பள்ளி, கல்லூரி என வெவ்வேறு பருவங்களில் நாயகனுக்கு ஏற்படும் மூன்று காதல்கள், அதில் ஒன்றாவது கரை சேருகிறதா என்பதே இந்த `சபா நாயகன்’.
குடிபோதையில் நள்ளிரவில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் சபா என்கிற அரவிந்த்தை (அசோக் செல்வன்) காவல்துறை கைது செய்கிறது. அன்று இரவு முழுக்க இரவு ரவுண்ட்ஸ் செல்லும் காவலர்களிடம் சபா தன் வாழ்வில் நடந்த மூன்று காதல் கதைகளைச் சொல்கிறான். அந்தக் காதல்கள் எப்படித் தோன்றி, எப்படி முடிகின்றன, அதில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, அதில் ஒன்றாவது ஜெயித்ததா என்பதை நகைச்சுவை கலந்து ஜாலியாகச் சொல்ல முயன்றிருக்கிறது படம்.

துள்ளலான நடனம், அதிரடி சண்டை, காமெடி காட்சிகள் என முதல் முறையாக ஒரு முழுமையான என்டர்டெயினராகக் களத்திற்கு வந்திருக்கிறார் அசோக் செல்வன். அதில் பாஸ் மார்க்கும் வாங்குகிறார். சேட்டையான பள்ளிப் பருவம், கல்லூரிக் கால காதல் என மூன்று பருவங்களையும் சிறப்பாகக் கையாண்டவர், பள்ளிப் பருவத்துக்காக உடலைக் குறைத்து வித்தியாசம் காட்டியுள்ளார். பள்ளிப் பருவத்து நாயகியாக வரும் கார்த்திகா முரளிதரனுக்குப் படத்தின் முற்பாதியில் நடிப்பதற்குப் பெரிதாக வாய்ப்பில்லை. இரண்டாம் பாதியில் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
கல்லூரி பருவத்து நாயகியாக வரும் சாந்தினி நடனத்தில் சற்று சிரமப்பட்டாலும், க்யூட் ரியாக்ஷன்களால் ஈர்க்கிறார். மற்றொரு காதலியாக வரும் மேகா ஆகாஷ் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார் அவரது கதாபாத்திரத்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
காவலர்களாக வரும் மயில்சாமி மற்றும் உடுமலை ரவி ஆகியோர் ஆங்காங்கே போடும் ஒன்-லைனர்கள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. இதுதவிர நாயகனின் நண்பர்களாக வரும் பட்டாளத்தில் நக்கலைட்ஸ் அருண்குமார் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். அக்காவாக அட்வைஸ் போடும் விவியாசந்த் கவனிக்க வைக்கிறார்.
படத்தில் பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருந்தாலும் ஒரு ஜாலியான படத்திற்கான ஒளியுணர்வை மூவருமே ஒன்றாக ஒரே டோனில் சரியாக செட் செய்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளர் நீண்டுகொண்டே செல்லும் பள்ளிப் பருவத்துக் காதல் கதையை இன்னும் சுருக்கமாக வெட்டியிருக்கலாம்; அதேபோல ஒரு காதல் கதை முடிகிறது என்பதிலிருந்து அடுத்த இடத்திற்கு நகர்வதை இன்னும் சுவாரஸ்யமாகக் கோர்க்க முயன்றிருக்கலாம். லியான் ஜேம்ஸ் இசையில் கார்த்தி நேத்தா எழுதிய ‘சீமக்காரியே’, ஜி.வி பிரகாஷ் பாடிய ‘பேபி மா’ போன்ற பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் குறைகள் இல்லை.
வழக்கமான “கம்மிங் ஆஃப் ஏஜ்” கதையுடன் முழுக்க முழுக்கத் திரைக்கதையை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன். பள்ளிப் பருவத்துச் சேட்டைகளோடு ஆரம்பிக்கும் முதல்பாதியின் திரைக்கதை ரசிக்கும் படியாக இல்லை. வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவைகள், பார்த்துப் பழகிய காட்சிகள் என நீண்டு கொண்டே செல்கிறது. அதன்பின் வருகின்ற கல்லூரிக் காதல், சற்றே சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக சச்சின் 200 ரன்கள் அடித்ததை வைத்து எழுதப்பட்ட எபிசோடு நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. இருந்தும் அந்தக் காதலுக்கான முடிவுரை சரியாகக் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் அதைக் கலாய்க்கும் விதமாக பிளாஷ்பேக்குக்கு நடுநடுவே மயில்சாமி போடும் ஒன்லைனர்கள் கலகல!
இரண்டாம் பாதி ஆங்காங்கே நகைச்சுவை, முன்னாள் பள்ளி காதலியின் சந்திப்பு எனச் சலிப்படைய வைக்காமல் நகர்கிறது. மருத்துவராக வேஷம் போட்டுக்கொண்டு அருண்குமார் செய்யும் லூட்டிகள் ரகளை! குறிப்பாக, ‘பெண்கள் காசுக்காக ஆசைப்படுவார்கள்’ என்று ஆலோசனை வழங்கிவிட்டு அதை அவரே செய்வது போல, தன் ஆசையினை விவரிப்பது சிந்திக்க வைக்கும் நகைச்சுவை. பள்ளிப் பருவத்துக் காதல் மீண்டும் பூக்கும் பகுதியைச் சற்றே முதிர்ச்சியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். இதன் கால அளவை நீட்டித்து பள்ளிப் பருவத்துக் காட்சிகளைக் குறைத்திருந்தால் விவேகமான முடிவாக இருந்திருக்கும். அது போல அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சுவாரஸ்யம் என்றாலும் நம்பகத்தன்மை என்பதைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில் `சபா நாயகன்’, ஒரு ஃபீல் குட் காமெடி படமாகக் கவனம் ஈர்த்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் நம்பகத்தன்மையையும் சுவாரஸ்யத்தையும் கூட்டியிருந்தால் நிஜமாகவே சபையின் நாயகனாகக் கூடுதல் பாராட்டைப் பெற்றிருப்பான்.
+ There are no comments
Add yours