Bigg Boss 7 Day 69: சரணடைந்த நிக்சன்; லாக்கான அர்ச்சனா, விஷ்ணு! இந்த கிம்மிக்ஸைக் கைவிடலாமே கமல்?!

Estimated read time 1 min read

வடசென்னை போன்ற நிலப்பரப்பில் வாழ்பவர்கள், வன்முறையாளர்கள், ரவுடிகள், கோபம் நிறைந்தவர்கள் என்கிற எதிர்மறையான முத்திரை நீண்ட காலமாகவே பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. இந்த வரலாற்றுக் கறையை சிறிதாவது துடைக்கும் முயற்சியில் கமல் இன்றைக்கு ஈடுபட்டது சிறப்பானது.

‘நிக்சனை ஏன் பலமாகக் கண்டிக்கவில்லை, மாயா, பூர்ணிமாவை ஏன் சாய்ஸில் விடுகிறார்’ என்பது போன்ற சிறிய காரணங்களை விடவும் மேக்ரோ பார்வையில் சமூக மாற்றத்திற்கான அவசியத்தைப் பதிவு செய்த கமலுக்குப் பாராட்டு! ஆனால் இப்படியொரு முத்திரை விழுந்ததற்கு தமிழ் சினிமாவிற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கமலும் ஒருவிதத்தில் அதன் பங்காளியாக இருந்தார் என்பதுதான் முரண்நகை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

“சென்னையில் வெள்ள சேதம். அன்பில் மிதக்கவிட்ட தமிழகத்திற்கு நன்றி. அதற்காக நன்றியோடு விட்டுட முடியுமா? சில கேள்விகள் இருக்கு. வரி கட்டறேன். மின் கட்டணம் கட்டறேன். நான் எதுக்கு ரோட்ல பாலுக்கும் பிஸ்கெட்டுக்கும் கையேந்தணும். மொதல்ல ரோட்டுக்கே வரமுடியலையே? ஏரில போய் ஏன் வீடு கட்டினீங்கன்னு உங்களுக்குள்ளே கேக்கறீங்க? அதுக்கும்தானே வரி கட்டியிருக்காங்க. எங்க வீட்டுல வர்ற பாம்பு உங்க வீட்டுக்கு ஏன் வர மாட்டேங்குது. உங்க வீட்டுக்கு வர்ற பம்பு எங்க வீட்டிற்கு ஏன் வரமாட்டேங்குது. இது அரசியல் இல்லை. உரிமைக்குரல். செவிமடுத்தே ஆக வேண்டும். பிரச்னைக்கு நடுவுல விமர்சனம் பண்ணக்கூடாது. அது ஓய்ஞ்சப்புறம் கோபமில்லாம கேள்வி கேக்கணும். இது நான் சொல்ற அறிவுரை இல்லை. எனக்கு நானே செய்து கொண்ட சத்தியம். நீங்களும் அதைப் பின்பற்றினா நல்லாயிருக்கும்” என்கிற முன்னுரையுடன் வந்த கமல், வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றார்.

Bigg Boss 7 Day 69

‘நாமினேஷன் பற்றி விவாதிக்கக்கூடாது’ என்று சொல்லப்பட்டிருந்தாலும் விஷ்ணுவும் தினேஷூம் அதை உற்சாகமாகச் செய்து கொண்டிருந்தார்கள். “ஏம்ப்பா… நீ இதை வெளில போட்டுக் கொடுத்துடாதே. செல்லாத ஓட்டு போட்டுடாத” என்று நடுவில் அமர்ந்திருந்த சுரேஷிடம் விஷ்ணு சொல்ல அவர் மையமாகச் சிரித்து வைத்தார். இத்தனை கேமராக்கள் இருக்கும் போது சுரேஷ் ஏன் இதைப் போட்டுக் கொடுக்க வேண்டும்?! “ஜாக்பாட் டாஸ்க் நெனச்சு முதல்ல பயந்துட்டேன். அழுதுட்டேன். அரக்கன் மாதிரி நிக்கறான் விஷ்ணு. பேசவே விட மாட்டேங்கறான். தப்பா புரொஜக்ட் பண்றான்” என்று அனத்திக் கொண்டிருந்தார் பூர்ணிமா.

நிக்சன் மீது உரிமைக்குரல் எழுப்புவதில் அர்ச்சனாவிற்கே உள்ளூற மெல்லிய சந்தேகம் இருந்தது போல. “இந்த வாரம் அவன் போயிட்டான்னா விசாரணையில் இம்பேக்ட் இருக்காதோ?” என்று தினேஷிடம் அவர் சந்தேகம் கேட்க, “எப்படி இருந்தாலும் இதன் தாக்கம் இருக்கும். நீ யோசிச்சிக்கோ” என்று வழிநடத்தினார் தினேஷ்.

பூர்ணிமாவின் அழுகையும் மாயாவின் ஆறுதலும்

நாள் 69. எதையோ நினைத்து நினைத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் பூர்ணிமா. அவர் கையில் குத்தியிருந்த டாட்டூவில் ‘அச்சமில்லை’ என்றிருந்த வாசகம் இப்போது முரண்நகையாகத் தெரிந்தது. மாயாவை அவசரமாக அழைத்து ஆறுதல் தேடிய பூர்ணிமாவிடம் “நீ தைரியமான பொண்ணு. இப்ப என்ன ஆயிடும். கேம் விட்டுப் போவே. வெளில நடக்கறதை நினைச்சு அழறியா. துரோகம் பண்ணவன்லாம் நிம்மதியா தூங்கிட்டு இருக்கான்” என்று ஆறுதல் கூறினார் மாயா. “என்கிட்ட விஷயத்தை எல்லாம் கேட்டுக்கிட்டு சரியா யூஸ் பண்ணிக்கிட்டாரு. என் கேரக்ட்டரை ஸ்பாயில் பண்ற மாதிரி பேசினாரு. அப்படில்லாம் ஜெயிச்சு அவர் கப் வாங்கணுமா?” என்ற பூர்ணிமாவிடம் கண்ணீர் பெருகியது.

விஷ்ணு பேசிய கடுமையான புறணியையெல்லாம், ஜாக்பாட் டாஸ்க்கின் போது விஜய் அம்பலப்படுத்திய அதிர்ச்சியிலிருந்து பூர்ணிமா இன்னமும் வெளியே வரவில்லை போல! “விஷ்ணு உன்னை மிதிச்சிட்டு போயிட்டே இருப்பான். ஜாக்கிரதை” என்று மாயா ஏற்கெனவே எச்சரிக்கும் போதெல்லாம் ரொமான்ஸ் மூடில் இருந்த பூர்ணிமாவிற்கு காது கேட்கவில்லை. வீட்டுப் பணியில் சிறந்தவராக ரவீனா தேர்ந்தெடுக்கப்பட்டு டாஸ்க் விளையாடி பரிசு வென்றார்.

Bigg Boss 7 Day 69

“மாயா சரியான விஷம். என்னை பூர்ணிமா கூட கோர்த்து விட்டது. என்னை ‘நிக்சன் – ஐஷூ’ போல நெனச்சிட்டா போல” என்று தினேஷிடம் பொங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவிடம் “பால் உள்ளே வெச்சிட்டே இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்று புகார் தெரிவித்தபடி வந்தார் அர்ச்சனா. (அங்கயும் பால் தட்டுப்பாட்டு பிரச்னைதானா?!). இன்னொரு பக்கம் பார்த்தால், “என்னை ஏன் விட்டுத் தருகிறாய்?” என்று ரவீனாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் மணி. இதற்கு விளக்கம் சொல்லி ஓய்ந்த ரவீனா, ஒரு கட்டத்தில் சாரி என்று இறங்கி வந்தார். (முடியல!)

அர்ச்சனா எழுப்பிய உரிமைக்குரல்

அகம். கமல் என்ட்ரி. “சுரேஷ் நீங்க வேணா வெளில போய் ஜாலியா உலாத்திட்டு வாங்களேன். ஏன்னா… நான் இங்க முக்கியமான விஷயம் பேசப் போறோம்” என்று ஆரம்பத்திலேயே ‘கூல்’ சுரேஷை பதற்றத்தில் வியர்க்க வைத்தார் கமல். ஆட்டத்தில் பட்டும் படாமல் விலகியிருக்கும் சுரேஷின் மெத்தனம் குறித்த கிண்டல் இது. ஒதுங்கியிருப்பது போன்ற பாவனையை மேற்கொண்டாலும், சூழலுக்குத் தகுந்தபடி ஆட்களை ஏற்றி, இறக்கிப் பேசும் திறமை சுரேஷிடம் இருக்கிறது.

சிவப்பு நிற கையுறையை உயர்த்துவதின் மூலம் உரிமைக்குரல் எழுப்பினார் அர்ச்சனா. “கொடியின் வண்ணம் தெரிகிறது. எனது எண்ணமும் அதுவாக இருக்குமென்றால் விவாதத்தின் மூலம் உங்களுக்குத் தெளிவு கிடைக்கலாம்” என்று அர்ச்சனாவின் ‘முதல் தகவல் அறிக்கையை’ சாமர்த்தியமாக தள்ளிவைத்தார் கமல். பிறகு நிக்சனிடம் ஒரு நேரடி விசாரணை. “சொருகிடுவேன்னு சொன்னீங்களே… இங்கயா… இல்ல இங்கயா?” என்று தன் கண்ணை ‘ராகவன் ஐபிஎஸ்’ பாணியில் கமல் விரித்துக் காட்டியவுடன், அர்ச்சனா ‘வாவ்’ என்று புல்லரிக்க, பதற்றமான முகத்துடன் நின்று கொண்டிருந்தார் நிக்சன். பார்வையாளர்கள் பலமாகக் கைத்தட்டினார்கள் அல்லது அந்த மாதிரியான ஓசை கேட்டது.

Bigg Boss 7 Day 69

கமல் இது போன்ற கிம்மிக்ஸ்களையெல்லாம் மெல்ல கை விட்டு விடலாம். படு செயற்கையாக இருக்கிறது. கடந்த சீசன் ஒன்றில், சென்ட்ராயனுடன் ஐஸ்வர்யா தத்தா சபையில் கோபமாக விவாதித்த போது ‘ஹோல்டான்’ என்று தான் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டை கழற்றி கைகளை மடித்து விட்டுக் கொண்டார் கமல். அது சல்மான் கானின் அதிரடி பாணியைப் பிரதிபலித்தது போல இருந்தது. அவ்வாறான அணுகுமுறையை தமிழ் சீசனில் தவிர்ப்பதாக கமல் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். கமல் கண்ணை சினிமாவில் விரித்துக் காட்டுவது, எனக்கும் கூட பிடித்த காட்சி. பல முறை இந்தக் கட்டுரைத் தொடரில் கூட மேற்கோள் காட்டியிருக்கிறேன். ஆனால் கமலே அதை மேடையில் செய்வது ரசிக்கத்தக்கதாக இல்லை. இந்த மாதிரி கிம்மிக்ஸ்களைப் பார்வையாளர்கள் நிச்சயம் விரும்புவார்கள், புரொமோவில் போடுவதற்கும் ஆகும் என்று தொடர்கிறாரோ, என்னவோ!

நிக்சனின் விளக்கமும் கமலின் கோபமும்

“நான் பிஸிக்கலா மீன் பண்ணலை. உச்சபட்ச கோபத்துல சொன்னதுதான். வெளில சாதாரணமா பேசறதை இங்க சொல்லிட்டேன்” என்று குற்றவுணர்வுடன் நிக்சன் சொல்ல, “இங்க அப்படில்லாம் பேசக்கூடாது. சொருகறதுக்கு யெல்லோ கார்டு இருக்கு. அது தொடர்ந்தா கார்டோட கலர் மாறும்” என்று மென்மையான எச்சரிக்கையுடன் நிக்சனை விட்டுவிட்டார் கமல். நிக்சன் முழுதாக சரணாகதி அடைந்தது காரணமாக இருக்கலாம். மேலும் அந்தக் கோபத்திற்குப் பின்னால் அர்ச்சனாவின் தூண்டுதலும் இருந்தது.

“இந்த வீட்டில் சில வார்த்தைகளை அவற்றின் அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்திக் கொண்டு வருகிறீர்கள்” என்று சுட்டிக் காட்டிய கமல் “வெச்சு செஞ்சுடுவேன்”, “அடிச்சு காலி பண்ணிடுவேன்”, “ஆட்டிக்கிட்டே வராங்க” போன்றவற்றை உதாரணம் காட்டினார். இதில் ‘வெச்சு செஞ்சுடுவேன்’ என்கிற வார்த்தைகளின் பயன்பாடு, அதன் வில்லங்கமான அர்த்தம் தெரியாமலேயே இளைய தலைமுறையினரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு நார்மலைஸ் ஆகிவிட்டது என்பதை கடந்த சீசன் கட்டுரைகளிலேயே நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இப்போதோ அது மிக மிகச் சர்வசாதாரணமாக நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வருகிறது.

Bigg Boss 7 Day 69

பணியில் செய்த தவற்றை மேலதிகாரி கடுமையாக எச்சரித்தார் என்றால் ‘அவர் என்னை வெச்சு செஞ்சுட்டார்’ என்று பிறகு பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் அந்த வார்த்தை – என்னுடைய புரிதலில் வன்புணர்ச்சியுடன் தொடர்புள்ளது. அப்படியான பொருளுடன் பெர்வஷனாகச் சொல்லப்பட்ட வார்த்தை, தற்போது வண்ணம் மாறி பொதுவெளிக்குள் எளிதாக நுழைந்துவிட்டது. இது ஆபத்தான போக்கு. கமல் சொன்னதுபோல் அது சென்சார் செய்யப்பட வேண்டியதுதான்.

அர்த்தம் தொியாமலேயே பயன்படுத்தப்படும் ஆபத்தான சொற்கள்

‘ஆட்டிக்கிட்டே வராங்க’ என்பதை வட்டார வழக்காக தினேஷ் முன்னிறுத்தினாலும் அதுவும் தவறே. ‘நண்பர்கள் நடுவில் பேசுவது மாதிரி பேசிவிட்டோம்’ என்று விக்ரமும் தினேஷூம் விளக்கம் சொல்வது கூட முறையில்லை. ஏனெனில் அதனால் ரகசியமாக மனம் புண்படக்கூடிய நண்பர்களும் இருப்பார்கள். ஆனால் இதே ‘ஆட்டிக்கிட்டே வராங்க’ பிரயோகத்தை, தினேஷ் மீது பூர்ணிமா பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். எனில் அதுவும் நிச்சயமாக தவறே! செய்த தவற்றைச் சுட்டிக் காட்டுவதில் பாலினப் பேதமோ, பாரபட்சமோ இருக்கக்கூடாது. தன் மீது சொல்லப்படும் போது பூர்ணிமாவிற்கு வலிக்கும் என்றால், பிறர் மீது அவர் அதைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் நேர்மை.

“தினேஷ்… அப்புறமா சாரி சொல்லிட்டேன்னு சொல்றீங்க. ஆனா அது உங்களுக்கே தப்பா தெரியலையா? இனிமே அப்படிச் செய்யாதீங்க. இது என் வீடு. இது தரமான இடமா இருக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன். சொல்லிலோ, செயலிலோ வன்முறை வெளிப்பட்டால் இனி இந்த அட்டையின் நிறம் மாறும். அப்புறம் வெளிய வந்துதான் பேசணும்” என்று பொதுவான எச்சரிக்கையை பலமாகத் தந்தார் கமல்.

