வெற்றாகவும் சலிப்பாகவும் நகர்வதை விட ‘ஏதாவது ஒன்று நடந்து கொண்டிருந்தாலே’ இந்த சீசனை ஒரு மாதிரியாக ஒப்பேற்றி கரை சேர்த்து விடலாம் போலிருக்கிறது.
இந்த எபிசோடில் அப்படி ஏதாவதொன்று நடந்து கொண்டேயிருந்ததால் அதிகம் சலிப்பு தட்டவில்லை. டான்ஸ் மாரத்தான், அதில் நடந்த பண மோசடி, விசாரணை, மாரத்தானின் இரண்டாம் பகுதி, வாரத்தின் இடையில் நடந்த ‘திடீர்’ எலிமினேஷன் என்று இந்த எபிசோட் ஒரு மாதிரி விறுவிறுப்பாக நகர்ந்து விட்டது. இப்படியே கொண்டு போய் சேர்த்திடுங்கப்பா!
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
நடன நிகழ்ச்சியில் கிடைத்த பணத்தை வைத்து ஆளாளுக்கு ‘ஆட்டம்’ காட்டியதால் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிட்டது. பிக் பாஸின் எச்சரிக்கைக்குப் பின்னர், நடந்த மோசடிக்குத் தீர்வு காணும் விதமாக சபை கூடியது. “ஓகே.. இதை சால்வ் பண்ணிடலாம்” என்று நேரடியாக கிளைமாக்ஸ் காட்சிக்கு சென்றுவிட்டார் மணி. அதற்கு காரணம் உண்டு. ரவீனா ஆரம்பத்தில் செய்த பிழைதான் மற்றவர்களிடமும் பரவி ஸ்கோர் போர்டை களங்கப்படுத்தி விட்டது. எனவே இந்த விசாரணையை மணி தவிர்க்க நினைக்கிறார்.

ஆனால் இடையில் புகுந்த நிக்சன், “ஏன் இந்தப் பிரச்னை வந்ததுன்றதைப் பத்தி முதல்ல பேசணும். அப்புறம்தான் தீர்வு” என்று சொன்னது சரியானது. முதலில் நடனம் ஆடியது மணி. அப்போதே அவருக்கு மொத்தப் பணத்தையும் பரிசாகக் கொடுத்து விட்டார் ரவீனா. ஏனெனில் மணி ஜெயிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். பணத்தைக் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் இருக்கலாம் என்பதுதான் விதி. எனவே இந்த நோக்கில் ரவீனா செய்தது தவறில்லை. ஆனால் தார்மீக அடிப்படையில் இது சரியில்லை.
ரவீனா முதலில் பற்ற வைத்த பிழையின் நெருப்பு
கரன்ஸி தரப்பட்டது, மற்றவர்களின் கலைத்திறமையைப் பார்த்து பணம் தருவதின் மூலம் அவர்களைப் பாராட்டுவதற்காக. இது ஒருவகையான அங்கீகாரம். நடனக்கலைஞரான ரவீனாவிற்கு இது புரிந்திருக்க வேண்டும். மாறாக ஒட்டுமொத்த பணத்தையும் முதலிலேயே மணிக்குத் தந்து விட்டால், அடுத்து நடனமாடுபவர்களின் திறமையைப் பற்றி அவர் அக்கறையே கொள்ளவில்லை என்றுதான் பொருள். சுயநலம் ரவீனாவின் கண்களை மறைத்தது முறையானதல்ல.
இது பற்றி மாயா ரவீனாவிடம் விசாரித்த போது “அது என் இஷ்டங்க” என்று சாதித்தார். “நீங்க அப்படி ஆரம்பிச்சு வெச்சதாலதான் எல்லாமே மாறிடுச்சு” என்பது மாயாவின் குற்றச்சாட்டு. “மணி டான்ஸ் ஆடி முடிச்ச கையோடு பணத்தை ரவீனா கொடுத்திட்டாங்க. அதைப் பொதுவுலயும் சொல்லிட்டாங்க. அப்புறமா எதையும் மாத்தல” என்று ரவீனாவிற்கு ஆதரவு தந்தார் தினேஷ். பூர்ணிமாவும் அப்படி விஜய்யிடம் பணம் தந்ததை ரவீனா சுட்டிக் காட்ட “அது சும்மா கொடுத்தேங்க.. அப்புறம் வாங்கிப்பேன்” என்று சமாளித்தார் பூர்ணிமா. அது ரவீனாவின் ஸ்ட்ராட்டஜிக்கு எதிர்வினையாக செய்யப்பட்ட ஸ்ட்ராட்டஜி. விஜய்யை ஜெயிக்க வைத்து அதன் மூலம் பாயின்ட்டைப் பெற்றுக் கொள்ளும் தந்திரம்.

“ஓகே.. எல்லாக் கோட்டையும் அழிங்க. மொதல்ல இருந்து ஆரம்பிப்போம். எல்லோருடைய டான்ஸையும் பார்த்தீங்க… இப்ப அவங்க அவங்க மனச்சாட்சிப்படி கொடுங்க.” என்று நிக்சன் சொன்ன யோசனை நியாயமானது. ஆனால் விசித்ரா இதை மறுத்தார். “எனக்கு வந்த பரிசுப்பணத்தை எப்படி கொடுக்க முடியும்?” என்றார். ஆனால் பெரும்பான்மையானவர்கள் நிக்சனின் ஐடியாவிற்கு ஒப்புக் கொண்டனர். ஒவ்வொருவராக சென்று பணத்தை வைத்து விட்டு வந்தார்கள். சுரேஷ் மறைவாக செய்ய “வெக்கறீங்களா.. அங்க இருந்து எடுத்துட்டு வரீங்களா?” என்று விஷ்ணு கிண்டலடித்தார்.
ஸ்கோர் போர்டு திருத்தப்பட்டது. இதில் மணி 7550 தொகை பெற்று முன்னணியில் இருந்தார். அடுத்த இடத்தில் நிக்சன். “மொதல்ல எனக்கு அதிகமா இருந்தது. இப்ப கம்மியாயிடுச்சு” என்று ஆதங்கப்பட்டார் அனன்யா. இப்படி பலருக்கும் தொகையில் ஏற்ற இறக்கம் வந்திருக்கும். “ஒரு ஆளு பண்றது எத்தனை பேரைப் பாதிக்குதுன்னு பாருங்களேன்” என்று வெளியில் நிக்சன் பேசிக் கொண்டிருந்தார். “ரவீனாவைப் பொறுத்தவரை மணி ஜெயிக்கணும்ன்றதுதான் முக்கியமா இருக்கு. இப்படின்னு தெரிஞ்சிருந்தா வோட்டிங்ல மணிக்கு எதிரா போட்டிருப்பேன்” என்றார் பூர்ணிமா. “ரெண்டாவது முறையும் மணிக்கு சாதகமாத்தான் அலையடிச்சிருக்கு. சுரேஷூம் ரவீனாவும் செஞ்ச வேலை” என்று விசித்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் மாயா.
மீண்டும் செல்லம் கொஞ்சிய பிக் பாஸ்
நாள் 74. “ரவீனா செய்யற பாரபட்சம், பூமராங் மாதிரி உனக்குத்தான் திரும்பி வரும்” என்று மணியிடம் விஷ்ணு சொன்னது சரியானது. “எல்லாத்தையும் எனக்கே கொடுத்துட்டா. வேணாம். மத்தவங்களுக்கு கொஞ்சமாவது பிரிச்சுக் கொடுன்னு சொன்னேன்… மறுத்துட்டா” என்று ஆதங்கப்பட்டார் மணி. விசாரணை நாளில் இந்தப் பிரச்னை நிச்சயம் வெடிக்கும் என்று தோன்றுகிறது. ‘கலைஞர்களை இப்படி அவமானப்படுத்தலாமா?’ என்று கமல் விசாரிக்கக்கூடும்.
ஆனால் இந்த உரையாடலின் இறுதியில் மணி சொன்ன லாஜிக் காமெடியாக இருந்தது. “மாயா எனக்கு எதுவுமே தரல. அப்ப ரவீனா மொத்தமா தந்ததும், மாயா ஒண்ணுமே தராததும் ஒண்ணுதான்” என்றது அபத்தமான தர்க்கம். மணிக்கு ரவீனாவை விட்டுத்தர மனமில்லை என்பதுதான் இதன் பொருள்.

திருத்தப்பட்ட ஸ்கோர் போர்டு வந்ததும் பிக் பாஸின் அறிவிப்பு கேட்டது. “மாட்டினவுடனேதான் திருந்தத் தோணுதா?” என்று திரும்பவும் ஒரு பரேடு வைப்பார் என்று பார்த்தால் “செல்லங்களா.. மீண்டும் என் மனசுல இடம் பிடிச்சிட்டீங்க.. துவண்டு போயிடுவீங்கன்னு பார்த்தா, இதைச் சரி செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் திரும்பி வந்துட்டீங்க. லவ் யூ ஆல். பெருமையா இருக்கு” என்று ‘படுத்தே விட்டானய்யா’ ரேஞ்சில் தவழ்ந்து வந்து பாராட்டினார் பிக் பாஸ். ஒருவர் நிதி மோசடி செய்து, அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, ‘ஓகே.. நான் பணத்தை திரும்ப வெச்சிடறேன்” என்றால் அவருக்கு பாராட்டு தெரிவித்து மாலை போட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாமா?
சுரேஷின் அபத்தமான புலம்பல்
‘டான்ஸ் நிகழ்ச்சியின் அடுத்தக் கட்டம். இதில் பத்து பேர் மட்டுமே ஜோடியாக ஆடுவார்கள். மீதமுள்ள மூன்று நபர்களை கழித்துக் கட்ட வேண்டும். அதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் சுரேஷ் மற்றும் அனன்யாவின் பெயர் பல முறை வந்தது.
தன்னுடைய வாக்கெடுப்பு வரும் போது சுரேஷ் ஆற்றிய புலம்பல் உரை ஒரு நல்ல காமெடி. “நான் சரியா பண்ணலைன்னு சொன்னா அதுக்கெல்லாம் நீங்கதான் காரணம். நான் எது பண்ணாலும் பாராட்ட உங்களுக்கு மனதில்லை. ஏதோ ஸ்ட்ராட்டஜின்றீங்க.. ஃபேவரிஸம்ன்றீங்க.. அது தெரியவே எனக்கு 70 நாள் ஆச்சு. இன்னொன்னு… சிம்புதான் என் மூச்சு.. பேச்சு. அவரை மாதிரி எதையாவது செஞ்சு அது தப்பாயிடக்கூடாது” என்றெல்லாம் சுரேஷ் புலம்பியது அத்தனையும் அபத்தமானது.

ஒரு நடிகர் தனக்குப் பிடித்தமானவர் என்றால் அதைப் போல் நகலெடுக்க முயல்வதுதான் ரசிகனுக்கு அழகு. சுரேஷ் வீட்டில் எதையுமே செய்யாமல் “என்னை ஆதரிக்கவில்லை, பாராட்டவில்லை, வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள்’ என்று சொல்வதெல்லாம் சொந்தக் குறைகளை பூசி மெழுகும் ‘பேட்ச் வொர்க்’ வேலை.
இறுதியில் மணி, சுரேஷ், அனன்யா ஆகிய மூவரும் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல தகுதியில்லாதவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மீதமுள்ள பத்து நபர்களுக்கான ஜோடியை தீர்மானிக்கும் நேரம். இதில் பூர்ணிமாவும், விசித்ராவும் இணைந்து ஆட வேண்டும் என்பதற்கு இருவருமே மறுத்தார்கள். காம்பினேஷன் சரியாக இருக்காது என்பது காரணம். ஆனால் வேறு சாய்ஸ் இல்லை என்பதால் ஒப்புக் கொண்டார்கள்.
மேடையை ஆக்ரமித்த மாயா
‘போட்டுத் தாக்கு’ என்கிற பாடல் ஒலிக்க, முதலில் ஆடியது விக்ரம் – அர்ச்சனா ஜோடி. வடிவேலுவின் உடல்மொழியை இயன்ற வரையில் பிரதிபலிக்க முயன்றார் விக்ரம். ஆனால் வெறியுடன் இறங்கி குத்தி ஆடிய அர்ச்சனாவிற்கு அதிக வாக்குகளின் மூலம் வெற்றி கிடைத்தது நியாயமான விஷயம். “நீஙகளாவது என் பேரைச் சொல்லுங்க பிக் பாஸ்” என்று காமெடி செய்தார் விக்ரம்.

டான்ஸ் தொடர்பான நிகழ்ச்சியில் ஒரு டான்ஸர் ஒதுக்கப்படுவது துயரமானது. ஆனால் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த மணி பாடலுக்கு அசத்தலாக ஆடியது பாராட்டத்தக்கது. அது போட்டியோ, இல்லையோ, திறமையும் ஆர்வமும் இருக்கிறவன் எங்கிருந்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பான் என்பதற்கு மணியின் உற்சாகம் ஒரு நல்ல உதாரணம்.
‘வந்தேன்.. வந்தேன்’ என்கிற பாடலுக்கு அடுத்து ஆடியவர்கள் ரவீனாவும் மாயாவும். இதை காமெடியாகத்தான் கையாள வேண்டும் என்று ஆரம்பத்திலேயே மாயா தீர்மானித்துக் கொண்டார். எனவே முகத்தில் மாவு பூசி வேடிக்கையான தோரணையுடன் வந்தார். மேடையில் ரவீனாவை வழிமறித்து வெறியுடன் ஆடினார்.
என்னதான் போட்டி என்றாலும் ஒரு மேடையில் மற்றவர்களுக்கும் இடம் தந்து ஆடுவதுதான் மரபு. இதை மாயா மீறி விட்டார். மாயாவின் காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பூர்ணிமா மாயாவிற்கு வாக்களித்தார். ஆனால் நிறைய வாக்குகள் ரவீனாவிற்கு விழுந்ததும், “நான் மாத்திக்கட்டுமா” என்று கேட்டு ரவீனாவிற்கு வாக்களித்தது தவறான விஷயம். அவருடைய ஓட்டுதான் வெற்றியை தீர்மானித்தது. ரவீனா வென்றார்.
இது தொடர்பாக பிறகு மாயாவிற்கும் பூர்ணிமாவிற்கும் ஒரு உரசல் ஏற்பட்டது. ‘பேசாதே.. பேசாதே..’ என்று இடையில் புகுந்து காமெடி செய்தார் விக்ரம். மாயாவின் மேடை ஆக்கிரமிப்பைப் பூர்ணிமா சுட்டிக்காட்ட ‘சரிங்க.. பரவாயில்லைங்க’ என்று கசப்பாகச் சிரித்து விட்டு சென்றார் மாயா. “பரவாயில்ல. பூர்ணிமாவும் குரல் தரா” என்று இன்னொரு பக்கம் ரவீனாவிடம் பாராட்டிக் கொண்டிருந்தார் மணி.

“ரவீனா ஜெயிக்கட்டுங்க.. அது எனக்குப் பிரச்னையே இல்ல. ஆனா நான் ஆடினதை என்ஜாய் பண்ணி செஞ்சேன். மத்தவங்களுக்குத்தான் புரியாது. உங்களுக்குப் புரியலையா?” என்று மாயா சொல்ல “உங்ககூட பேசறதே வேஸ்ட்டு” என்று பூர்ணிமா கோபித்துக்கொள்ள “ஸாரிங்க.. விட்ருங்க. இந்த வீட்டில் ஃபன் கூட பண்ண முடியலைங்க” என்று மாயா சலிப்புடன் பேச, கோபத்துடன் பூர்ணிமா அங்கிருந்து அகன்று சென்றார். இருவருக்கும் இடையில் நிகழும் இரண்டாவது சண்டை இது. டாஸ்க்குகள் கடினமாக கடினமாக இது போன்ற உரசல்கள் அதிகமாகும்.
நிக்சன் தந்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மூன்றாவது நடனப் போட்டி விஷ்ணு மற்றும் தினேஷிற்கும் இடையே நடந்தது. ‘வர்றியா..’ என்கிற பாடலுக்கு இருவரும் அவரவர் பாத்திரங்களில் நின்று ஆடினார்கள். இதில் விஷ்ணு வெற்றி பெற்றார். அடுத்து நிகழ்ந்தது ஒரு ரகளை. ‘அதாரு.. அதாரு’ பாடலுக்கு விஜய்யும் நிக்சனும் ஆடினார்கள். நிக்சன் வெறித்தனமாக ஆட அதற்கு ஈடு கொடுத்து ஆடினார் விஜய். ஒரு மேடையை எப்படி இணக்கமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு உதாரணமாக இவர்களின் நடனம் இருந்தது. மாயா இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம். போட்டிதான் என்றாலும் அத்தனை தோழமையுடன் ஆடினார்கள்.
இதில் நிக்சன் செய்த ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டு சொல்ல வேண்டும். கடந்த முறை ஆடிய போது எவரும் எதிர்பாராமல் தலையில் தண்ணீர் கொட்டிக் கொண்டு வந்து ஆடினார், அல்லவா? அது போல் இந்த முறை உள்ளே மறைவாக கட்டியிருந்த லுங்கியை வெளியே விட்டு அதையே ஒரு நல்ல பிராப்பர்ட்டியாக வைத்து இறங்கி குத்தி ஆடினார். சம்பந்தப்பட்ட படத்தின் ஒரிஜினல் பாடல் காட்சியிலும் லுங்கி இருக்கும். இப்படி எதிர்பாராமல் ஒரு ‘சர்ப்ரைஸ்’ தருவது ஒரு கலைஞனின் ஆர்வத்தையும் தனித்தன்மையையும் காட்டும் அம்சம்.

நடிகர் நாகேஷூடன் காட்சிகளில் நடிப்பவர்கள் ஒரு விஷயத்திற்கு பயப்படுவார்களாம். ஆட்சேபம் தெரிவிப்பார்களாம். ரிகர்சலின் போது ஸ்கிரிப்ட்டில் உள்ளது படி பேசி தயாராகும் நாகேஷ், டேக் வரும் போது திடீரென்று டைமிங்கில் சொந்த வசனத்தை சொல்லி விடுவாராம். அது அற்புதமாகவும் இருக்கும். எதிரே நடிப்பவர் ஒரு கணம் திகைத்து நின்று விடுவார். “என்னப்பா.. இவன் திடீர்னு இப்படிப் பண்ணிடறான்” என்று புகாராக சொன்னவர்கள் நிறைய. நிக்சனின் லுங்கி ஐடியா, இந்த நோக்கில் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.
“விஜய்ண்ணா.. செமயா டான்ஸ் ஆடறவரு.. நான் முதல்ல பயந்துட்டேன். ஆனா அனுசரிச்சு ஆடினாரு” என்று விஜய்யின் பெருந்தன்மையை மனமார பாராட்டினார் நிக்சன். இதில் நிக்சன்தான் வெற்றி பெற்றார். அடுத்ததாக பூர்ணிமா – விசித்ரா ஆடினார்கள். “என் பேரு மீனாகுமாரி” என்கிற பாடல் ஒலிக்க, பூர்ணிமா வெறியுட்ன ஆட, விசித்ராவோ நார்மல் மோடை கடைப்பிடித்தார். வெற்றி பெற்ற பூர்ணிமா, விசித்ராவின் காலில் விழுந்து பரிசுப் பணத்தை வாங்கினார்.
பாயின்ட்டை பூர்ணிமாவிற்கு தந்த அர்ச்சனா
வயது காரணமாக விசித்ராவால் வேகமான அசைவுகளை செய்ய முடியவில்லையோ என்று பார்த்தால் அதற்கு கூடுதல் காரணமும் இருந்தது. “எனக்கு ஏன் இந்தப் பாட்டைக் கொடுத்தாங்க.. நான் இதில இருந்து வெளியே வந்து எத்தனையோ வருஷம் ஆச்சு. என் வீட்ல பார்ப்பாங்கள்ல” என்று விசித்ரா நெருடலுடன் பேசியதைப் புரிந்து கொள்ள முடிந்தது. “நீங்க ஆர்ட்டிஸ்ட் மம்மி.. ஒண்ணும் தப்பா போகாது” என்று ஆறுதல் சொன்னார் மணி.
இதற்கான முடிவுகளை அறிய வேண்டிய நேரம். ‘அதிக கரன்ஸி வைத்திருப்பவர்’ என்கிற பிரிவில் முதலிடத்தில் இருந்தார் நிக்சன். என்றாலும் நடனப்பிரிவில் வருவதற்கும் நிக்சன் தகுதியானவர்தான். அடுத்து ‘பாத்திரத்தை சிறப்பாக கையாண்டவர்’ என்கிற பிரிவில் இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் பலரும் அர்ச்சனாவின் பெயரைச் சொன்னது சந்தேகமே இல்லாமல் நியாயமான தேர்வு. அந்த அளவிற்கு ‘ஈஸ்வரி’ பாத்திரத்துடன் ஐக்கியமாகி அசத்தினார் அர்ச்சனா. “எனக்கு ஈஸ்வரியோட நட்பே வந்துடுச்சு. ஆனா அர்ச்சனா கூட இன்னமும் வரலை” என்று குறும்பாகப் பாராட்டினார் மாயா.

படையப்பாவாகவே வாழ்ந்த தினேஷ் இன்னொரு தேர்வாக வந்ததும் சிறப்பான விஷயமே. ஒப்பனை முதற்கொண்டு உடல்மொழி வரை இயன்றதை தொடர்ந்து தந்தார் தினேஷ். ஆக நிக்சன், அர்ச்சனா, தினேஷ் ஆகிய மூவரும் ‘டிக்கெட் டு பினாலே’வில் தலா ஒரு புள்ளியைப் பெற்றார்கள். அர்ச்சனா அதில் கலந்து கொள்ள முடியாது என்பதால் மற்றவருக்கு வழங்கலாம். அவர் பூர்ணிமாவைத் தேர்ந்தெடுக்க “என்னது.. நானா?’ என்று அலறியடித்துக் கொண்டு எழுந்து வந்தார் பூர்ணிமா.
பிறகு இதற்கான காரணத்தைச் சொன்னார் அர்ச்சனா. “உங்க ஆட்டத்துல ஒரு மாற்றம் தெரியுது. மாயா கூட சண்டை நடந்தது. அதுக்காக சொல்லலை. உங்க கேமை தனியா ஆட ஆரம்பிச்சிருக்கீங்க. அதைப் பாராட்டறதுக்குத்தான் தந்தேன்” என்று விளக்கம் சொன்னார் அர்ச்சனா. மாயா, பூர்ணிமா கூட்டணியை உடைப்பதுதான் அர்ச்சனாவின் திட்டமோ, என்னமோ!. ஆனால் அது நடந்தாலும் நல்லதுதான். இருவரும் தனித்தனியாக ஆடினால் போட்டியில் இன்னமும் வேகம் கூடும்.
பூர்ணிமாவிற்கு பாயின்ட் கிடைத்தது மாயாவிற்குள் சலனத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதற்காக விஷ்ணுவை அவர் ஜாலியாக குறை சொல்லிக் கொண்டிருந்தார். “ஸாரி.. உங்களைப் புரிஞ்சுக்கறதுல எங்கேயோ மிஸ் பண்றேன்” என்று மாயாவிடம் வந்து வருத்தப்பட்டார் பூர்ணிமா.
திடீர் எவிக்ஷன் – அனன்யா வெளியேற்றம்
மதிய உணவு டப்பாவில் உப்புமா வெடிகுண்டு வைத்ததைப் போல ‘Mid Week Eviction’ என்பதை திடீரென்று அறிவித்தார் பிக் பாஸ். நாமினேஷனில் இருந்தவர்களிடம் பீதி பரவியது. விஷ்ணு மிகையாகப் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அனன்யாவிற்கு அது ‘தான்தான்’ என்று உள்ளே தெரிந்து போயிற்று. தன்னிச்சையாக கண்ணீர் விட்டு பிறகு தோழிகள் ஆறுதல் சொன்னவுடன் சிரித்தார். இந்த இருவர் தவிர மற்றவர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.
‘யார் எவிக்ட் ஆவார்கள்?’ என்பதை புகைப்பட புதிர்களை ஒட்டுவதன் மூலம் அறிவிக்கும் விளையாட்டை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது சற்று அசுவாரசியமாகச் சென்றாலும் ‘ஸ்லோ பாய்சன்’ போல மெல்ல மெல்ல சஸ்பென்ஸ் கூடிக் கொண்டே சென்றது. தினேஷ் முதலில் காப்பாற்றப்பட்டார்.

அடுத்ததாக சுரேஷ் காப்பாற்றப்பட்டதை மற்றவர்கள் கொண்டாடினார்கள். அவர் தலையில் வைத்திருந்த புறா ஜோசியம் வேலை செய்தது. விஷ்ணுவிற்குள் பதட்டம் கூடிக்கொண்டே இருந்ததால் புகைப்படத் துண்டுகளை சரியாகப் பார்க்காமல் தடுமாற நிக்சன் கிண்டல் செய்தார்.
