2006-ம் ஆண்டில் நடக்கும் கதையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் புறநகர்ப் பகுதியான மஞ்சும்மல்லைச் சேர்ந்த சௌபின் ஷாஹிர், ஶ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், அஞ்சு குரியன் உள்ளிட்ட நண்பர்கள் `மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற பெயரில் குழு (கிளப்) ஒன்றை அமைத்து ஜாலியாக வாழ்கிறார்கள். வெவ்வேறு பணிகள், பின்னணிகளைச் சேர்ந்த இவர்கள், ஓணம் விடுமுறையில் கொடைக்கானலுக்கு விசிட் அடிக்கிறார்கள். அங்கே குணா குகையின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். எதிர்பாராத விதமாக அங்கிருக்கும் `சாத்தானின் சமையலறை’ எனக் கூறப்படும் பல அடிகள் ஆழமுள்ள குழிக்குள் ஒருவர் விழுந்துவிடுகிறார். அவரை மீட்க நண்பர்கள் நடத்தும் போராட்டமே இயக்குநர் சிதம்பரத்தின் `மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற மலையாளத் திரைப்படம்.
ஜாலியான இளைஞனுக்கான சேட்டைகள், பொறுப்பான மூத்தவனாக எடுக்கும் முதிர்ச்சியான முடிவுகள் என இரு வேறு பரிமாணங்களை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் சௌபின் ஷாஹிர். இரண்டாம் பாதியில் நுணுக்கமான உடல்மொழியால் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ஶ்ரீநாத் பாஸி. நண்பர்களாக பாலு வர்கீஸ், அஞ்சு குரியன், கணபதி, தீபக் பரம்போல் ஆகியோர் சேட்டைகளைத் தாண்டி, தேவையான உயிர்ப்புள்ள நடிப்பையும் வழங்கியிருக்கிறார்கள். ராமச்சந்திரன் துரைராஜ், ஜார்ஜ் மரியன் ஆகியோரின் நடிப்பில் குறையேதுமில்லை. தமிழ்நாடு காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகளாக வருபவர்கள் ‘வழக்கமான’ பாணியிலேயே எழுதப்பட்டிருப்பதால், ஒரு சினிமாவுக்குரிய இலக்கணத்துடனே வந்துபோகிறார்கள்.
சர்வைவலின் படபடப்பைக் கடத்த ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது. பிரதானமாக, குகையின் குழிக்குள் நடக்கும் காட்சிகளில், துருத்தாத கேமரா நகர்வுகளாலும், ப்ரேம்களாலும் அட்டகாசம் செய்திருக்கிறார். குழிக்குள் உடல் விழும் அந்த ஷாட், வி.எஃப்.எக்ஸ் உதவியுடன் மிரட்டலான திரை அனுபவத்தைத் தருகிறது. படம் நெடுக விறுவிறுப்பிற்குத் தேவையான பங்களிப்பைத் தரும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு, இறுதிப்பகுதியில் வரும் உணர்வுபூர்வமான காட்சிகளையும் அழகாகக் கையாண்டிருக்கிறது.
உணர்ச்சிகரமான இடங்களிலும், பதற்றம் பரவும் இடங்களிலும் பின்னணி இசையால் பிரமிப்பைக் கொண்டு வந்திருக்கிறார் சுஷின் ஸ்யாம். ஆங்காங்கே ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தின் பின்னணி இசையின் சாயல் எட்டிப்பார்ப்பது மட்டும் உறுத்தல். குணா குகை, அதற்குள் பல மடிப்புகளையும், வடிவங்களையும் கொண்ட குழி எனக் கதைக்களத்தை கண்முன் கொண்டுவந்த விதத்தில், அஜயன் சல்லிசேரியின் தயாரிப்பு வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒலி வடிவமைப்பு, ஒப்பனை எனப் பிற தொழில்நுட்ப பிரிவுகளும் கச்சிதமாகவே செயல்பட்டிருக்கின்றன. தமிழ் வசனங்களில் உள்ள சில க்ளீச்சேவான விஷயங்களை மட்டும் களைந்திருக்கலாம்.
2003-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற பெயரில் இயங்கும் நண்பர்களின் சேட்டைகள், அவர்களுக்குள்ளான உறவு, கயிறு இழுக்கும் போட்டி, அதற்கான பயிற்சி, டூருக்கு ஆள் சேர்ப்பது, கொடைக்கானலைச் சுற்றுவது எனச் சின்ன சின்ன காமெடிகள், சின்ன சின்ன டீட்டெயிலிங் ஜாலியாகவும், வேகமாகவும் படத்தை நகர்த்துகின்றன. நண்பர் ஒருவர் ஆபத்தில் சிக்கவே, படத்தில் வரும் இறுக்கமான கயிறாகவே மாறி, நம் உணர்வுகளையும் இறுக்கிப் பிடிக்கிறது திரைக்கதை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், செயற்கையான காட்சிகளையும் புகுத்தாமல் திரைக்கதையில் ‘திக்’ எனப் புகுத்தப்பட்டுள்ளது அந்த விபத்து காட்சி.
‘சர்வைவல்’ த்ரில்லராக மாறிய பின்னரும், அதீத டிராமா பக்கம் எல்லாம் செல்லாமல் இயல்பான பதற்றத்துடனே நகர்கிறது படம். சினிமாத்தனம் கலக்காமல் சாதாரண காட்சிகள் மற்றும் தரமான மேக்கிங்கில் பரபரப்பைக் கூட்ட முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சிக்குப் பாராட்டுகள். என்ன நடக்கும் என்று நாம் நினைக்கிறோமா, அதுவே அச்சு பிசகாமல் நடப்பது மைனஸ். அதே போல, நண்பர்கள் அத்தனை பேர் இருந்தும் நம் மனதில் பதிவது ஒரு சிலரே என்பதும் சறுக்கல். ஆனால் இக்குறைகளை ஈடு செய்யும் வகையில் சின்ன சின்ன விவரணைகள், குழிக்குள் சிக்கியவரின் மனவோட்டம், நண்பர்கள் குழுவின் சிறுவயது நிகழ்வுகளை திரையோட்டத்தில் கோர்த்தது போன்றவற்றால் திரையோடு ஒன்ற வைக்கிறது படம்.
கயிறு இழுக்கும் போட்டி, அதை இரண்டாம் பாதியில் பயன்படுத்திய விதம், கமல்ஹாசன் பாடல்களைக் கொண்ட சீடி படத்தில் ஏற்படுத்தும் திருப்பம், நண்பர்களுடைய குணங்களிலும், பழக்கங்களிலும் உள்ள வித்தியாசங்கள் என நுணுக்கமான விவரணைகள் சுவாரஸ்யத்தைத் தருகின்றன. உணர்வுக்குவியலாக உள்ள இறுதிப்பகுதியை, தனித்துவமான திரைமொழியில் நிதானமாகக் காட்சிப்படுத்தி, நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது படம். ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை வெவ்வேறு உணர்வு நிலைகளில், நேர்த்தியாகப் பயன்படுத்தி, அப்பாடலையும் அதன் பாடு பொருளையும் படத்தின் ஓர் அங்கமாகவே மாற்றியிருக்கிறார் இயக்குநர். சாரே, இது புதுசு!
காமெடியை எப்படி அணுகவேண்டும், அதற்கு நேர் எதிர் உணர்வான அச்சத்தையும், பிழைத்திருக்க வேண்டும் என்ற போராட்டத்தையும் எப்படிக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் ஒரே படத்தில் கச்சிதமாகச் சொல்லி, சேட்டன்கள் செய்திருக்கும் மற்றுமொரு சம்பவம்தான் இந்த `மஞ்சும்மல் பாய்ஸ்’.
+ There are no comments
Add yours