Bigg Boss 7 Day 69

நிக்சனுக்கு மட்டும் பலமான அர்ச்சனை விழும் என்று பார்த்தால், அந்தக் கோபத்திற்குக் காரணமாக இருந்தவர்கள், அதன் மீது விவகாரமான சொற்களில் விமர்சனம் வைத்தவர்களையும் விசாரணையில் இழுத்தார் கமல். “நிக்சனாேட ட்ரூ கலர் வெளியே வந்துடுச்சுன்னு சொன்னீங்களே மணி. அதற்கான பொருள் என்ன?” என்று மணியையும் விசாரிக்க, “அவர் கோபத்துல வார்த்தை விடறது பத்திதான் சொன்னேன்” என்று மேம்போக்காக விளக்கம் அளித்தார் மணி.

‘ட்ரூ கலர்’ பிரச்னையில் சிக்கிய மணி

“நிக்சன் மேற்பார்வைக்கு சில விஷயங்களை இனிமையாகப் பேசினாலும் கோபத்தின் போது உண்மையான எண்ணம் வெளிப்பட்டு அவருடைய நிறம் அம்பலமானது” என்கிற அர்த்தத்தில் மணி சொன்னதாகப் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் மணி சொன்னது ‘நிக்சனின் பிரதேச பின்னணி’ குறித்ததாகப் புரிந்து கொள்ளப்படும் கோணமும் இருக்கிற ஆபத்தை அவர் உணரவில்லை. நடைமுறை வாழ்க்கையிலும் இதைப் பார்க்கலாம். விளிம்பு நிலை மக்கள் சிறிய தவற்றைச் செய்தாலும் “இதுங்களை என்னதான் கூட்டிட்டு வந்து உக்கார வெச்சாலும்” என்று முன்னேறிய சமூகங்களில் சிலர் ஒவ்வாமையுடன் பேசுவதைப் பார்க்கிறோம். இதுவும் ஒருவகையான நவீன தீண்டாமைதான். மணி அந்த நோக்கில் சொல்லவில்லை என்பதில் உண்மை இருந்தால், சந்தேகத்தின் பலனை அவருக்கு அளிப்பதுதான் நியாயமானது.

“கோபப்படாம பேசுன்னு மணி எனக்கு அட்வைஸ் பண்ணியிருக்காரு” என்று அவருக்குச் சார்பாக நிக்சனும் சாட்சியம் அளித்தார். அடுத்ததாக ‘தௌலத்’ என்கிற வார்த்தையை தினேஷ் உபயோகித்த விவகாரத்தை கையில் எடுத்த கமல் “பூசி மெழுக வேணாம். நார்த் மெட்ராஸ்ல அப்படிப் பேசுவாங்கன்னு சொல்றீங்களா… அப்படில்லாம் பிராண்டிங் பண்ணாதீங்க. இனி இங்க இப்படிப் பேசாதீங்க” என்று எச்சரிக்கை விடுத்தார். நிக்சன் உபயோகிக்கும் அதே வட்டார வழக்கையே பயன்படுத்துவதின் மூலம் நிக்சனைக் கிண்டலடிக்கும் உத்தியை தினேஷ் முயற்சி செய்திருக்கலாம். ‘வட்டார வழக்கு. எங்க ஊர்ப்பக்கம் அப்படி’ என்று ஆரம்பத்தில் விளக்கம் அளித்தாலும், கமலின் எச்சரிக்கைக்குப் பிறகு மன்னிப்பு கேட்டார் தினேஷ்.

Bigg Boss 7 Day 69

“நான் ராமநாதபுரத்துக்காரன். அங்கெல்லாம் அருவா வெட்டு, வீச்சு இதெல்லாம் சகஜம். அதனால என்னையும் அப்படிப் பார்ப்பீங்களா. ‘சொருவுற ஏரியா… வீசற ஏரியா’ன்னு பிரிச்சுப் பேசாதீங்க. அந்த ஏரியால இருந்தும் பிஹெச்டி படிச்சவன் வருவான். போலீஸ் ஸ்டேஷன் எங்கெல்லாம் இருக்கோ, அங்கெல்லாம் ரவுடி இருக்கான்னு அர்த்தம். எனவே ஏரியாவை வைச்சு பிரிக்காதீங்க” என்ற கமல், நிக்சனின் ‘கைத்தட்டு’ உடல்மொழியையும் கண்டித்தார். பிறகு அவர் பேசிய விஷயம் முக்கியமானது. “உங்களை அப்படித்தான் பிராண்டிங் பண்ணுவாங்க. பிரவோக் பண்ணுவாங்க. நீங்கதான் அதையெல்லாம் மாத்தி ஜெயிச்சுக் காட்டணும். சொருவுறது மூலமா இல்ல. நல்ல விதமா மாத்திக் காட்டணும்” என்று நிக்சனிடம் சொன்ன கமல். ‘உப்புமா சாப்பிட்டுக்கிட்டே கூட பிரவோக் பண்ணலாம்’ என்று போகிற போக்கில் அர்ச்சனா மீது சர்காஸ்டிக் குண்டைத் தூக்கிப் போட, சிரித்து சமாளித்தார் அர்ச்சனா.

நிக்சனின் சரணாகதி தத்துவம்

“இனிமேல் என் வாழ்க்கையிலேயே இந்த மாதிரி பேச மாட்டேன் சார்” என்று முழு சரணாகதி தத்துவத்தைப் பின்பற்றியதால் நிக்சன் தப்பினார். செய்த தவற்றுக்கு நியாயம் கற்பிப்பது போல் சிறிது பேசியிருந்தாலும் அது அவருக்கு எதிராகத்தான் மாறியிருக்கும். “வட்டார வழக்கு பேசி நானும் சினிமால நகைச்சுவை பண்ணியிருக்கேன். ஆனா சம்பந்தப்பட்டவங்களை அவமதிக்கற மாதிரி இருக்கக்கூடாது. ரசிக்கற மாதிரி இருக்கணும்” என்றார் கமல்.