வளர்த்துவானேன்?.. இறுதியில் அனன்யாவின் புகைப்படம் முழுமையாகவில்லை என்பதால் அவர்தான் எவிக்டட் என்பது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவரும் அதை எதிர்பார்த்திருந்தார். எனவே சம்பிரதாயமான வார்த்தைகளைச் சொல்லி கண்ணீர் வருவதைத் தவிர்த்து விட்டு வெளியேறினார். இரண்டாவது முறையாக வீட்டிற்குள் வந்தவர், உடனே வெளியேறுவது பரிதாபம்தான்.
கடைசிக் கட்டத்தில் இருந்த விஷ்ணு, அனன்யா, அர்ச்சனா ஆகிய மூவரும் தங்களின் ‘பிரியா விடை உரையை’ தரலாம் என்று பிக் பாஸ் தெரிவிக்க, “ரெண்டு வாரம்தான் இருப்பேன்னு நெனச்சேன்” என்று சிரித்த அர்ச்சனா ஜாலியாக விடை சொன்னார். ஆனால் விஷ்ணுவோ கண்கலங்கி, தடுமாறி “உங்களையெல்லாம் ஹர்ட் பண்ணியிருப்பேன்.. ஸாரி..” என்று குரல் தழுதழுக்க ‘அச்சோ.. ஸ்வீட்..” என்று மற்றவர்கள் கட்டியணைத்துக் கொண்டார்கள். ஒரு சண்டைக்கோழிக்குள் இப்படியொரு சாதுவான லெக்பீஸ் இருப்பது இப்போதுதான் தெரிந்தது.
“ஒருத்தர் எவிக்ட் ஆகி வெளில போற சமயத்துல கூட கெக்கே பிக்கேன்னு சிரிக்கலாமா, அது தவறு” என்று ரவீனாவை விசித்ரா கடிந்து கொண்டது சரியானது. அசந்தர்ப்பமான சமயத்தில் கூட ரவீனா சிரிப்பது எரிச்சலைத் தருகிறது. எதுவுமே தெரியாத அளவிற்கு ரவீனா வெள்ளந்தியானவர் அல்ல. மணி வெளியே போவார்’ என்று யூகித்துச் சொன்னதற்கே கண்கலங்கியவர். அதே பரிதாபத்தை மற்றவர்களுக்கும் தர வேண்டும். “சுரேஷ் சிரிப்பு காட்டினாரு” என்று ரவீனா சொல்ல “அந்த ஆளை எதுலயும் சேர்க்க முடியாது. வெளியே போகணும்னு சொல்லி சொல்லியே ஆட்டம் ஆடறாரு” என்று விசித்ரா சொன்னது இன்னொரு சரியான பாயிண்ட்.

“நீங்க கண்கலங்கினவுடனே பூர்ணிமாவும் கலங்கிட்டா” என்று விஷ்ணுவிடம் ஜாலியாக கோர்த்து விட்டார் மாயா. “என்னாச்சு.. அந்தச் சமயத்துல உங்களைப் பார்க்க ஒரு மாதிரி க்யூட்டா இருந்துச்சு” என்று மீண்டும் ‘ஜெஸ்ஸி’ மோடை அவிழ்த்து விட்டார் பூர்ணிமா. “இத்தனை நாள் இருந்துட்டன்ல.. எவிக்ட் ஆகறதுன்னா.. என்னன்னு இப்பத்தான் புரிஞ்சது.. ஒரு மாதிரி ஆயிடுச்சு” என்று அசட்டுச்சிரிப்புடன் விஷ்ணு சொல்ல “தொண்டைல பிளாக்கா?” என்று கிண்டலடித்தார் பூர்ணிமா. தொண்டை அடைக்கும் விஷயத்தில் பூர்ணிமாதான் சீனியர்.
வார இறுதியில் இன்னொரு எவிக்ஷன் இருக்கும். போட்டியின் இறுதிக்கட்டம் என்பதால் எண்ணிக்கையை குறைத்தாக வேண்டும். அப்போதுதான் ஆட்டத்தில் சூடு பிடிக்கும். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
+ There are no comments
Add yours