கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல் நாளிலேயே இருபது போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில் முதல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மேலும் 5 புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.
தொடர்ந்து இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பழைய போட்டியாளர்கள் மூன்று பேர் நிகழ்ச்சிக்குள் சென்றார்கள். அவர்களில் அனன்யா மீண்டும் எலிமினேட் ஆகி வெளியில் வந்து விட்டார். மேலும் கடந்த வார எவிக்ஷனில் கூல் சுரேஷ் வெளியேறிவிட, எஞ்சியுள்ள போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாட்டைத் தொடர்ந்து வருகின்றனர். தினம் தினம் விதவிதமான டாஸ்குகளை இவர்களுக்கு வைத்து நிகழ்ச்சிக்கு ரேட்டிங் குறைந்து விடாதபடி பார்க்கிற வேலையை பிக் பாஸும் ஒருபுறம் செய்து வருகிறார்.
இன்றைய தேதிக்கு மாயா, பூர்ணிமா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் வலுவான போட்டியாளர்களாகத் தெரிவதாக ஒரு கருத்து பிக் பாஸ் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் இந்த வார எவிக்ஷனுக்கான வார இறுதி ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது.
வழக்கம்போல் முதலில் போட்டியாளர்களிடம் கடந்த வாரம் நடந்தவை குறித்துக் கமல் விசாரிக்கும் எபிசோடின் ஷூட்டிங் முற்பகலில் நடந்தது. அதைத் தொடர்ந்து எவிக்ஷனுக்கான நேரம். இந்த வாரம் ரவீனா, விசித்ரா, சரவண விக்ரம் ஆகிய மூவரும் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். பிக் பாஸ் நிறைவு நாள் நெருங்குகிறதென்பதாலும் அந்த வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் சமீப இருவாரங்களாக டபுள் எவிக்ஷன் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்; கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேறுவதற்கு இரு தினங்களுக்கு முன் மிட் வீக் எவிக்ஷன் நிகழ்ந்து அனன்யா வெளியேறினார். இந்த வாரம் அப்படி மிட் வீக் எவிக்ஷனும் இல்லாததால் டபுள் எவிக்ஷன் நிச்சயம் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அது நடக்கவில்லை. தற்போது கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி இந்த வாரம் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் சரவண விக்ரம். சரவண விக்ரமைப் பொறுத்தவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் கடைசித் தம்பியாக வந்தவர். இந்த சீரியல்தான் சின்னத்திரையில் ஓரளவு இவரது முகம் தெரிய வைத்தது எனச் சொல்லலாம். இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கடைசி நேரத்தில் வந்ததாகச் சொல்கிறார்கள். அதாவது ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்த குமரனுக்கே முதலில் பிக் பாஸ் வாய்ப்பு வந்ததாகவும், அவர் மறுத்துவிட்டதால் அந்த வாய்ப்பு சரவணனுக்கு வந்ததாகவும் ஒரு தகவல் உலா வந்தது.
எப்படியோ பிக் பாஸ் சென்று விட்ட சரவண விக்ரம் ஆரம்பத்திலிருந்தே அங்கு மாயா தலைமையிலான அணியிலேயே செட்டாகிவிட்டார். தனி ஆளாக இவர் நிகழ்ச்சிக்குப் பெரிதாகக் கன்டன்ட் தரவில்லை என்கிற ஒரு கருத்து பிக் பாஸ் ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால் சமீபமாக பிக் பாஸ் வீட்டுக்குள் இவருக்குக் கிடைத்த பட்டப் பெயர் என்னவோ ‘டைட்டில் வின்னர்’. வெளியில் சமூக ஊடகங்கள் இதை வைத்து இவரை ட்ரோல் செய்ததும் நடந்தது. இப்படியான சூழலில் இன்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
சரவண விக்ரம் வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப் படுகிறது.
+ There are no comments
Add yours