பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் `தங்கலான்’ படம் அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில் `தங்கலான்’ படத்தின் சில போர்ஷன்கள் திருப்திகரமாக வரவில்லை என்றும், அதனை ரீ-ஷூட் செய்யவிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் படத்தின் ரிலீஸே தள்ளிப்போகும் எனச் செய்திகள் கிளம்பியிருக்கின்றன.
விக்ரமின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்கப் படமாக ‘தங்கலான்’ உருவாகி வருகிறது. இப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பலர் நடித்துள்ளனர். ஒவ்வொருவரின் உழைப்பும் பெரிதாகப் பேசப்படும் என்கிறார்கள். ‘தங்கலான்’ கதாபாத்திரத்தோடு பல மாதங்கள் பயணித்த விக்ரம், படத்தை முடித்துக்கொடுத்த பின்னரே, அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வந்தார்.
இடையே கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைக்கு வருவதாக இருந்தது. பணநெருக்கடி உட்பட சில சூழல்களால் அந்தப் படம் திரைக்கு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. படத்தின் சிக்கல்களை முன்பே உணர்ந்த விக்ரம், அதன் புரொமோஷனில் பங்கேற்பதையும் தவிர்த்துவிட்டார். ‘ஸ்கெட்ச்’, ‘சாமி 2’, ‘கடாரம் கொண்டான்’ ‘கோப்ரா’ போன்ற கமெர்ஷியல் ஆக்ஷன்கள் கை கொடுக்காத நிலையில் ‘தங்கலான்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார். படம் வெளியான பின்னர் ‘தங்கலான்’ உழைப்பு பேசப்படும், ஆச்சரியப்படுத்தும் என்பதால், அந்தப் பெயரைத் தக்க வைக்கும் விதத்தில் அடுத்தடுத்து கதைகள் தேர்ந்தெடுக்க விரும்பினார்.
இப்போதைய இளைய தலைமுறை இயக்குநர்களின் படங்களில் நடிக்க விரும்பிய விக்ரம், ‘போர்த் தொழில்’, ‘சித்தா’ என இந்தாண்டில் கவனம் ஈர்த்த பல படங்களைப் பார்த்ததுடன், அதன் இயக்குநர்களையும் கூப்பிட்டு, கதைகள் கேட்டு வந்தார். அதில் ‘சித்தா’ அருண்குமார் சொன்ன லைன் மிகவும் பிடித்துவிட, அந்தக் கதையை டெவலப் செய்யச் சொல்லியிருக்கிறார். அருண்குமார் இப்போது கதையை ரெடி செய்து வருகிறார். அதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கத் திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான் ‘தங்கலான்’ ரீ-ஷூட் இருப்பதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்ற தகவல் பரவியிருக்கிறது. இதுகுறித்து பட வட்டாரத்தில் விசாரித்த போது, “இந்தத் தகவலில் உண்மை இல்லை. ரீ-ஷூட், பேட்ச் ஒர்க் வேலைகள் எல்லாம் நிறைவடைந்து விட்டன. படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாகிறது என்பதால் அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் டாப் கியரில் போய்க் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வி.எஃப்.எக்ஸ். பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. படம் வெளியானதும், ‘வி.எஃப்.எக்ஸு’க்கென தனிப்பெயர் கிடைக்கும்” என்கிறது ‘தங்கலான்’ வட்டாரம்.
+ There are no comments
Add yours