை. நாம்தான் நமக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
‘பிக் பாஸ்’ நம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு பெரிய தளம். அதில் நம் திறமைகளைப் பார்த்து மக்கள் நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பார்கள். அதைப் பார்த்து இயக்குநர்கள் பட வாய்ப்பு வழங்குவார்கள். திறமையைப் பார்த்துதான் வாய்ப்பு வரும். ‘பிக் பாஸ்’க்கு போனாலே வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. இதுவரை என்னுடைய சீரியல்கள் மூலம்தான் எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது” என்றார்.
+ There are no comments
Add yours