எண்ணெய் கழிவுகளை அகற்ற பாத்ரூம் பக்கெட்டுகளை கொடுப்பதா? – கமல்ஹாசன் ஆவேசம்
17 டிச, 2023 – 18:38 IST

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள சி.பி.சி.எல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி, அந்த பகுதியில் உள்ள கால்வாய் வழியாக பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. இதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் எண்ணூர் பகுதியில் ஆய்வு செய்தார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்த பகுதிக்கு ஏற்கனவே நான் பலமுறை வந்திருக்கிறேன். கடந்த காலத்தை விட இந்த முறை மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இங்கு உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும். ஆனால் அதற்கான ஒரு அறிகுறியும் இங்கு இல்லை. எண்ணெய் கழிவுகளை அகற்ற நிபுணர்கள் இல்லை. மீனவர்கள் தான் அகற்றி வருகிறார்கள்.
ஆனால் எண்ணெய் கழிவுகளை அகற்ற பக்கெட்டை கொடுத்து இருப்பது மனிதாபிமானமற்ற செயல். உயிர் கொல்லி வேலைகளை செய்பவர்களுக்கு பெரும் தண்டனையை அரசு கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கும் கமலஹாசன், ஒவ்வொரு முறையும் இது போல நடக்கும்போது நிவாரணம், போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது. எண்ணெய் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அச்சம் ஏற்படும். இது மீனவர்களின் பூமி. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours