புதுடெல்லி: “சினிமாவில் பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது” என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் ‘அனிமல்’ படம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “சினிமா சமூகத்தின் கண்ணாடி. நாம் எல்லோரும் சினிமாவை பார்த்து வளர்ந்தவர்கள். திரைப்படங்கள் இளைஞர்களிடையே தாக்கத்தை செலுத்தும் வல்லமை படைத்தவை. ‘கபீர் சிங்’, ‘புஷ்பா’ போன்ற படங்களின் வரிசையில் தற்போது ‘அனிமல்’ படம் வெளியாகியிருக்கிறது. என்னுடைய மகள், அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘அனிமல்’ படத்தைப் பார்க்க சென்றிருந்தார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாததால் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். சினிமாவில் பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது.
‘கபீர் சிங்’ (Kabir Singh) படத்தில் அவர் தனது மனைவியையும், சமூகத்தையும், மற்றவர்களையும் எப்படி நடத்துகிறார் என பாருங்கள். அதேபோல மோசமான பெண் வெறுப்பை கொண்டதுதான் ‘அனிமல்’ படமும். இப்படியான செயல்களை படங்கள் நியாயப்படுத்துவதுதான் கவலைக்குரிய விஷயம். பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பாக்கம் செய்யும் படங்கள் சமூகத்தின் பொதுபுத்தியில் தாக்கம் செலுத்துகின்றன.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சமூக மாற்றங்களில் பங்களிப்பைச் செலுத்தும் இதுபோன்ற சினிமாக்கள் இயக்குநர்களின் பொறுப்பு குறித்தும், அதனை முறைப்படுத்தும் அமைப்புகளின் பங்கு குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன” என்றார். மேலும், சமூகத்துக்கு நோயாக விளங்கும் இதுபோன்ற திரைப்படங்களை தணிக்கை வாரியம் எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
படத்தில் வரும் ‘அர்ஜன் வைலி’ (Arjan Vailly) என்ற பாடலையும் அவர் விமர்சித்தார். பஞ்சாப்பின் போர் கீதமான இந்தப் பாடல் ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தும்போது ஒலிக்கப்படுவதற்கு ரஞ்சீத் ரஞ்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். “முகலாயர்களுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போரிட்ட சீக்கியப் படையின் தலைமைத் தளபதி ஹரி சிங் நல்வாவின் மகன் அர்ஜன் சிங் நல்வா. சீக்கியர்களின் வரலாற்று பாடலை படத்தில் வரும் கும்பல் சண்டையின் பின்னணியில் பயன்படுத்தியிருப்பது மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்” என தெரிவித்துள்ளார்.