ஒரே நாளில் இரண்டு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த சமந்தா
11 டிச, 2023 – 11:20 IST
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. அடுத்து ஹிந்தியிலும் நடிக்க உள்ளார். நடிகைகள் சினிமா தயாரிப்பாளராகவும் மாறுவது அபூர்வமான ஒன்று. இன்றைய தலைமுறை நடிகைகளில் படங்களைத் தயாரிக்கும் நடிகைகளைப் பார்க்க முடியாது. ஒரு சிலர் மட்டுமே துணிச்சலாக இறங்குவார்கள். அந்த விதத்தில் சமந்தாவும் இறங்கியுள்ளார்.
‘ட்ரலலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற தனது கம்பெனியை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். “எனது தயாரிப்பு நிறுவனம் ட்ரலலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் உற்சாகம் அடைகிறேன். இந்நிறுவனம் புதிய சிந்தனை, வெளிப்பாடு, உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நமது சமூக கட்டமைப்பின் வலிமை மற்றும் சிக்கலான தன்மையைப் பற்றிப் பேசும் கதைகளைச் சொல்ல ஊக்குவிக்கும் ஒரு வளர்ப்பு இடமாக இருக்கும். அர்த்தமுள்ள, உண்மையான மற்றும் உலகளாவிய கதைகளைச் சொல்ல ஒரு தளமாக படைப்பாளர்களுக்கு அமையும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தது ஒரு சர்ப்ரைஸ் என்றால் மற்றொரு பக்கம் பிரபலமான எம் டிவியின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் பணியாற்ற உள்ளார். அந்த இசை நிகழ்ச்சி தென்னிந்தியாவில் உள்ள ‘ஹிப் ஹாப்’ திறமைசாலிகளுக்கான தளமாக ‘எம் டிவி ஹசில் நம்ம பேட்டை’ என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சி சமந்தாவின் முதல் தயாரிப்பாக உருவாகிறது. இது குறித்த புரமோவில் அது பற்றி பெருமை பொங்க கூறியுள்ளார் சமந்தா.
ஒரே நாளில் இரண்டு சர்ப்ரைஸ்களை சமந்தா கொடுத்து திரையுலகிலும், இசையுலகிலும் பல புதியவர்களுக்கு பாதை அமைத்து கொடுத்துள்ளார் என ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டுகிறார்கள்.
+ There are no comments
Add yours