வடசென்னை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வன்முறையாளர்கள், அங்கு எப்போதும் வெட்டும் குத்துமாக இருக்கும் என்பது போன்ற சித்திரத்தை பொதுப்புத்தியில் ஏற்படுத்தியதற்கு தமிழ் சினிமாவிற்கு முக்கியமான பங்குண்டு. போலவே ‘சென்னை வட்டார வழக்கும்’ மலினமான நகைச்சுவையாகவே அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு காரணங்களுக்குமான நோக்கில் கமல் மீதே நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. வடசென்னை வட்டார வழக்கை நாடகத்தனமாக பேசி கிளிஷேவாக மாற்றிய நடிகர்களில் கமலுக்கும் முக்கியமான பங்குண்டு.

கமல் பிரேக்கில் சென்ற போதெல்லாம் சபையில் பேசப்பட்ட விஷயங்களை ‘கோனார் உரை’ எழுதி அர்ச்சனாவிற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் தினேஷ். பிரேக் முடிந்துத் திரும்பிய கமல், எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் “விஷ்ணு… அது என்ன வினுஷா பிரச்னை?” என்று அதிரடியாகக் கேட்க ‘காலேஜ் டாஸ்க்கின் போது நிக்சன் ‘நோ பிரையின்ஸ்’ என்று குறிப்பிட்டதையொட்டி எழுந்த விவாதத்தில் வினுஷாவின் பிரச்னையை தான் குறிப்பிட்டதாக விஷ்ணு விளக்கம் அளித்தார். இந்தக் கேள்வியை அர்ச்சனாவிடமும் கேட்டார் கமல்.

Bigg Boss 7 Day 69

“நான் வைல்ட் கார்டுல உள்ளே வந்ததும் நிக்சன் இதைப் பத்தி என்கிட்ட கேட்டான். அதான் இப்ப சொன்னேன், அவளுக்கும் வெளில ஒரு வாழ்க்கை இருக்குன்னு” என்று மழுப்பலாகப் பதில் சொன்ன அர்ச்சனா, “கெட்டவன்ற பேர் நிக்சனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று சம்பந்தமில்லாமல் சொல்லி மாட்டிக் கொண்டார். நிக்சன் இதை மறுத்தார். யாருக்குத்தான் அப்படி காட்டிக் கொள்ளப் பிடிக்கும்? “நிக்சன்கிட்ட இதைச் சொல்லும் போது ‘கவலைப்படாத… மக்கள் மறந்துடுவாங்க’ன்னு அப்ப சொன்னீங்க. ஆனா நீங்க இன்னமும் மறக்கலை போலையே?” என்று கமல் கிடுக்கிப்பிடியைப் போட அர்ச்சனாவின் முகம் மாறியது.

“சொன்ன போது கூட தப்பா தெரியலை சார். ஆனா டாஸ்க்ல பார்த்த போதுதான் அதன் விபரீதம் தெரிஞ்சது. அந்தத் தப்பை ஆயிரம் முறை உணர்ந்துட்டேன். வெளியே போய் வினுஷா கால்ல கூட விழத் தயாரா இருக்கேன்” என்று மீண்டும் ‘சரணாகதி தத்துவத்தை’ பின்பற்றினார் நிக்சன். பிறகு கமல் சொன்னபடி வினுஷாவிடமும் சபையில் மன்னிப்பு கேட்டார்.

ஒருவர் செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பதுதான், மன்னிப்பு கேட்டதின் உண்மையான அடையாளம். மாறாக மீண்டும் அதே பிழையைச் செய்வார் எனில் அந்த மன்னிப்பு என்பது வெறும் சம்பிரதாயமான தப்பித்தல் என்றுதான் பொருள்.

அர்ச்சனாவையும் கண்டித்த கமல்

“நாலு வாரமா இல்லாத வினுஷா விஷயம் திடீர்னு எங்கிருந்து வந்தது? அது போலவே ஐஷூவோட விஷயத்தையும் திரும்ப இழுக்கறீங்க. ஒண்ணு கவனிங்க. இதை எதிர்கொள்ள அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள இல்ல. இங்க இல்லாதவங்க விஷயத்தை இனிமே பேசாதீங்க. சீட்டு சேராத போது ஜோக்கர் மாதிரி அவங்களைப் பயன்படுத்தாதீங்க” என்று கடுமையாக எச்சரித்த கமல், “உப்புமா நல்லா இருந்தா அதை மட்டுமே சாப்பிட்டிருக்கலாமே. நீங்க ஏன் அந்த கான்வர்சேஷன் உள்ளே புகுந்தீங்க?” என்று அர்ச்சனாவையும் கடிந்து கொண்டார். நிக்சனுக்கு சாதகமாக உள்ள அம்சமே, அர்ச்சனா உள்ளே புகுந்து கோபத்தைத் தூண்டி விட்டதுதான். நிக்சனே முன்வந்து பிரச்னையை ஆரம்பித்திருந்தால் வழக்கு அவருக்கு மேலதிகமாக பாதகம் ஆகியிருக்கும்.

Bigg Boss 7 Day 69

“உருவக்கேலி பண்ணாதீங்க. அது தவறான விஷயம்” என்று நிக்சனுக்கும் அறிவுறுத்தினார் கமல். “முடிஞ்சு போன விஷயத்தை மீண்டும் கிளர்றது இந்த வீட்டில் ஒரு வழக்கமா இருக்கு சார். நான் அழுதது, மெடிக்கல் இஷ்யூ போன்றவற்றையெல்லாம் சொல்லி சொல்லிக் காட்டறாங்க” என்கிற புகாரை முன்வைத்தார் அர்ச்சனா. இதுவும் தவறானதே. “ஒருத்தரோட பலவீனத்தை கண்டுபிடிச்சீட்டிங்கன்னா… அந்த இடத்துலயே குத்தி குத்தி காண்பிக்கறீங்க” என்று ஜாக்பாட் டாஸ்க்கின் போது விஜய் சொன்னது இதைப் போன்ற குத்தல்களையே.

ஆனால் கமல் இதற்கு தந்த விளக்கம் சரியானது. “உங்க மேல சொல்லப்படுவதற்கு பதில் சொல்ல நீங்க இங்க இருக்கீங்க. ஆனா அந்த ரெண்டு பேரும் வீட்ல இல்லியே. எனவே அதைப் பயன்படுத்தாதீங்க. நிக்சன் செஞ்சதை விடவும் ஒரு படி கீழானது இது. உங்க ஆட்டத்துக்கு வெளியே போனவங்களை ஊன்றுகோலா யூஸ் பண்ணாதீங்க. நியாயமான கோபத்தோட அதை எதிர்கொள்ளுங்கள்” என்று கமல் அறிவுறுத்த ‘சாரி’ என்றார் அர்ச்சனா. “நீங்களும்தான் நிக்சன். கோபத்தால் நியாயத்தை வெல்ல முடியாது. கோபம்தான் உங்களை வெல்லும்” என்று பன்ச் டயலாக்கில் அட்வைஸ் செய்துவிட்டு பிரேக்கில் சென்றார் கமல்.

“ஆண்களின் உடல் அங்கங்கள் பற்றிப் பெண்கள் பேசினாலும் அது தவறுதான்” என்று மாயாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அனன்யா. பிரேக் முடிந்து திரும்பிய கமல் “பிரேக்கில் சில விஷயங்கள் காதில் விழுந்தன. கமல் வந்து அடிக்கப் போறார்ன்னு பேசிக்கறீங்க. இது என்ன உங்க குற்றவுணர்வோட வெளிப்பாடா? அதுக்காகவா நான் ஷோவிற்கு கிளம்பி வர்றேன்?” என்று விஷ்ணு மற்றும் மாயாவை நோக்கி கேட்க இருவருமே சிரித்து மழுப்பினார்கள்.

Bigg Boss 7 Day 69

“நான் எதையோ சொல்ல எங்கேயோ முடிஞ்சிடுது” என்று சிரித்தார் விஷ்ணு. “அர்ச்சனா சொன்ன நாலு நிமிஷத் தத்துவத்தை நீங்கள் பின்பற்றுவதில்லையா?” என்று அவரை வாரினாார் கமல். “பத்து வாரமா நான் அடிவாங்கிட்டு இருக்கேன் சார்” என்று சிரித்த மாயாவிடம், “தப்பு இல்லாமலா அது நடக்கும்?” என்று அவரையும் கலாய்த்த கமல் “நான் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த, மேம்படுத்துவதற்குத்தான் முயற்சி பண்றேன். அணைக்கிற கைதான் அடிக்கும். அதுக்கு அவசியம் ஏற்படாதபடி நடந்துக்கறது உங்க கைலதான் இருக்கு” என்று அட்வைஸ் செய்தார்.

பொம்மை டாஸ்க்கில் மாட்டிய அர்ச்சனா

அடுத்ததாக பொம்மை டாஸ்க் விசாரணையை ஆரம்பித்த கமல் “நல்ல குழந்தை கையில் சுமாரான பொம்மை கிடைச்சா கூட அதை வெச்சு நல்லா விளையாடும். ஆனா சுமாரான குழந்தை கிட்ட நல்ல பொம்மை கிடைச்சா கூட ஒண்ணுமே பண்ணாது” என்று டாஸ்க்கின் சுவாரசியமின்மையைப் பற்றி்ச சுருக்கமாக விளக்கினார்.

“துப்பு துலக்கறது பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன துப்புறது?” என்று கமல் கேட்க “பொம்மை டாஸ்க்கை வெச்சு என்னைப் பழிவாங்கிட்டான் விக்ரம்” என்று பந்தை அந்தப் பக்கமாக தூக்கிப் போட்டார் விஷ்ணு. “அதுக்கு ஏன் அடக்கி வெச்ச உமிழ்நீர் மாதிரி துப்பணும். செய்யாமல் இருந்திருக்கலாம். அல்லது மென்மையா செஞ்சிருக்கலாம்” என்ற கமல், இதைச் செய்யச் சொன்ன விக்ரமை நோக்கி கேட்க “தப்புத்தான் சார். பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது அப்படிப் பண்ணிப்போம்” என்று சுமாரான விளக்கத்தை அளித்தார். “இதுக்குப் பின்னாடி ஏதாவது அஜெண்டா இருக்கா?” என்று கமல் மறுபடியும் மறுபடியும் கேட்க, விக்ரம் எதையும் சொல்லவில்லை. “அப்படியாவது பொம்மை ஆஃப் ஆகி ஆட்டத்துல இருந்து போயிடுதான்னு பார்த்தேன்” என்று முன்னர் பூர்ணிமாவிடம் விக்ரம் சொன்ன விளக்கத்தை இப்போது ஏனோ சொல்லவில்லை.

Bigg Boss 7 Day 69

“என்னை யாருமே செலக்ட் பண்ணலை சார். அப்புறம் சுரேஷ் கிட்ட கன்வின்ஸ் பண்ணிக் கொடுத்தாங்க. ஆனா அவர் எதையுமே டாஸ்க்ல பண்ணலை” என்று விசித்ரா புகார் தெரிவிக்க “பொம்மைல பேட்டரி போடலையோ?” என்று கிண்டலடித்த கமல், ஆட்டத்தை எவ்வித அக்கறையும் ஆர்வமும் இன்றி வெளியாளாக நின்று வேடிக்கை பார்க்கும் சுரேஷின் மெத்தனம் பற்றி கண்டித்தார். “வீட்ல என்ன நடக்குதுன்னே தெரியாத ஒரு ஆள் எதுக்காக ஆட்டத்துல இருக்கணும்னு மக்கள் கேட்பாங்க” என்று எச்சரித்தார். ரோபாவாக விஜய் செய்ததை பாராட்டிய கமல், ஒப்பனையில் சிரத்தை காட்டிய தினேஷையும் பாராட்டியிருக்கலாம்.

விசித்ராவை அர்ச்சனா அவமதித்த விவகாரம் வந்தது. “நான் எதுவும் பண்ணலை சார். பொம்மையே தன் கருத்தையெல்லாம் சொல்லிடுச்சு” என்று அர்ச்சனாவைப் போட்டுக் கொடுத்தார் தினேஷ். “சொல்றதையெல்லாம் சொல்லிட்டு மன்னிப்பு கேட்டது, பொம்மையா, பொம்மைக்குள் இருந்த ஆளா?’ என்று அர்ச்சனா குறித்து மறைமுகமாகக் கிண்டலடித்தார் கமல். “ஒரு ஸ்டாராவது வாங்கிடணும்ன்ற முயற்சில என் கருத்துக்களைச் சொன்னேன்” என்று அர்ச்சனா சொல்ல, “சொல்றதுக்கு நல்ல கருத்துகளே இல்லையா?” என்று மடக்கினார் கமல். “தக்காளி சட்னி நிரம்பிய பொம்மை போல. ஆளா இருந்தா ரத்தம் வரும்” என்று வார்த்தை விளையாட்டில் கமல் ஈடுபட்டது சிறப்பு.

“தினேஷ்தான் சொல்லச் சொன்னாருன்னு நெனச்சிட்டு இருந்தேன் சார். அப்புறம்தான் தெரிஞ்சது, அர்ச்சனாவே இதையெல்லாம் சொன்னா-ன்னு” என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார் விசித்ரா. “அப்ப மன்னிப்பு கேட்டது வேற படமா, நான்தான் மேட்னி ஷோவைப் பார்த்துட்டனா?” என்று கிண்டலடித்த கமல், “அப்புறமா மன்னிப்பு கேட்டீங்களே… பேசும் போதே இதுவெல்லாம் தவறா தெரியலையா?” என்று அர்ச்சனாவை மடக்கியது சரியான லாஜிக். ஆனால் இதற்கு விளக்கம் அளிக்கிறேன் பேர்வழி என்று அர்ச்சனா பேசியது ‘நுணலும் தன் வாயால் கெடும்’ விபத்தாக ஆனது.

Bigg Boss 7 Day 69

“தினேஷ் ப்ரோவிற்கு விசித்ராவைப் பிடிக்காது. இப்படி ஒவ்வொருத்தரும் தங்களுக்குப் பிடிக்காத ஆளுங்க மீது என்னை வெச்சு கருத்துகளைச் சொல்ல வெச்சுட்டாங்க” என்று அர்ச்சனா தந்த விளக்கம் அபத்தமானது. எய்தவர் வேறாக இருந்தாலும் வெறும் அம்பாக பாய்வதற்கு அர்ச்சனா என்ன ஜடப்பொருளா? வெறும் ஆயுதமா? சுயமாக யோசித்து அந்தச் சூழலை தவிர்த்திருக்கலாம். சந்தர்ப்பத்தை உபயோகித்து அவரும் தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார் என்பதுதான் இதன் பொருள்.

விஷ்ணுவை ரகளையாகக் கிண்டலடித்த கமல்

“ஒரு அப்பாவிப் பொண்ணை எப்படியெல்லாம் யூஸ் பண்ணிக்கிட்டீங்களே தினேஷ்?” என்று இதை குறும்பாக கிண்டலடித்தார் கமல். பிறகு அவர் சொன்னது முக்கியமானது. “அது குழந்தையாக இருந்தாலும் சரி. பொம்மையாக இருந்தாலும் சரி. உங்களுக்குள்ள இருக்கற வன்மம் மட்டும் குறையல. அது குறைஞ்சாதான் ஆட்டம் சுவாரஸ்யமாகும்” என்று அவர் பிரேக்கில் செல்ல சிரித்து சமாளித்தபடி அமர்ந்தார் அர்ச்சனா. மாயா குழுவிற்கு ஒரே குஷி. கைத்தட்டி மகிழ்ந்தார்கள். ஆனால் கமல் சொன்னது ஒட்டுமொத்த வீட்டிற்குமானது என்பதை மாயா குழு உணர வேண்டும்.

“எனக்கு ஆங்கிலம் தெரியலை. டாஸ்க்கை கூட புரிஞ்சுக்க முடியலை. ஞாபகம் இருக்க மாட்டேங்குது. இங்க இருக்கற பொருள்லாம் எப்படிச் செஞ்சிருப்பாங்கன்னுதான் புத்தி போகுது” என்று பரிதாபமாக அனத்திய சுரேஷிற்கு “நான் சொல்லித் தரேன்” என்று ஆறுதல் சொன்னார் மாயா. “நாமினேஷனைக் கூட மறந்து மாத்திப் போட்டு வந்துடுவேன்” என்று சுரேஷ் சொன்னது ஒருவகையில் சிரிப்பாக இருந்தாலும் சீரியஸானது. ஒரு தவறான நாமினேஷனால் ஆட்டமே மாறக்கூடும்.

Bigg Boss 7 Day 69

அகம். கமல் என்ட்ரி. “நோ பிரையின்ஸ்ன்னு நிக்சன் சொன்னது உங்களுக்குத்தான் எப்படி நம்பினீங்க விஷ்ணு?” என்று வந்தவுடனேயே விஷ்ணுவின் மீது ஒரு நகைச்சுவை பவுன்சரை வீசினார் கமல். “டாஸ்க்ல ஜெயிக்கறவங்களைத்தான் அனுப்பணும். சாப்பாடு முக்கியம்-ன்றது நிக்சனோட கருத்து. நான் எல்லோருக்கும் வாய்ப்பு தரணும்னு நெனப்பேன். அதைக் குத்திக் காண்பிச்ச மாதிரி தெரிஞ்சது” என்றார் விஷ்ணு. “திருடன்… திருடன்…ன்னு ஒருத்தர் ரோட்டில கத்தினா… என்னையா கூப்பிட்டீங்கன்னு கேப்பீங்களா?” என்று கமல் சொன்னது நகைச்சுவை சிக்ஸர்.

“அது விஷ்ணுவை சொன்னதே இல்லை சார். இருபது, இருபத்தைந்து முறையாவது அவருக்கு நான் விளக்கம் சொல்லியிருப்பேன். அவர் நம்ப மாட்டேங்கறார். நான் பொதுவாத்தான் சொன்னேன்” என்று தன் தரப்பு விளக்கத்தை முன்வைத்தார் நிக்சன். மீண்டும் விஷ்ணுவை வம்பிழுத்த கமல், “இந்த வாரம் விசித்ரா இருக்க மாட்டாங்க. எலிமினேட் ஆயிடுவாங்கன்னு எதை வெச்சு சொன்னீங்க?” என்று கேட்க “யாரு மேல நிறைய கேஸ் இருக்குன்னு பார்ப்பேன். அவங்களை ஷார்ட்லிஸ்ட் பண்ணுவேன்” என்று சமாளிப்பான சிரிப்புடன் பதில் சொன்னார் விஷ்ணு. விஷ்ணுவின் தவறான யூகங்களைப் பற்றி கமலே பலமுறை கிண்டலடித்திருந்தாலும் மனிதரின் ஆராய்ச்சி மோகம் மட்டும் போகவில்லை. தன்னையும் ஒரு பிரதீப்பாக நினைத்துக் கொண்டு விதம் விதமாக கணக்குப் போடுகிறார்.

“அது எப்படித்தான் கரெக்ட்டா கண்டுபிடிக்கறாரோ?” என்று விஷ்ணுவைக் கிண்டலடித்த கமல் “விசித்ரா சேவ்டு” என்று சொல்லி சட்டென்று விடைபெற்றார். விஷ்ணுவின் முகத்தில் அசடு வழிந்தது. விசித்ரா காப்பாற்றப்பட்ட செய்தியை மாயா குழு மிகையாக வரவேற்று கைத்தட்டி கொண்டாடியது. ஒரு காலத்தில் விசித்ராதான் மாயா மற்றும் பூர்ணிமாவிற்குப் பிடிக்காத ஆளாக இருந்தார். ஆனால் இன்றைக்கு? இது போல் எலியும் பூனையுமாக இருந்த விஷ்ணுவும் அர்ச்சனாவும் இன்று ஒரே அணியில் இருக்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவு வேகமா சுத்துது பார்த்தீங்களா?!

Bigg Boss 7 Day 69

“இந்த வாரம் நான் யோசிச்சு சில விஷயங்களைப் பண்ணியிருக்கணும்” என்று அர்ச்சனா ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்க, “என்னை நாமினேட் பண்ணிடுங்க. மண்டை சூடாகுது” என்று இன்னொரு பக்கம் அனத்திக் கொண்டிருந்தார் பூர்ணிமா.

கமல் குறிப்பிட்டது போல் இந்த சீசனில் சுவாரஸ்யம் என்பது பெரிதும் இல்லாமல் ஒருவரிடமிருந்து ஒருவர் வெளிப்படுத்தும் வன்மம், பகை, குரோதம் போன்றவைதான் அதிகமாக இருக்கின்றன. இனியாவது இதில் மாற்றம் ஏற்படுமா?

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours