சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – “இந்த மண்ணு புழுப்பூச்சிகள் சேர்ந்தது தான்னு அப்பா சொன்னதை நம்புகிறேன்” என்ற சிவகார்த்திகேயனின் வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. இதன் மூலம் வேற்றுகிரகவாசிகள் குறித்தும், மற்ற உயிரினங்கள் மீது அன்பு கொண்ட கிராமத்து மனிதராக சிவகார்த்திகேயன் வெளிப்படுகிறார். இதற்கு மற்றொருபுறம் ஏலியன் குறித்து ஆய்வு செய்யும் கார்பரேட் வில்லன் என களம் அமைகிறது. ட்ரெய்லரில் ஹீரோவுக்கு இணையாக ஏலியனுக்கு இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. பின்னணி இசை கவனம் பெறுகிறது.
“வழக்கமா நீங்க அமெரிக்காவ அழிக்கத்தானடா வருவீங்க” என்ற வசனம் ஹாலிவுட் படங்களில் ஏலியன் கதாபாத்திரங்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதை விளக்குகிறது. அதற்கு மாறாக இந்தப் படத்தில் ஏலியன் மக்களைக்காக்கும் உயிரினமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் காட்சிகள் ட்ரெய்லரில் எங்கும் பிசிறு தட்டவில்லை. ஏலியனுக்கான சித்தார்த்தின் குரல் தனித்து தெரிவதால், ஒன்ற முடியவில்லை.
படத்தில் எப்படியான தாக்கம் இருக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். “நீ எதுக்காக வந்தீயோ அத செஞ்சு முடிக்கணும். இனி அது என்னுடைய வேலை” என ஏலியனைப்பார்த்து உறுதி கூறுகிறார் சிவா. இதன் மூலம் ஏதோ ஒர் நல்ல நோக்கத்துக்காக ஏலியன் பூமியை வந்தடைய அந்த நோக்கத்தை ஹீரோவான சிவகார்த்திகேயன் தனக்கானதாக மாற்றிக்கொண்டு கார்ப்பரேட் வில்லனுக்கு எதிராக களமாடுகிறார் என்பது புரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை இறுதியில் மட்டும் ‘2.0’வை நினைவுப்படுத்தலாம். ட்ரெய்லர் வீடியோ: