இப்படிக்கு காதல் விமர்சனம்: காதலை இழந்தவர்கள் மீண்டும் காதலைக் கண்டடையும் கதை; காதலிக்க வைக்கிறதா?

Estimated read time 1 min read

சிவாவிற்கும் (பரத்) ரம்யாவிற்குமான (ஜனனி) 10 ஆண்டுக் கால காதல், திருமணத்தில் முடிகிறது. துரதிர்ஷ்டமாகத் திருமண நாள் அன்றே ஒரு கார் விபத்தில் ரம்யா மரணிக்க, சிவா கோமாவிற்குச் செல்கிறார். சில நாள்களுக்குப் பின் கோமாவில் இருந்து மீளும் சிவாவிற்கு, ரம்யாவின் இறப்பு பெரும்வலியாக வதைக்கிறது. மறுபுறம், பரத நாட்டிய கலைஞரான அஞ்சனா (சோனாக்‌ஷி) தன் காதலன் செய்த துரோகத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறுகிறது. எப்படி இந்தக் காதல் இருவரின் வலியையும் அகற்றி, அவர்களின் வாழ்க்கையை அழகாக்குகிறது என்பதைப் பேசுகிறது `ஆஹா தமிழ்’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் பரத் மோகனின் `இப்படிக்கு காதல்’ திரைப்படம்.

இப்படிக்கு காதல்

10 ஆண்டுக் கால காதல், முடிவில் துயரம், காதலின் பிரிவு, மீண்டும் ஒரு புதிய காதல், மீண்டும் பழைய காதலின் ஞாபகங்கள் எனப் பயணிக்கும் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் பரத், நடிப்பில் அதற்கான நியாயத்தைச் செய்யாமல் வெறும் ‘வசனங்களாகவே’ வந்து போகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் பார்டரில் பாஸ் ஆகிறார்.

துரோகத்தின் வலி, தன்னை மீட்டெடுக்கும் காதல், காதலன் மீதான ‘அதீத’ காதல் என அழுத்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய அஞ்சனா கதாபாத்திரம் மேம்போக்காக இருக்கிறது. அதில், “மருந்துக்குக் கூட நடிக்கவே மாட்டேன்” என அடம்பிடித்துச் சாதித்திருக்கிறார் சோனாக்‌ஷி. ‘டாக்சிக்கான’ காதலியாக மிரட்டி ஒரு சில காட்சிகளில் மட்டும் ஆறுதல் தருகிறார். 

பாலுவின் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜிகே-வின் படத்தொகுப்பும் தொழில்நுட்ப ரீதியாக எந்தப் பலத்தையும் படத்திற்குக் கொடுக்கவில்லை. காதல் பாடல்களில் மட்டும் ஆறுதல் தருகிறார் ஒளிப்பதிவாளர். அரோள் கரோலி இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆழமில்லாத திரைக்கதைக்குப் பின்னணி இசையால் உயிரோட்ட முயன்றிருக்கிறார். ஆனால், அது சில இடங்களில் மட்டும் கைவர, ஏனைய இடங்களில் துணைக்கு ஆள் இல்லாமல் பின்னணி இசை தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

இப்படிக்கு காதல்

காதல் திருமணம், விபத்து, இறப்பு, கோமா என அடுத்தடுத்து நகர்ந்து, வேகமாகவே கதைக்குள் சென்று விடுகிறது படம். காதல் மனைவியின் மரணத்தால் உடைந்து போயிருக்கும் ஒரு ஆண், காதலனின் துரோகத்தால் உடைந்து போயிருக்கும் ஒரு பெண் என உணர்ச்சி குவியலாக எழுதப்பட்டிருக்க வேண்டிய கதாபாத்திரங்கள், அவர்களுக்கான திரைக்கதை என எதுவுமே எந்த அழுத்தமும் இல்லாமல் மேம்போக்காகவே ஓடுகிறது. நடிகர்களும் தன் பங்குக்குச் செயற்கை தனமான நடிப்பை வழங்கி, பார்வையாளர்களை ஒன்றவிடாமல் செய்துவிடுகிறார்கள்.

இரண்டாம் பாதியில், டாக்சிக்காக மாறும் சோனாக்‌ஷி, தேவையில்லாமல் குடித்து விட்டு ரகளை செய்யும் பரத் எனப் பிரதான கதாபாத்திரங்களின் செயல்களுமே நம்மைக் குழப்புகின்றன. மொத்த படத்திலும், பரத்திற்கும் பகவதி பெருமாளுக்கும் இடையிலான சில காமெடி காட்சிகளும், கார் விபத்தில் தன் மனைவியை இழந்த பின், பல நாள்கள் கழித்து கார் ஓட்ட முயலும் பரத்தை அந்த விபத்தின் நினைவுகள் மிரட்டும் காட்சியும் மட்டுமே மனதில் நிற்கின்றன.

இப்படிக்கு காதல்

தங்களுடைய காதல் தந்த துயரத்தால் வாழ்கையில் பிடிப்பில்லாமல் போகும் ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் சந்திக்க வைத்து, அவர்களுக்கு இடையே காதல் என்னும் ‘ரிதம்’ தந்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளி வீச வைக்க முயன்றிருக்கிறது இந்த ‘இப்படிக்கு காதல்’.

ஆனால், திக்கற்ற திரைக்கதையும் சுமாரான மேக்கிங்கும் செயற்கையான நடிப்பும் ஒன்று சேர்ந்து, இந்தக் காதலைக் காதலிக்க விடாமல் செய்துவிடுகின்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours