Trisha: 21 ஆண்டுகளாக வெள்ளித்திரையை ஆளும் தென்னகத்து ராணி – த்ரிஷா என்னும் திகட்டாத வசீகரம்!

Estimated read time 1 min read

மிளகாய் பொடி, தனலஷ்மி, அபி, ஜெஸ்ஸி, ஜானு, குந்தவை… இந்த வார்த்தைகள் எல்லாம் ஒலிக்கும் போது உங்கள் மனதில் என்ன சித்திரம் தோன்றுகிறது?!

ஒரு நடிகரை அல்லது நடிகையை அவர் நடித்த பாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் அழைக்கிறார்கள் அல்லது உடனடியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்றால் சம்பந்தப்பட்ட கலைஞருக்கு அதுவே ஒரு விருதுதான். அந்தப் படத்தின் மூலம் தனது பாத்திரத்தை மறக்க முடியாத அளவிற்கு அவர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்றுதான் இதற்குப் பொருள். மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் எல்லாமே உங்களுக்கு ‘த்ரிஷா’ என்கிற நடிகையை சட்டென்று நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும். ‘The South Queen’ என்று  ரசிகர்களால் பிரியத்துடன் அழைக்கப்படும் த்ரிஷா, சினிமாவிற்கு நடிக்க வந்து இருபத்தோரு ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இது நிச்சயம் ஒரு சாதனை. 

த்ரிஷா | Trisha

ஹீரோக்களே தடுமாறும் துறையில் ஒரு பெண்ணின் சாதனை

எல்லாத் துறைகளையும் போலவே சினிமாவும் ஆணாதிக்கம் மிகுந்த துறைதான். ஹீரோக்களே தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ‘ததிங்கினத்தோம்’ போட வேண்டிய அளவிற்குக்  கடுமையான போட்டி நிறைந்த இண்ட்ஸ்ட்ரி அது. இரண்டு படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தால் ஒரு நடிகரை அப்படியே மறந்து விடக்கூடிய நிலைமை கூட ஏற்படும். ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால் பெண்களின் நிலைமையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏராளமான பெண்கள் சினிமாவில் நடிக்க போட்டி போடுகிறார்கள். ஆனால் சினிமா என்கிற நுட்பம் இங்கு புதிதாக வந்த காலத்தில் நிலைமை அப்படியாக இல்லை. 

கூத்து, நாடகம் போன்வற்றில் பெண்கள் நடிப்பது அவமரியாதையாகவும் இழிவான தொழிலாகவும் ஒரு காலத்தில் பார்க்கப்பட்டது. எனவே ஆண்களே பெண் வேடம் புனைந்து ‘ஸ்திரீபார்ட்டாக’ நடித்தார்கள். ஆனால் நிலைமை இன்றைக்கு தலைகீழ். ஏராளமான பெண்கள் சினிமாவில் நடிப்பதற்குப் படையெடுக்கிறார்கள். தமிழ்ப் பெண்களை விடவும் அயல் மாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் பெரும்பாலும் வாய்ப்பு பெறுகிறார்கள். இயக்குநர்களும் எங்கெங்கோ தேடியலைந்து ஹீரோயின்களைக் கண்டடைகிறார்கள். 

த்ரிஷா

முன்பெல்லாம் ஒரு நாயகி பணிபுரியும் காலம் என்பது நீண்டதாக இருந்தது. சினிமாவில் நடிக்க பெண்கள் முன்வருவது குறைவு என்கிற ஒரு காரணம் இருக்க, அழகும், நடிப்புத்திறமையும் ஒருங்கிணைந்த பெண்களைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருந்தது. காரணம், அப்போது அவர்களுக்குக் கிடைத்திராத சுதந்திரம். எனவே சீனியர் நடிகைகளை வைத்தே காலத்தை ஓட்ட வேண்டியதாக இருந்தது. இதனால் முப்பது வயதைத் தாண்டிய ஹீரோயின்கள் கூட மிகையான ஒப்பனையுடன்  “அம்மா… நான் காலேஜூக்குப் போயிட்டு வரேன்” என்று வசனம் பேசி அராஜகமான இம்சையை செய்தார்கள். (இன்று நாயகர்கள் அதைச் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம்!) ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. ஒரேயொரு படத்தில் நடித்து காணாமல் போகும் நடிகைகள் கூட இருக்கிறார்கள். அப்படியொரு கடுமையான போட்டி!

ஆக, ஆணாதிக்கமும் கடுமையான போட்டியும் நிறைந்திருக்கும் சூழலில் இருபத்தோரு ஆண்டுகள் கடந்தும் ஒரு நடிகை, அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை,  நாயகியாகவே ந(நீ)டித்துக் கொண்டிருப்பது என்பது நிச்சயம் ஒரு சாதனை. 2

2002-ம் ஆண்டில் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. அவர் நடிக்க வந்து இருபத்தோரு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 1999-ல் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தோழியாக இவர் திரையில் தோன்றிய ஆண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மேலும் இரண்டு ஆண்டுகளைக் கூட்டிக் கொள்ளலாம். 

சிம்ரன், த்ரிஷா

தென்னிந்தியாவின் கலையுலக ராணி

ஏராளமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்து ‘டாப்’ வரிசையில் தனது இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, கன்னடம், மலையாளம், இந்தித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஐந்து பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாட்டின் மாநில விருதுகள், நந்தி அவார்டுகள் என்று இவர் அடைந்த விருதுப் பட்டியல் நீள்கிறது. 

பாலக்காட்டில் பிறந்த த்ரிஷா சென்னையைச் சேர்ந்தவர். பிறந்தது, படித்தது, வளர்ந்தது என்று எல்லோமே சென்னைதான். மாடலிங், விளம்பரம், அழகிப் போட்டி போன்ற துறைகளில் காலடி எடுத்து வைத்த த்ரிஷா, ‘மிஸ் சென்னை’ உள்ளிட்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

‘கிரிமினல் சைக்காலஜிஸ்ட்’ படிப்பை படிக்க விரும்பிய த்ரிஷாவை, ஒரு மியூசிக் வீடியோவில் பார்த்து தனது திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். ஆம், ‘லேசா.. லேசா’ திரைப்படம்தான் த்ரிஷா நாயகியாக ஆன முதல் திரைப்படம். ஆனால் அது வெளியானதற்குத் தாமதம் ஆனதால் ‘மௌனம் பேசியதே’ முதல் அறிமுகத் திரைப்படமாக அமைந்து விட்டது. இதே சமயத்தில் நடித்த ‘எனக்கு 20  உனக்கு 18’  திரைப்படமும் கூட  தாமத வரிசையில் சேர்ந்து விட்டது. 

Trisha

தனது அறிமுகத் திரைப்படத்திலேயே ‘யார் இந்த க்யூட்டான பியூட்டி?’ என்று கேட்க வைத்து ரசிகர்களின் கவனத்தில் அழுத்தமாக விழுந்தார் த்ரிஷா. 2003-ல் வெளிவந்த ‘சாமி’ திரைப்படம் அவரின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. விக்ரமை திருடன் என்று நினைத்து மிளகாய்ப்பொடி தூவி விடுவதால் படம் முழுவதும் அந்தப் பெயரிலேயே அழைப்பார் ஹீரோ. இதில் விக்ரமிற்கும் த்ரிஷாவிற்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாக இருந்ததால், ரசிகர்கள் ‘மாமி’ என்று அழைத்து கொண்டாடத் துவங்கி விட்டார்கள். ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?’ பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய அதே அளவிற்கு ஹிட்டும் ஆனது. த்ரிஷாவின் துள்ளலாட்டம் வெகுவாக ரசிக்கப்பட்டது. 

தெலுங்கிலும் சூப்பர் ஹிட் நடிகை

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்குத் திரைப்படத்துறையிலும் கால் பதித்த த்ரிஷாவிற்கு முதல் படத்திலேயே மகத்தான வரவேற்பு கிடைத்தது. 2004-ல் வெளியான ‘வர்ஷம்’ அதிரிபுதிரியாக ஹிட் ஆனது. ‘ஷைலு’ என்கிற பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததின் மூலம் முதல் பிலிம்பேர் விருது தெலுங்கில் கிடைத்தது. 

அதே ஆண்டில் தமிழில் இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படம். ‘கில்லி’ திரைப்படத்தின் தனலஷ்மியை எவருமே மறந்திருக்க மாட்டார்கள். ‘அப்படிப் போடு’ பாடலுக்கு விஜய்யும் த்ரிஷாவும் இணைந்து போட்ட குத்தாட்டத்திற்கு தமிழகமே வெறி கொண்டு கூட ஆடியது.  கொண்டாட்ட கூடுகைகளில் தவறாது இடம் பிடிக்கும் பாடலாக இது மாறியது. நாயகனுக்கு இணையான காட்சிகளில் ஹீரோயினும் தோன்றினார்.

‘கில்லி’ த்ரிஷா

‘செல்லம்.. ஐ லவ் யூ’ என்று த்ரிஷாவைப் பார்த்து பிரகாஷ்ராஜ் பேசும் வசனம் ஹிட் ஆனது. இதே வருடத்தில் மணிரத்னத்தின் படத்தில் முதன் முதலாக நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. ‘ஆய்த எழுத்து’ மல்டி ஸ்டார் படம் என்பதால் குறைவான கவனம் கிடைத்தாலும் இளமை ததும்பிய த்ரிஷாவை ரசிகர்கள் கவனிக்கத் தவறவில்லை. 

விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நாயகியாக ஆனார் த்ரிஷா. ராசியான நடிகையாகவும், குறிப்பாக விஜய்க்குச் சிறந்த ஜோடி த்ரிஷாதான் என்பது பெரும்பாலான ரசிகர்களின் அபிப்ராயமாக மாறியது. 2005-ல் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான தெலுங்குத் திரைப்படமும் பயங்கர ஹிட். ‘நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா’ என்கிற அந்தப் படம் மகத்தான வெற்றியை அடைந்து த்ரிஷாவிற்கு இரண்டாவது பிலிம்பேர் விருதையும் நந்தி விருதையும் வாங்கித் தந்தது. இந்தப் படம் தமிழில் ‘உனக்கும் எனக்கும்’ என்கிற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்ட போது இதே த்ரிஷாதான் நாயகியாக நடித்தார். 

தொடர்ந்து குவியும் விருதுகள்

2005-ல் மகேஷ்பாபுவுடன் இணைந்து த்ரிஷா நடித்த ‘அத்தடு’ திரைப்படமும் மகத்தான வெற்றியை அடைந்து தெலுங்கிலும் ராசியான நடிகையாக மாறினார். இடையில் சில திரைப்படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் த்ரிஷாவின் பயணத்திற்கு அவை தடையாக இருந்ததில்லை. 2007-ல் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான ‘ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே’ என்கிற தெலுங்குத் திரைப்படத்தில் வெளிப்பட்ட த்ரிஷாவின் நடிப்பைப் பார்வையாளர்கள் மட்டுமன்றி விமர்சகர்களும் பாராட்டினார்கள். மூன்றாவது பிலிம்பேர் விருதை இதன் மூலம் பெற்றார் த்ரிஷா.

அபியும் நானும்

2008-ல் வெளியான ‘அபியும் நானும்’ திரைப்படத்தின் மூலம் தமிழகத்தின் செல்ல மகளாக மாறினார். `கில்லி’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய அதே பிரகாஷ்ராஜ், இதில் த்ரிஷாவின் பாசமிகு தந்தையாக அற்புதமாக நடித்தார். அப்பா – மகள் உறவைச் சிறப்பாகச் சித்திரித்த இந்தப் படத்தில் த்ரிஷாவின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. தமிழ்நாடு அரசின் மாநில விருதை ‘அபியும் நானும்’ திரைப்படத்திற்காகப் பெற்றார். இதே வருடத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த ‘கிங்’ என்கிற தெலுங்குத் திரைப்படமும் ‘ஹிட்’. 

அடுத்தடுத்த வருடங்களில் த்ரிஷாவின் கொடி இன்னமும் உயரமாகப் பறந்தது. 2010-ல் கெளதமின் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் ‘ஜெஸ்ஸி’ பாத்திரத்தின் மூலம் அழுத்தமான முத்திரையைப் பதித்தார் த்ரிஷா. சிரியன் கிறிஸ்துவப் பெண்ணாக கட்டுப்பாடான சூழலுக்கும் காதலுக்கும் இடையில் தத்தளிக்கும் பாத்திரத்தை அற்புதமாகக் கையாண்டிருந்தார் த்ரிஷா. 2010-ல் வெளியான ‘மன்மதன் அம்பு’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க விரும்பிய த்ரிஷாவின் நீண்ட கால கனவு நிஜமானது. இதே வருடத்தில் இந்தித் திரையுலகிலும் கால் பதித்தார். த்ரிஷாவை அறிமுகப்படுத்திய அதே இயக்குநரான  பிரியதர்ஷனின் இயக்கத்தில் வெளியான ‘கட்டா மீத்தா’ திரைப்படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை இந்தியில் பெற்றார்.

மங்காத்தா

ரிஸ்க் எடுக்கும் துணிச்சல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த ‘மங்காத்தா’ திரைப்படமும் (2011) த்ரிஷாவிற்கு வெற்றியாக அமைந்தது. ஜீவாவுடன் இணைந்து நடித்த ‘என்றென்றும் புன்னகை’ திரைப்படம் சுமாரான வெற்றியை அடைந்தாலும், அதில் வெளிப்பட்ட த்ரிஷாவின் சிறந்த நடிப்பு பரவலாக ரசிக்கப்பட்டது. 2014-ல் கன்னட மொழியிலும் கால் பதித்தார் த்ரிஷா. புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த ‘பவர்’ திரைப்படமும் கமர்ஷியல் ஹிட். 

வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடரும் ஹீரோயின்கள் பொதுவாக ரிஸ்க் எடுக்கத் தயங்குவார்கள். ஆனால் ‘கொடி’ திரைப்படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார் த்ரிஷா. அதிகாரத்தை அடைவதற்காக எதையும் செய்யத் துணியும் வில்லி பாத்திரத்தில் நடிக்க அவர் தயங்கவில்லை. பிலிம்பேர் விருது இந்தப் பாத்திரத்திற்காக கிடைத்தது. 

2018-ல் மலையாளத்திலும் கால் பதித்தார் த்ரிஷா. நிவின் பாலியுடன் இணைந்து நடித்த ‘ஹே ஜூட்’ படத்திலும் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இதே ஆண்டில் தமிழில் வெளிவந்த ‘96’ திரைப்படம் த்ரிஷாவிற்கு எக்கச்சக்கமான பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. ‘ஜானு’ என்கிற சவாலான பாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு நிகரான நடிப்பைத் தந்து அழுத்தமான முத்திரையை ஏற்படுத்தினார். இந்தப் படத்தில் இவர் அணிந்திருந்த உடையும் வரவேற்பு பெற்றது. ஏராளமான விருதுகளையும் ‘ஜானு’ பெற்றார். 

த்ரிஷா

பன்மொழி நாயகி

கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து விட்ட த்ரிஷாவிற்கு ரஜினிகாந்த்துடன் நடிப்பதென்பது எட்டாத கனவாகவே நெடுங்காலமாக இருந்தது. 2019-ல் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் அந்த ஆசையும் நிறைவேறியது. எம்.ஜி.ஆர், கமல் உள்ளிட்ட ஜாம்பவான்கள் முயற்சி செய்தும் கூட கைகூடாத கனவு, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்குவது. கடைசியில் மணிரத்னத்தின் மூலம் அது சாத்தியமானது. அந்த நாவலின் மிக முக்கியமான பாத்திரங்களுள் ஒன்று ‘குந்தவை’. அழகும் அறிவும் ஒருசேர நிரம்பிய பெண் பாத்திரம். இதில் யார் நடிப்பார் என்பதில் பார்வையாளர்களுக்கு மிகுந்த ஆவல் ஏற்பட்டது. 

குந்தவை

இந்தச் சவாலை வெற்றிகரமாகக் கடந்து வந்தார் த்ரிஷா. குந்தவையாக இளவரசி ஒப்பனையில் அவர் திரையில் தோன்றிய போது ஒரிஜினல் இளவரசி இப்படித்தான் இருந்திருப்பாரோ என்கிற பிரமிப்பில் பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். குந்தவையும் நந்தினியுமாக த்ரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் திரையில் தீ பிடித்தது. அப்படியொரு ரசிக்கத்தக்க நடிப்பைத் தந்தார் த்ரிஷா. 

இதற்கு இடையில் பெண்மையத் திரைப்படங்களுக்கும் ஒரு சந்தை மதிப்பு ஏற்பட்டது. ஆனால் பெண்கள் சாகசம் செய்யும் படங்களைப் பொதுவாக பார்வையாளர்கள் ரசிப்பதில்லை. இந்த வரிசையில் த்ரிஷா நடித்த ‘மோகினி’, ‘பரம்பதம் விளையாட்டு’, ‘ராங்கி’, ‘தி ரோட்’ போன்ற படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் போதுமான கவனிப்பைப் பெறவில்லை. 

ஆண்டுகள் கடந்தாலும் குறையாத வசீகரம்

இப்போது த்ரிஷாவிற்கு வயது நாற்பது. ஆனால் எந்தவொரு இளம் நடிகையுடனும் போட்டி போடும் அளவில் குறையாத வசீகரத்தைக் கொண்டிருக்கிறார். முன்னணி நாயகர்கள், இயக்குநர்கள் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். ‘கில்லி’ திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் + த்ரிஷா கூட்டணி நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ‘லியோ’ படத்தில் மீண்டும் இணைந்தது. அஜித்குமார் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘விடாமுயற்சி’ படத்திலும், மணிரத்னம் + கமல் காம்பினேஷனில் உருவாகும் ‘தக் ஃலைப்’ படத்திலும் த்ரிஷா பணியாற்றி வருகிறார் என்பதில் இருந்து அவரது சந்தை மதிப்பு சிறிது கூட சேதாரம் இல்லாமல் அப்படியே தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

த்ரிஷா

என்னதான் அழகும் திறமையும் இணைந்த நடிகையாக இருந்தாலும் குறைந்த காலத்திலேயே மார்க்கெட் இழந்து அக்கா, அண்ணி, அம்மா பாத்திரங்களில் பல நடிககைகள் நடிப்பதை நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் இருபத்தோரு ஆண்டுகள் கடந்தாலும் ஒரு நடிகை நாயகியாகவே தொடர்வது ஒரு தனித்துவமான சாதனை எனலாம். 

த்ரிஷாவின் வசீகரம் குறையாத தோற்றமும் அவரது உடல்வாகும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், டயட் உள்ளிட்டவைகளைக் கொண்டு தனது தோற்றத்தை கச்சிதமாகப் பராமரித்து வருவது நடிகைகளுக்கு அவசியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கொரு முன்னுதாரணமாக இருக்கிறார் த்ரிஷா. பெருநகரத்துக்குரிய ஃபேஷன் ஆடையாக இருந்தாலும் சரி, கிராமத்துப் பெண்ணின் பாவாடை, தாவணியாக இருந்தாலும் சரி, அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. 

சமூக சேவையிலும் ஆர்வம்

த்ரிஷாவிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் உள்ளது என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஆனால் ஒரு புரொஃபஷனல் ஹீரோயினுக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறார். வசீகரமான புன்னகை, குறும்புத்தனமான நடிப்பு, தொழில் சார்ந்த அர்ப்பணிப்பு, கேரக்டரைப் புரிந்து கொண்டு அந்த மீட்டரில் பயணிக்கும் திறமை போன்றவற்றால் தனது வெற்றிப்பாதையை அவர் அமைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இதற்குப் பின்னால் இருப்பது வெறும் அழகு மட்டுமல்ல. கடுமையான உழைப்பும் கூட. த்ரிஷாவிற்குத் தொடர்ந்து டப்பிங் குரல் தரும் சவீதா ரெட்டியின் பங்களிப்பையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதேபோல சின்மயி, கிருத்திகா நெல்சன் ஆகியோரின் குரல்களும் இவருக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போயின. சில படங்களில் சொந்தக் குரலிலும் டப்பிங் பேசியிருக்கிறார் த்ரிஷா. 

Trisha

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை என்பதைத் தாண்டி விலங்குகள் நலனிலும் தொடர்ந்து தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா. PETA அமைப்பின் தூதுவராக இருந்தார். ஆதரவற்ற சிறார்களுக்காக குரல் கொடுக்கும் த்ரிஷாவை யூனிசெஃப் நிறுவனமும் அங்கீகரித்து பாராட்டு தெரிவித்துள்ளது. இப்படியாக சமூக சேவை தொடர்பான பணிகளிலும் த்ரிஷாவின் பங்களிப்பு இருக்கிறது.

‘Queen of South India’ என்கிற பட்டத்தைத் தாங்கி நிற்கிறார் த்ரிஷா. இதை ஏற்படுத்துவது அத்தனை சாதாரணமான விஷயமில்லை. எந்தவொரு துறையிலும் பெண்கள் சாதித்து முன்னணியில் இருப்பது பாராட்டத்தக்க அம்சம்.

த்ரிஷா

அதிலும் கடுமையான போட்டி நிறைந்திருக்கும் சினிமாத்துறையில் இருபத்தோரு ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நடிகை முன்னணியில் நீடிப்பதென்பது ஒரு மகத்தான சாதனைதான். த்ரிஷாவின் சாதனைப் பயணம் மேலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கட்டும் என்று நாமும் வாழ்த்துவோம்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours