நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்து உருவாகிறார்கள்: கமல்ஹாசன்
21 டிச, 2023 – 16:28 IST

இயக்குனரும், தயாரிப்பாளருமான கேயார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் நாளை வெளிவருகிறது. இந்த படத்திற்கு ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை.
அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து ஆகிவிடுகிறது. இத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நான் வெளியிடும் “ஆயிரம் பொற்காசுகள்” படத்துக்கு அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் ‘ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறேன். இந்த முயற்சிக்கு தங்கள் ஆதரவு தேவை” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பான முயற்சி. தடைகளை உடைத்து வெளிவரும் சிறிய படங்களுக்கு நான் எப்போதுமே ஆதரவாளன்தான். நானும் அப்படி வந்தவன்தான். எதிர்கால நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்தோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் மூலமாகவோதான் உருவாகிறார்கள். சிறியது என்பது அழகானது மட்டுமல்ல, நிச்சயமாக ஒருநாள் பெரியதாக வளரக்கூடியது. ஆனால் பெரியது மேலும் பெரியதாகி ஒரு புள்ளியில் நின்று விடும். வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours