இது போன்று ரி-ரிலீஸ் படங்களுக்குக் கிடைக்கும் முழுமையான லாப மார்கெட் குறித்துத் தெரிந்து கொள்ள ரோகிணி திரையரங்கத்தின் உரிமையாளரான ரேவந்திடம் பேசினோம்.
“முன்பெல்லாம் நட்சத்திரங்களின் பிறந்தநாளையொட்டி அவர்களின் படங்களை ரி-ரிலீஸ் செய்து வந்தோம். ‘லீன்’ காலத்தில் படங்களை ரி-ரிலீஸ் செய்து பார்த்ததன் மூலம் ரிசல்ட்டாக கிடைத்தது இந்த வரவேற்பு. அதாவது பெரிய திரைப்படங்கள் வெளிவராத காலகட்டங்களில் இதுபோன்று திரைப்படங்களை ரி-ரிலீஸ் செய்து பார்த்தோம்.
சில திரைப்படங்கள் ‘கல்ட் கிளாசிக்’காக இருக்கும். சில திரைப்படங்கள் வெளியான சமயத்தில் சரியான வரவேற்பைப் பெற்றிருக்காமல் அதன் பிறகு மக்கள் அதனைக் கொண்டாடியிருப்பார்கள். அப்படியான திரைப்படங்களைத்தான் இப்போது ரி-ரிலீஸ் செய்து வருகிறோம். ‘பாபா’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய திரைப்படங்கள் ரீலிஸான வேளையில் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இந்தத் திரைப்படங்களெல்லாம் ஓ.டி.டியில் இருந்தாலும் அதனை தியேட்டர் அனுபவத்தில் பார்க்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இந்த வரிசையில் தனுஷின் ‘3’ திரைப்படமும் அடங்கும். இத்திரைப்படம் 2012-ம் ஆண்டு வெளியானபோது இப்படியான பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், மக்கள் தற்போது இத்திரைப்படத்திற்கு அமோக வரவேற்பைக் கொடுத்து வருகிறார்கள். ரி-ரிலீஸ் திரைப்படங்களுக்கும் ஷேர் வழியாகத்தான் லாபத்தைக் கணக்கிடுவார்கள். பெரும்பான்மையாக 50 – 50 ஷேர் திரையரங்கத்திற்கும், வினியோகஸ்தருக்கும் இருக்கும். சில சமயங்களில் 60 – 40 எனவும் ஷேர் மாற்றம் பெறும். பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்யும்போது திரையரங்கத்திற்கு அதிகளவில் ஷேர் கிடைக்கும். ரி-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் டிக்கெட் விலை என்பது 100 ரூபாய்க்குள்தான் இருக்கும்.
+ There are no comments
Add yours