ஆர்ப்பாட்டமில்லாமல், நிதானமாகவும் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யத்தோடு முடியும் முதற்பாதியில் இருந்து எடுத்துக் கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை. ஹேமா கதாபாத்திரத்தைப் போன்று, ரோஷன் கதாபாத்திரமும் ஆழமாக எழுதப்பட்டிருந்தால், முதற்பாதியை அழுத்தமாக்குவதோடு, இரண்டாம் பாதிக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்.
மிஷ்கின் படப் பாடல்களைக் கொண்டாடும் மனிதர்கள், மிஷ்கினையும் அவரின் ‘முகமூடி’ படத்தையும் புகழும் வசனங்கள் என ‘மிஷ்கின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’க்காக வாசித்த புகழுரைகள் ‘பப்பரப்பா’ என துருத்திக் கொண்டு நிற்கின்றன. ‘பெண்கள் உடையும் கண்ணாடி பாத்திரம்…’, ‘நான் கடலில் உள்ள மீன். நீ கரையில்..’ போன்ற ரொம்பப் ‘பழமையான’ வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
இரண்டாம் பாதிதான் படத்தின் கதைக்கருவை விவரிக்கிறது. த்ரில்லர் மோடுக்கு மாறும் இப்பகுதி, விறுவிறுப்பையும் பரபரப்பையும் தொழில்நுட்ப உதவியோடு நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. மேலும், ‘ஹேமா’வின் மனப்போராட்டங்களை தன் நடிப்பால் சில காட்சிகளில் கண்முன் கொண்டுவந்து ரசிக்க வைக்கிறார் பூர்ணா. ஆனால், சிறிது நேரத்திலேயே படம் ஹாரர், தத்துவார்த்தம், ஆன்மிகம் என தடம் மாறி, ‘டெவில்’ என்பது என்ன என்பதை மறைமுகமாகச் சொல்லி எதிர்ப்பாராத ட்விஸ்ட்டோடு சுவாரஸ்யமற்று கொட்டாவி வரவைக்கும் எத்தனிப்போடு நிறைவடைகிறது.
முதல் பாதியில் தேவையே இல்லாமல் நீளும் காதல் சரசக் காட்சிகளைக் குறைத்து, இறுதிப்பகுதியில் வரும் ஆன்மிக, தத்துவார்த்த பார்வைகளை விரிவான காட்சிகளாக்கி பார்வையாளர்களோடு உரையாடி இருக்கலாம்.
எளிமையான கதையை எடுத்துக்கொண்டு, வழக்கமான திரைக்கதையில் கொஞ்சம் புதிய ட்ரீட்மென்ட்டில் சொல்ல முயலும் இந்த `DEVIL’, முழுமையான சுவாரஸ்யமும் அழுத்தமும் தராததால் பார்வையாளர்களுக்கு ‘TROUBLE’ ஆக முடிகிறது!
+ There are no comments
Add yours