தமிழ் சினிமா நடிகர், நடிகர் சங்கத் தலைவர், எதிர்க் கட்சியின் தலைவர் என தமிழன மக்களின் அன்பைப் பெற்றவர் விஜயகாந்த். உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
அவரது மறைவு குறித்து கனத்த இதயத்துடன் மனம் திறக்கிறார் நடிகர் ஶ்ரீமன். விஜயகாந்துடன் ‘வாஞ்சிநாதன்’, ‘தென்னவன்’, ‘நரசிம்மா’, ‘சொக்கத்தங்கம்’ எனப் பல படங்களில் நடித்த ஶ்ரீமன் கூறியவை இதோ!
”நாங்க பாசத்தோடு கூப்பிட்டுகிட்டு இருந்த விஜயகாந்த் சார், இல்லை. இப்ப நான் பெங்களூருவில் படப்பிடிப்பில் இருக்கேன். ஆனா, என் மனசெல்லாம் இங்கேதான் இருக்கு. ஒவ்வொரு நடிகர்களின் வாழ்க்கையிலும் அவங்களுடைய வளர்ச்சிக்கென சில பேர் இருப்பாங்க. என்னுடைய வளர்ச்சிக்கு விஜயகாந்த் சார் இருந்தார். ‘நீ நல்லா நடிக்கற.. சின்ஸியரா பண்ணு’ என நிறைய அட்வைஸ்கள் சொல்லியிருக்கார். பொதுவா ஒரு மனிதரைப் பற்றி நல்ல விஷயங்கள் பேசும் போது அது நடிகரா இருந்தாலும் சரி, தலைவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சேவை செய்தவராக இருப்பவராக இருந்தாலும் சரி அவங்களை பத்தியெல்லாம் பேசும் போது ஒருசில விஷயங்கள் மிகைப்படுத்தி பேசுவது வழக்கம். மேடையில் ஒண்ணா அமர்ந்திருந்து பேசும்போது கூட, அது மேடை நாகரிகமும் கூட! ஆனா, கேப்டனை பொறுத்தவரை அவரைப் பத்தி எல்லாரும் பேசியிருக்காங்க. அவர் செய்த தர்ம காரியங்கள் பத்தி இதுவரை நாம் கேள்விப்பட்டதெல்லாம் வெறும் இருபது சதவிகிதம் தாங்க. அவர் பண்ணின தர்ம காரியங்கள்.. நல்ல விஷயங்கள் எல்லாம் நூறு சதவிகிதம் முழுசா சொல்றது ரொம்ப சிரமம். அதைப் பத்தி முழுசா யாருக்கும் தெரியாது. அந்தளவுக்கு வெளியே தெரியாமல் நிறைய உதவிகள் செய்தவர் அவர். ரொம்ப நல்லவரு!
அவர் படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளை எல்லாம் நேர்ல பார்த்திருக்கேன். ஆனா, ஸ்டிராங்கான மனிதர். இன்னிக்கு அவர் இல்லைங்கற போது, என் மனசெல்லாம் ரொம்ப சங்கடமாயிருக்கு. அவர் ஆன்மா சாந்தி அடையணும்னு ஈஸ்வர பெருமாளையும், எல்லாம் வல்ல அம்பாளையும் வேண்டிக்கிறேன்.” என்கிறார் கண்ணீர் மல்க!
+ There are no comments
Add yours