(பிக் பாஸ் பிரமோ வீடியோக்களுக்கு முன்னால் ‘லேபிள்’ என்றொரு வெப்சீரிஸின் விளம்பரம் வரும். அந்தத் தொடரின் மையமே இதுதான். “நான் எங்க இருந்து வெளியே வர நினைக்கிறேனோ, அங்கயே மறுபடியும் என்னைப் பிடிச்சு தள்ளாதீங்க’ என்று அதன் ஹீரோ வசனம் பேசுவான்!). வடசென்னை என்றாலே அங்கு ஒவ்வொருவரும் இடுப்பில் இருந்து கத்தியை உருவுவார்கள் என்பது தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கும் மிகையான, அபத்தமான கற்பனை. அனைத்துப் பகுதியையும் போலவே அங்கும் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். வெளியே பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தில் இருந்தாலும் பழகுவதில் பாசமானவர்கள் என்று சொல்லப்படுவதில் பெரும்பான்மையும் உண்மை இருக்கிறது. மேலும் சமூகவியல் நோக்கிலும் இதை அணுகுவதுதான் முதிர்ச்சியானது. எல்லா நிலத்திலும் அழுத்தப்பட்ட மக்களிடம் எப்போதுமே ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிரந்தரமாக இருக்கும். முன்னேறிய சமூகங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு பிரதான குழுக்களாக செயல்படும் வீடு
அதிகமாக கோபப்பட்ட நிக்சனை, விசித்ரா, விக்ரம், விஜய் உள்ளிட்டவர்கள் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தியது நன்று. ஆனால் நிக்சன் விட்ட வார்த்தைகள் நிச்சயம் அவருக்கு எதிராகத் திரும்பும். வினை விதைத்தவன் வினையறுப்பான். அர்ச்சனாவும் தகுந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நிக்சனின் கோபத்தை தூண்டி விட்டார் என்பதும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் அப்படி உணர்ச்சிகளுக்கு எளிதில் பலியாகி விடக்கூடாது என்பதுதான் இந்த ஆட்டத்தின் முக்கியமான அம்சம். ஒருவரை எப்படி சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதுதான் இந்த கேமில் உள்ள பெரிய சவால்.
‘அய்யய்யோ. சொருவிடுவேன்னு அவன் சொல்லும் போது பயமா இருந்துச்சு’ என்று நாடகத்தனமாக அச்சப்பட்டார் ரவீனா. ‘உண்மையான நிறம் வெளியே வருகிறது’ என்று தாளம் போட்டார் மணி. ‘கண்ட்ரோல் யுவர்செல்ஃப்’ என்று தினேஷ் கண்டித்தார். நிக்சன் சொன்ன வசைகளில், அர்ச்சனா கவனிக்கத் தவறிய வார்த்தைகளை பிறகு எடுத்துக் கொடுத்தார் சுரேஷ். இதிலேயே இந்த வீடு இரண்டு பெரிய குழுவாக பிரிந்திருப்பதை உணர முடிகிறது.
+ There are no comments
Add yours