பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் தாமரைச் செல்வி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருடைய வாழ்க்கை சூழல் மாறியிருக்கிறது என்றே சொல்லலாம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார்.
தற்போது விஜய் டிவியில் `சின்ன மருமகள்’ தொடரிலும், ஜீ தமிழில் `நினைத்தாலே இனிக்கும்’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ரெண்டு தொடரிலும் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே போக வேண்டும் என்பதை தாமரைச் செல்வி சரியாக பின்பற்றிக் கொண்டிருக்கிறார் எனப் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் போட்டி முடிந்த பிறகு வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நட்புறவுடன் தொடர்ந்து பழகி வருவது இயல்பான ஒன்றுதான்! முதல் சீசனில் நட்பான கணேஷ் வெங்கட்ராம் – சுஜா வருணி தற்போது வரையிலும் நண்பர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் சம்யுக்தா, ரியோ, கேப்ரில்லா, சோமசேகர், ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
`அன்பு’ என்கிற கேப்ஷன் இந்த சீசனில் வெகுவாக இருந்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் அவர்களுடைய கெரியரில் அடுத்தடுத்த இடங்கள் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரியோவிற்கு `ஜோ’ திரைப்படம் மற்றுமொரு கம்பேக் கொடுத்திருக்கிறது. கேப்ரில்லா தற்போது சன்டிவி தொடர் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த சூழலில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான `பாவம் கணேசன்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமானார் `கலக்கப்போவது யாரு’ நவீன். அந்தத் தொடருக்குப் பிறகு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `நீ நான் காதல்’ தொடரில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் திருமணமாகவில்லை எனக் கூறி ஏமாற்றுவது போல இவருடைய கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருடைய நடிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. லீட் ஆகத்தான் நடிப்பேன் என்கிற எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் பர்ஃபார்மென்ஸில் நம்மை நிரூபித்துக் கொள்ளலாம் என்கிற அவருடைய தன்னம்பிக்கைக்கு இந்தக் கதாபாத்திரம் நிச்சயம் கை கொடுத்திருக்கிறது.
+ There are no comments
Add yours