இவர்கள் இல்லாமல் அம்மாவாக வரும் கீதா கைலாசம், டீம் லீடராக வரும் கண்ணா ரவி, தோழிகளாக வரும் நிகிலா சங்கர் மற்றும் ரினி, அருணின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன் என அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ‘டாடா’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்களில் கவர்ந்த ஹரிஷும் சிறிய வேடம் என்றாலும் மணிகண்டனுடன் உரையாடும் அந்த ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். அதற்கு வசனங்களும் பக்கபலம்.
காதலர்களுக்கு இடையிலான நெருக்கம், பிரிவு, கோபம், ஆற்றாமை என அனைத்தையும் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறது ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா. க்ளோசப் ஷாட்கள் மூலம் அவர்களின் காதலுக்கும் உணர்வுகளுக்கும் மிக அருகில் நம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறார். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்துக்குப் பெரிய பலம். திரைக்கதைக்கேற்ப பாடல்களும் நெருடல் இல்லாமல் வந்துபோகின்றன. இரண்டாம் பாதியில் வரும் ஏதேனும் ஒரு மான்டேஜ் பாடலை மட்டும் குறைத்திருக்கலாம். மற்றபடி பரத் விக்ரமனின் எடிட்டிங்கும் கச்சிதம்.
முதல் காட்சியிலேயே, ‘எதுக்கு மறைச்சிட்டுப் போனே… எதுக்கு பொய் சொல்லிட்டுப் போனே?’ என்ற ஒற்றை டயலாக்கில் இருவருக்குமான பிரச்னை என்ன என்பதைக் காட்டிவிட்டு அடுத்தடுத்த தொடர் விளைவுகள் என்ன என்பதாக நகரும் முதல் பாதி முழுக்க சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை அடுத்தது என்ன என யோசிக்க வைக்காமல் ஒரே புள்ளியில் தேங்கி நின்றுவிடுகிறது. ‘ஒரே ஒரு சான்ஸ் கொடு!’ என சிம்பிளாய் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செய்த தவற்றையேதான் நாயகன் மீண்டும் மீண்டும் செய்கிறான் என்பதைக் காட்ட நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அதற்காக ஒரே காட்சியையே மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வும், லூப்பில் மாட்டிக் கொண்ட அயர்ச்சியையும் நமக்கு ஏற்படுகிறது.
+ There are no comments
Add yours