21 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
13 டிச, 2023 – 10:35 IST
சினிமாவில் நடிகர்கள்தான் எத்தனை வயது ஆனாலும் கதாநாயகர்களாகவே வலம் வந்து கொண்டிருப்பார்கள். நடிகைகளால் அப்படியெல்லாம் இருக்க முடியாது என்பதை தகர்த்தெறிந்த நடிகைகளில் த்ரிஷா முக்கியமானவர். 70 வயதானாலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் 40 வயதானாலும் கதாநாயகியாக தாக்குப் பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
த்ரிஷா கதாநாயகியாக நடித்து முதன் முதலில் வெளிவந்த படமான ‘மௌனம் பேசியதே’ வெளிவந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. மாடலிங், டிவி தொகுப்பாளர், ரிச் கேர்ள் என வந்து ‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க முதன் முதலில் அவருக்கு வாய்ப்பு வந்தது. அந்தப் படம் வெளியாக தாமதமானது. அமீர் இயக்கிய முதல் படமான ‘மௌனம் பேசியதே’ படம் முதலில் வெளிவந்தது.
‘சாமி’ படத்தின் மாபெரும் வெற்றி த்ரிஷாவை முன்னணி நடிகையாக குறுகிய காலத்தில் உயர்த்தியது. பின் தெலுங்கிலும் நுழைந்து அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த 21 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். இடையில் கொஞ்சம் தொய்வு வந்தது, இருப்பினும் ’96’ மற்றும் ‛பொன்னியின் செல்வன்’ படங்கள் அவருக்கு அடுத்த இன்னிங்ஸை வெற்றிகரமாக பயணிக்க வைத்தது.
தற்போது தமிழில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் த்ரிஷா, அடுத்து தெலுங்கிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க உள்ளார். இப்போதுள்ள முன்னணி கதாநாயகிகளில் சீனியர் நடிகையாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
+ There are no comments
Add yours