முழு தொடருமே நக்கீரன் நிறுவனத்திடம் இருக்கும் பிரதியேக வீடியோக்கள், ஆடியோ டேப்புகள் மற்றும் கடிதங்களால் பின்னப்பட்டுள்ளது. தொடரின் ‘நெரேட்டராக’ வீரப்பனே இருக்கிறார்.
‘First Blood’ என்கிற முதல் எபிசோடு வீரப்பனின் பால்ய கால வாழ்க்கை, குடும்பம், சொந்த மலைக் கிராமம் போன்றவற்றோடு, பழங்குடிகளுக்கு எதிரான வனச்சட்டங்கள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், பண்பாட்டோடும், உணவு முறையோடும் தொடர்புடைய வேட்டைத் துப்பாக்கி, அந்த வேட்டைத் துப்பாக்கி எப்படி வீரப்பனின் கைகளில் சேர்கிறது, பிறகு எப்படி அது அதிகாரத்தில் இருக்கும் மக்களின் ஆசைக்காகச் செயல்படுகிறது போன்றவற்றைப் பேசுகிறது. முதன்முதலாக வீரப்பன் திரையில் தோன்றி தன் கதையைப் பேசத் தொடங்குவது பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைத் தருகிறது. வீரப்பனின் முதல் கொலை அரசியல் காரணங்களுக்காகத்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
‘Into the Wild’ என்கிற இரண்டாம் எபிசோடு எப்படி வேட்டைக்காரன் வீரப்பன் யானைத் தந்தங்களை வெட்டி விற்கும் கொள்ளைக்காரனாகவும் சந்தனக் கடத்தல் மன்னனாகவும் மாறினான் என்பதைப் பேசுகிறது. அவற்றோடு, தலை துண்டாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட டி.எஃப்.ஓ ஸ்ரீனிவாசனின் வருகை மற்றும் அவரின் செயற்பாடுகளைப் பேசுகிறது. இந்த இடத்திலிருந்துதான் இதுவரையில் புழங்கிக்கொண்டிருக்கும் வீரப்பன் கதைகளிலிருந்து வேறுபட்ட பார்வையைத் தொடர் காட்டத்தொடங்கிறது. அந்த மலைக்கிராமங்களில் கோயிலில் சாமியைப் போல வைத்துக் கும்பிடப்படும் ஸ்ரீனிவாசன் ஏன் வீரப்பனால் கொல்லப்படுகிறார், ஸ்ரீனிவாசன் நல்லவரா கெட்டவரா போன்ற கேள்விகளுக்கான பதிலைப் பேசுகிறது இந்த எபிசோடு.
+ There are no comments
Add yours